சொல் பொருள்

(பெ) 1. கீரஞ்சாத்தன், ஒரு குறுநில மன்னன், 2. பாண்டியநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல், 3. சோழநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல்,

சொல் பொருள் விளக்கம்

1. கீரஞ்சாத்தன், ஒரு குறுநில மன்னன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a chieftain with the name keeranjsaaththan

a philanthropist of Pandiya country in sangamperiod

a philanthropist of chozha country in sangamperiod

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இவன் முழுப்பெயர் பாண்டியன் கீரஞ்சாத்தன். இவன் முடிவேந்தன் அல்லன் என்பார் ஔ.சு.து.தம் உரை
முன்னுரையில். இவன் பாண்டிவேந்தர்க் கீழ் இருந்த குறுநிலத் தலைவன். கீரன் என்பானின் மகன். ஆவூர்
மூலங்கிழார் இவனைப் பாடியுள்ளார் (புறம் 178)

மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணாராயினும் தன்னொடு சூளுற்று
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன்
ஈண்டோர் இன் சாயலனே – புறம் 178/3-6

இடு மணல் மிக்க முற்றத்தின்கண் புக்க சான்றோர்
அப்பொழுது உண்ணாராயினும் தன்னுடனே சார்த்திச் சூளுற்று
உண்மின் என்று அவரை வேண்டிக்கொள்ளும் பெரிய பெயரையுடைய சாத்தன்

இவன் முழுப்பெயர் ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன். சாத்தனது பெருமை முற்றும் அவனது
போராண்மையிலும், தாளாண்மையிலும், கொடையாண்மையிலும் ஊன்றி நின்றது என்பார் ஔ.சு.து.

வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/5,6

வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு
முல்லைய்யாய நீயும் பூக்கக் கடவையோ அவனது ஒல்லையூர் நாட்டின்கண்

இவன் முழுப்பெயர் சோழநாட்டுப் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன். இவனும் இவனைச் சார்ந்தோரும்
அந்நாளில் வேந்தர்க்கு மண்டிலமாக்களும் தண்டத்தலைவருமாய்த் துணைபுரிந்தனர் என்பார் ஔ.சு.து.

சிறுகண் யானை பெறல் அரும் தித்தன்
செல்லா நலிசை உறந்தை குணாது
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும – புறம் 395/18-21

சிறிய கண்ணையுடைய யானைகளையுடைய பெறுதற்கரிய தித்தன் என்பானுடைய
கெடாத நல்ல புகழையுடைய உறையூர்க்குக் கிழக்கே
நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள
அறத்தாலுண்டான புகழையுடைய சாத்தனுக்குக் கிணப்பொருநராவோம் பெருமானே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.