Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. தொங்கு, 2. வீழ், மொய், 3. உண்டாகு, தோன்று, 4. மிகு, 5. விசையுடன் தாக்கு, 6. தொடு, விழு, ஒட்டிக்கொண்டிரு, 7. ஒலி, 8. பாய், வழிந்தோடு, 9. மேன்மையடை, சிறப்படை, 10. அகப்படு, சிக்கு, 11. செய், நிகழ்த்து, உண்டாக்கு, ஏற்படுத்து, தா, 12. விழு, 13. பரவு, 14. மறை, 15. அமைந்திரு, தகுதியாகு, 16. எழு, வெளித்தோன்று, 17. வைத்திரு, 18. அனுபவி, 19. தங்கியிரு, 20. பொருந்தியிரு, தன்னுள்கொண்டிரு, 21. அடை, எய்து, 22. உளதாகு, 23. நிகழ், 24. புகு, தலைப்படு, 25. இற, 26. சேர், மாட்டு, 27. தூங்கச்செல், 28. காணப்படு, 29. ஆக்கு, 30. கடன்படு, 31. விரி, பரப்பு,, 32. அகப்படுத்து, சிக்கவை, 33. உண்டாக்கு, 34. வீழ்த்து, விழச்செய், 35. கீழே (உடலை) ஒரு பரப்பின் மீது கிடத்து, 36. பூசு, 37. செல், 38. இணங்கு, உடன்படு,

2. (பெ.அ) மிகுதியான

3. (து.வி) 1. உள்ளாக்கு என்னும் பொருளில்வரும் வினையாக்கி, 2. செயப்பாட்டுத்தன்மையை உணர்த்தும் துணைவினை

4. (பெ) பள்ளம், மடு,

சொல் பொருள் விளக்கம்

(வி) 1. தொங்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hang, swarm as bees, appear, come into existence, be large, hit or strike with force, touch, fall upon, cling to, sound, exude, as must from an elephant;, be eminent, distinguished, get caught, entrapped, provide, cause to exist, do, make, effect, fall down, spread out, set disappear, be suitable, rise, appear, possess, experience, undergo, settle at the bottom, be constituted, attain, exist, happen, enter, die, fix, go to sleep, cause to appear, cook, become indebted, spread out, entrap, cause to appear, fell, cast down, lie down, smear, go, be driven, agree, consent to, extreme, intense, verbaliser of certain nouns in the sense of experience, passivizer, deep pool

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 80-82

தாழ்கின்ற மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி 

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199

ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்,

இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 93,94

கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்

இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 154

கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுகின்ற ஊரில்

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 201

வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,

பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகல் செறுவில் – பெரும் 209,210

பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,

படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 28

ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில்

தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 31

மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை

வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194

வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் வெற்றி ஓங்கும் அரசாட்சி

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/9,10

வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க

கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் – மலை 47

குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,

ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் – குறு 357/6,7

தீக்கடைகோலில் எழுப்பிய தீயினால் இடம்பெயர்ந்த நெடிய நல்ல யானை
விண்மீன் விழுவதால் ஏற்படும் சுடர்விடும் ஒளியினைக் கண்டு அஞ்சும்

மை படு மா மலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 361,362

கருமை பரந்த பெரிய மலையில், பஞ்சு போலப் பொங்கியெழுந்து,
கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,

படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை – நற் 33/1

மறைகின்ற ஞாயிறு சேர்ந்த பிளந்த வாய்ப்பகுதியையுடைய நீண்ட மலைத்தொடரின்

நீ நல்கின்
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/9,10

நீ இவளிடம் அன்புசெய்தால்
தங்குவதற்கு அமைந்த நிழல் வேறிடத்திலும் உண்டு.

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப – நற் 177/1

பரந்து எழுந்த பெரும் தீயானது காட்டினை அழிக்க,

குளிர் படு கையள் கொடிச்சி செல்க என – நற் 306/3

குளிர் என்னும் கிளிகடி கருவியை வைத்திருக்கும் கையையுடைய கொடிச்சியாகிய நீ மனைக்குச் செல்க என

கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல – குறு 224/3-5

வருத்தத்தினும், மிகுந்த வருத்தமாகிறது; கிணற்றில் விழுந்த
கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
ஊமை மகனைப் போல

பரல் அவல் படு நீர் மாந்தி – குறு 250/1

பருக்கைக் கற்களையுடைய பள்ளத்தில் தங்கியிருக்கும் நீரைக் குடித்து,

கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே
எம்மின் உணரார் ஆயினும் தம்_வயின்
பொய் படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472

சீறியாழை இயக்குவதில் கைவன்மை பெற்ற பாணனே! உன் தலைவர்
தாமே சொல்லிச்சென்ற கார்ப்பருவம் வந்து நிலைபெற்றுவிட்டது;
என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், தம்மிடமுள்ள
பொய் பொருந்திய சொற்களுக்காக வெட்கப்படவும்
செய்யாமல் இருப்பதை எண்ணி வருந்துகிறேன் நான்.

இ ஊர் மன்றத்து மடல்_ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/22,23

இந்த ஊர் மன்றத்தில் மடலேறி
உன் மேல் நிலைநாட்டுவது போல் உள்ளேன் நான், நீ எய்தும் பழியை.

என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6

என்போடுகூடிய ஊன் தடி உளதாகிய இடம் முழுதும் எங்களுக்கு அளிப்பான்

இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே – புறம் 239/20,21

நீ வாளால் அறுத்துப்போட்டாலும் போடுக அல்லது சுட்டாலும் சுடுக
நிகழும் வழி நிகழட்டும் – இந்தப் புகழை விரும்புவோன் தலையை

கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியராகி பிறர்
நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/12-14

ஆரவாரிக்கும் கிளையுடனே செயலற்று அறிவுடையோர்
தம் மெய் வாடிய பசியை உடையராய், பிறருடைய
நாட்டின்கண் தலைப்படும் போக்கையுடையராயினர் இப்பொழுது.

கொண்ட வாளொடு படு பிணம் பெயரா
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படு மகன் கிடக்கை காணூஉ – புறம் 278/6-8

வாளைக் கையில் ஏந்திப் போர்க்களம் சென்று, அங்கே இறந்துகிடக்கும் பிணங்களைப்
புரட்டிப்பார்த்துக்கொண்டே
சிவந்த போர்க்களத்தை முற்றும் சுற்றிவருவோள், விழுப்புண்பட்டுச் சிதைந்து வேறுவேறாகத் துணிபட்டு
இறந்து கிடக்கின்ற தன் மகனது கிடக்கையைக் கண்டு

பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும்
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் – பெரும் 436-440

வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின
கூடத்து எழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின்
இறப்பில் உறையும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
இனிய துயில் (நீங்கி)விரைந்தோடும்

அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடு வரை – அகம் 75/6-8

கொல்லும் புலி போலும் வலியையும் கட்டப்பட்ட கழலையுமுடைய மறவர்கள்
பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்து நிழலில் கண்படுக்கும்

கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/7,8

கூரிய உளியால் இயற்றப்பெற்ற கோடுகள் மறைந்த எழுத்துக்கள், அந்த
வழியே செல்லும் புதியர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும்

சோறு படுக்கும் தீயோடு
செஞ்ஞாயிற்று தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/7-9

சோற்றை ஆக்கும் நெருப்புடனே
செஞ்ஞாயிற்றினது வெம்மை அல்லது
வேறு வெம்மை அறியார், நின் குடை நிழற்கண் வாழ்வோர்

பெரும் பொன் படுகுவை பண்டு – கலி 64/7

பெரும் பொன் கொடுக்கும் கடன்பட்டாய், முன்னொரு காலத்தில்

வரி அதள் படுத்த சேக்கை – அகம் 58/4

புலியின் தோலினை விரித்துள்ள படுக்கையில்

மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரை படுத்த வராஅல் – அகம் 216/1,2

மீனைப் பிடிக்கும் பாணரது மகள்
தான் புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால்மீனை

கடும்பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை – அகம் 397/10,11

கடிய பெருமையையுடைய ஆண்யானை மரமசையும்படி குத்தி
பிளத்தலால் புண் உண்டாக்கிய பொரிகள் பொருந்திய அடியினையுடைய ஓமை மரத்தின்

அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் – – புறம் 19/9-12

அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடைய யானையின்
துளையையுடைய பெருங்கையை வாயுடனே துணிந்து
கலப்பையை ஒப்ப நிலத்தின் மேலே புரள
வெட்டிப் போர்க்களத்தில் வீழ்த்திய ஏந்திய வாள் வெற்றியையுடையோராய்

படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 15

கீழே கிடத்தி வைத்ததைப்போன்ற ஒரு பாறையின் பக்கத்தில்

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/12,13

பற்பல வகைகளில் பயன்படும் நறிய சந்தனக் கட்டைகள் தன்னை அரைத்துப் பூசிக்கொள்பவர்க்கன்றி,
அவை மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவை தாம் என்ன செய்யும்?

கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/1-3

உருளையையும் பாரையும் கோத்து உலகின்கண்ணே செலுத்தும்
காப்புடைய சகடம்தான் அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்
ஊறுபாடு இல்லையாய் வழியே இனிதாகச் செல்லும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல்பால் ஒருவனும் அவன் கண் படுமே – புறம் 183/9,10

கீழ்க்குலத்துள் ஒருவன் கற்றால்
மேற்குலத்து ஒருவனும் அவனிடத்தே சென்று இணங்கிநடப்பான்

வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/8

வெம்மையான பாலை வழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,

அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15

மிகவும் அரிய காவற்படுத்திவிடுவாள் அறம் கருதாத தாய்

அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஓப்பவும் படுமே – ஐங் 290

அறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால்
கனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!

கல் உடை படுவில் கலுழி தந்து – நற் 33/4

பாறையை உடைத்த பள்ளத்தில் இருக்கும் கலங்கல் நீரைத் தந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *