Skip to content
ஞாழல்

ஞாழல் என்பது பொன்னாவரசு அல்லது புலிநகக் கொன்றை மரம்

1. சொல் பொருள்

(பெ) ஞாழல் என்பது கொன்றை மர வகையுள் ஒன்று(புலிநகக்கொன்றை)

2. சொல் பொருள் விளக்கம்

  1. இது கடற்கரையில் வளரக்கூடியது.
  2. இது சிறிய இலைகளையும், பெரிய கிளைகளையும் கொண்டது.
  3. இதன் பூக்கள் வெண்சிறு கடுகு போல் சிறியனவாய் இருக்கும்.
  4. இதன் கிளைகள் மிகவும் உயரமாக நீண்டிருக்கும். பெண்கள் எட்டி மலர்களைப் பறிக்கும் அளவுக்குக் கிளைகள்தாழ்ந்திருக்கும்.
  5. இதன் மலர்கள்கொத்துக்கொத்தாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் மிக்கவை.
  6. இதன் மொட்டுக்கள் பசுமையாக இருக்கும். நன்கு மலர்ந்த மலர்கள் தினையைப் போன்று இருக்கும்.
  7. இதன் மலர்கள் பொன் நிறத்தில் இருக்கும், கிளைகள் கரிய நிறத்திலும் இருக்கும்.
ஞாழல்
ஞாழல்

ஞாழல் என்பது கொன்றைமர வகையுள் ஒன்று கடற்கானற் கழிப்பகுதிகளிலே, மிகுதியாகக் காணப் பெறுவது. புலிநகக் கொன்றை இது வென்பர். நெய்தல் நிலத்து மகளிர், இதன் நிழலிலே’ஆடியும் பாடியும் இன்புறும் வழக்கத்தினர். 

தமிழ்ப் பேரகராதி (Tamil lexicon) இதைப் பலவிதங்களில் பொருள்கொள்ளுகிறது.

1. Orange cup-calyxed brasiletto-climber wagaty. புலிநகக்கொன்றை.
2. Peacock’s crest. மயிற்கொன்றை.
3. Fetid cassia. பொன்னாவிரை
4. False tragacanth. கோங்கு.
5. Jasmine, Jasminum; மல்லிகை வகை.
6. Cinnamon, cinnamomum; கொடிவகை.
7. Saffron, bulbous-rooted plant. குங்குமம்.
8. Heart-wood; மரவயிரம்
9. Hard, solid wood; ஆண்மரம்.

ஞாழல் மலருக்குத் தரப்பட்டுள்ள அடைமொழிகள் ஞாழலின் தன்மையை உணர்த்துகின்றன.

சிறு வீ, நறுமலர், தண்ணிய கமழும், இணர் ததை, தெரியிணர், நறுவீ, பன்மாண் புதுவீ, பசுநனை, நனைமுதிர், சினைமருள் திரள்வீ, குவி இணர், தெரியிணர் ஞாழல்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Orange cup-calyxed brasiletto-climber wagaty, caesalpinia cucullata Roxb, Cassia Sophera, Senna sophera

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – நற் 191/1

சிறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் தேன் செறிந்திருந்த ஒளிரும் பூங்கொத்துக்கள்

ஞாழல் என்பது ஒரு கடற்கரைத் தாவரம். இது உயரமான புதர்வகைச் செடி என்றும், ஒரு வகைக் கொன்றை மரம்
என்றும், கொடி வகை என்றும் பல வகை விளக்கங்கள் கிடைக்கின்றன. 

இது கடற்கரையில் வளரக்கூடியது.

(எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர் – ஐங் 144/1)

இது சிறிய இலைகளையும், பெரிய கிளைகளையும் கொண்டது.

(எக்கர் ஞாழல் சிறியிலை பெரும் சினை – ஐங் 145/1)

இதன் கிளைகள் மிகவும் உயரமாக நீண்டிருக்கும்.

(ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி – அகம் 20/5)

பெண்கள் எட்டி மலர்களைப் பறிக்கும் அளவுக்குக் கிளைகள்தாழ்ந்திருக்கும்.

(கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/8)

இதன் பூக்கள் சிறியனவாய் இருக்கும்.

(சிறு வீ ஞாழல் – நற். 31/5)

இதன் மலர்கள்கொத்துக்கொத்தாக இருக்கும்.

(தெரி இணர் ஞாழலும் – கலி. 127/1)

இதன் மலர்கள் நறுமணம் மிக்கவை.

(இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் – நற் 96/1)

இதன் மொட்டுக்கள் பசுமையாக இருக்கும்.

(பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை – குறு 81/3)

நன்கு மலர்ந்த மலர்கள் தினையைப் போன்று இருக்கும்.

(நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ – குறு 397/1)

இதன் சிறிய பூக்கள் வெண்சிறுகடுகினைப் போன்று இருக்கும்.

(ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் – குறு 50/1)

இதன் மலர்கள் பொன் நிறத்தில் இருக்கும்.

(பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் – ஐங் 169/2)

இதன் மலர்கள் சிவப்பாகவும், கிளைகள் கரிய நிறத்திலும் இருக்கும்.

(செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை – அகம் 240/1)

சில பண்புகள் முரண்பாடாக இருப்பதைக் காணலாம். எனவே ஞாழலில் பல வகை உண்டு என்பது தெளிவாகிறது.

ஞாழலால் தழையாடை புனைவர். ஞாழல் மரத்தில் தாழைநார்க் கயிற்றில் ஊஞ்சல் ஆடினர். கடலாடு மகளிர் ஞாழலைக் கொய்துகொண்டு சென்று விளையாடுவர். ஞாழலில் கடற்காக்கைகள் கூடு கட்டும்.

ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி - குறி 81

சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே - நற் 31/5

கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்/தெண் திரை மணி புறம் தைவரும் - நற் 54/9,10

சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை - நற் 74/5

இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் - நற் 96/1

ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி - நற் 106/7

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் - நற் 191/1

உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்/மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் - நற் 267/4,5

சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே - நற் 311/7

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்/செவ்வி மருதின் செம்மலொடு தாஅய் - குறு 50/1,2

பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை - குறு 81/3

தண்ணிய கமழும் ஞாழல்/தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறினே - குறு 310/6,7

சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி - குறு 328/1

நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ - குறு 397/1

ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் - ஐங் 103/2

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ - ஐங் 141/1

எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை - ஐங் 142/1

எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை - ஐங் 143/1

எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர் - ஐங் 144/1

எக்கர் ஞாழல் சிறியிலை பெரும் சினை - ஐங் 145/1

எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் - ஐங் 146/1

எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் - ஐங் 147/1

எக்கர் ஞாழல் இகந்து படு பெரும் சினை - ஐங் 148/1

எக்கர் ஞாழல் பூவின் அன்ன - ஐங் 149/1

எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை - ஐங் 150/1

பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் - ஐங் 169/2

கானல் ஞாழல் கவின் பெறும் தழையள் - ஐங் 191/3

இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறை - பதி 30/1

குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் - பதி 51/5

கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு - கலி 56/2

கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என் - கலி 131/19

ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி - அகம் 20/5

செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை - அகம் 240/1

வாழலென் என்றி ஆயின் ஞாழல்/வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல் - அகம் 370/9,10

தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி - பரி 12/6

ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்/ஆன்ஏற்றுகொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு - கலி  26/4,5

தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும் - கலி 127/1

கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்/கழனி உழவர் குற்ற குவளையும் - அகம் 216/8,9

நனை ஞாழலொடு மரம் குழீஇய - பொரு 197

புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் - நற் 167/8

ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் - நற் 315/7

நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய் - குறு 318/2

பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் - அகம் 70/9

தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ - அகம் 180/12

இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் - அகம் 270/3

கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய - திணை50:49/3

பூவா இள ஞாழல் போது - திணை150:39/4

தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில் - திணை150:44/3

இடை எலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த - திணை150:58/3

ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் - மணி:8/6
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:503/1

கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை - தேவா-சம்:1819/3

குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல்
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா - தேவா-சம்:1864/1,2

செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா - தேவா-சம்:2569/3

குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் - தேவா-சம்:2710/3

முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர் - தேவா-சம்:2727/2

விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் - தேவா-சம்:2751/3

வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய - தேவா-சம்:3014/1

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் - தேவா-சம்:3563/3

வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் - தேவா-சம்:3605/3

புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் - தேவா-அப்:1156/1

முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா - தேவா-சுந்:425/3

தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் - தேவா-சுந்:720/3

பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் - தேவா-சம்:2045/2

நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில்
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு - தேவா-அப்:2803/2,3

தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1464/4

செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை - தேவா-சம்:2659/1

இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் - தேவா-சம்:2662/1

கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய் - தேவா-சம்:2911/3

ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் - தேவா-சம்:2957/1

பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே - தேவா-அப்:1269/3,4

வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் - தேவா-சம்:3778/2

கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் - தேவா-அப்:2801/2

சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் - 1.திருமலை:2 29/1

பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி - 1.திருமலை:5 93/2

நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் - 5.திருநின்ற:1 174/2

கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும் - 8.பொய்:6 4/1

தாய முன் துறை சூழல் சூழ் ஞாழலின் தாது - 4.மும்மை:5 37/4

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி பொதும்பினில் வாழும் குயிலே - நாலாயி:545/3

செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் - நாலாயி:3458/2

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே - திருப்:231/8

ஞாழல் படு சினை தோழியர் நூக்க - உஞ்ஞை:40/37

ததர் இதழ் ஞாழல் தாழ் சினை தூக்கி - மகத:9/27

கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி - புகார்:7/50

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *