சொல் பொருள்
(வி) 1. தடவிக்கொடு, 2. கோதிவிடு, 3. பூசு, 4. மீறிச்செல், 5. அடங்காமல் செல், 6. அறுத்துக்கொண்டு / உடைத்துக்கொண்டு செல், 7. நிறுத்திக்கொள், 8. மேலே செல்
சொல் பொருள் விளக்கம்
தடவிக்கொடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gently rub, run the fingers through, smear, transgress, breach, break, cut off, cease, discontinue, go beyond
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் செய்தான் அ கள்வன் மகன் – கலி 51/13-16 “நீர் உண்ணும்போது விக்கினான்” என்று சொல்ல, அன்னையும் அவனது முதுகைத் தடவிக்கொடுக்க, என்னைக் கடைக்கண்ணால் கொல்வது போல் பார்க்க, இவ்வாறு மகிழ்ச்சியான குறும்புச் செயலைச் செய்தான் அந்த திருட்டுப்பயல். எம் இல் வருகுவை நீ என பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/5,6 எமது இல்லத்துக்கு வருவாய் நீ என்று பொங்கிவரும் கூந்தலைக் கோதிவிட்டவன். பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கி செல்கென விடுமே – புறம் 279/9-11 உலறிய மயிர் பொருந்திய குடுமியில் எண்ணெயைப் பூசி இந்த ஒரு மகனை அல்லது இல்லாதவளேயாயினும் போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுக்கின்றாள் நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 20,21 நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி, தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி மேம்படு வெல் கொடி நுடங்க தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/19-21 ஏந்திய கையைச் சுருட்டிக்கொண்டு, மேலிருப்போர் வழிநடத்தும் அங்குசத்திற்கும் அடங்காமல், உயர்ந்து நிற்கும் வெற்றிக்கொடிஅசைந்தாட, அடக்கமாட்டாமற் செல்லும் அங்கு உன் களிறு கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை – பதி 84/3,4 கார்காலத்து மேகங்களின் முழக்கத்தைக் கேட்டாலும், கட்டிவைக்கப்பட்டிருக்கும் தறியின் பிணிப்பினை அறுத்துக்கொண்டு நெற்றியை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்து நடக்கத்தொடங்கும் போர்த்தொழிலில் நல்ல பயிற்சியையுடைய யானை செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை – கலி 126/3 செக்கர் வானத்தைக் கொண்ட அந்திக் காலத்தில் ஒலித்தலை நிறுத்திக்கொண்ட கூட்டமான நாரைகள் நீர் நீவி கஞன்ற பூ கமழும்_கால் நின் மார்பில் தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/10,11 நீர் மட்டத்திற்கும் மேலே நெருக்கமாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணம் பரப்பும் போது, அதை உன் மார்பின் மாலையிலிருந்து வரும் மணம் என்று இவள் நினைப்பாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்