Skip to content

பொருள்

சீரிய வாய்த்த பொழுதுகளே அல்லது காலங்களே பருவம் எனப்படுகின்றதாம்


விளக்கம்

‘பருவ மழை’ என்பதும் ‘பருவத்தே பயிர்செய்’ என்பதும் அனைவரும் அறிந்தவை. பருவம் என்பது மழை பெய்யும் பருவமாம்.

காலச் சோளம், காலப் பருத்தி, காலமழை என்பவற்றில் உள்ள காலம் மழைக்கால மாதல் உழு தொழிலோர் நன்கறிந்தது. ‘தற்காலம்’ என்பது மழைக் காலத்தை முன்னே குறித்ததென்பது ‘தற்பாடிய தளியுணவிற்புள்தேம்ப’ என வரும் பட்டினப் பாலையால் விளங்கும்.

காரே கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என அறுவகைப் பருவமும் எண்ணியிருப்பதும், முதற்கண் ‘கார்’ இடம் பெற்றிருப்பதும் கருதத் தக்கது.

கருமுகில் திரண்டு வான்மறைய உருக்கொண்டு பொழிதலைப் ‘பருவக் கொண்மூ’ என்பர். கொண்டல் என்பதும் நீர் கொண்ட கருமுகிலையே யாம். சூற்கொண்ட மகள் மகப்பேறு உறுவது போல் சூற்கொண்ட முகில் மழைப்பேறு வழங்கி உலகத்தை ஓம்புதல் வான்பெருஞ்சிறப்பாம். இப்பருவம், இயற்கை முதிர்ந்து விளங்கித் தோன்றும் விழுப்பமிக்க தாகலின் பருவம் எனப் பெற்றதாம்.

குமரி ஒருத்தி இயற்கையின் விம்முதலால் இல்வாழ்வு ஏற்கும் பருவத்தை அடைகிறாள் என்பதற்கு அறிகுறி பருவ மடைதலாம். உழவடைக் காலம் கற்கும் காலம் ஆகியவற்றின் சீரிய வாய்த்த பொழுதுகளே அல்லது காலங்களே பருவம் எனப்படுகின்றதாம். அது நிகழ்தற்கு அல்லது அது செய்தற்குத் திரண்டு நிற்கும் முழுத்தமே பருவம் எனத் தேர்ந்ததும், முழுமதி நாளாம் முழுத்தத்தில் திருமணம் வைத்ததும் அதற்கு ‘முழுத்தம்’ எனப் பெயரிட்டதும் முந்தையோர் பருவம் போற்றிய தேர்ச்சிச் சான்றுகளாம்.

– இரா. இளங்குமரன்


தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கைவல் சீறியாழ் பாண நுமரே 
செய்த பருவம் வந்து நின்றதுவே 
எம்மின் உணரார் ஆயினும் தம்_வயின்
பொய் படு கிளவி நாணலும் 
எய்யார் ஆகுதல் நோகோ யானே - ஐங்குறுநூறு 472 

விரவு பூ பலியொடு விரைஇ அன்னை 
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி 
முருகு என வேலன் தரூஉம் 
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே - அகநானூறு 232/12-15

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *