சொல் பொருள்

(பெ) சேர அரசரின் இரு மரபினரில், ஒரு மரபினர்,

சொல் பொருள் விளக்கம்

சேர அரசரின் இரு மரபினரில், ஒரு மரபினர்,

சேர மன்னர்கள், திதியன் மரபினர், இரும்பொறை மரபினர் என இருவகைப்படுவர். அவர்களுள் இரும்பொறை மரபினரைப் பொறையன் என்று அழைப்பது வழக்கம் என்று தெரிகிறது. மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பவனே, இரும்பொறை மரபினரின் முதல்வனாதல் வேண்டும் என ஆராய்ச்சியாளர் கருதுவர். மாந்தரன் ஆண்ட நாடு, அவன் காலத்தே வாழ்ந்த பிற அரசர், அவன் பெற்ற வெற்றிகள், இன்ன பிற வரலாறுகள் எதையும் அறியம் சான்றுகள் கிடைத்தில. இவனைப்பற்றிய குறிப்புகள் பதிற்றுப்பத்து 90, அகநானூறு 142 ஆகிய பாடல்களில் கிடைக்கின்றன.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one of the two lineages of chera kings

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/12,13

அறவோர் வாழ்த்த, நன்றாக ஆண்ட
வெற்றியையுடைய மாந்தரன் என்பவனின் சிறந்த வழித்தோன்றலே!

நிறைஅரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற
குறையோர் கொள்கலம் போல – அகம் 142/4-6

நிறுத்தற்கரிய சேனையினையுடைய போர் வெல்லும் மாந்தரம்
பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச்சென்ற
வறியோரது பிச்சையேற்கும் கலம் போல

பொறையன் என்று பெயர்கொண்ட மன்னர்க்குத் தொண்டி என்பது துறைமுகநகரமாக இருந்தது

திண் தேர் பொறையன் தொண்டி – நற் 8/9

திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்

கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்
தெறல் அரும் தானை பொறையன் பாசறை – நற் 18/4,5

கடற்கரைச் சோலையைக் கொண்ட தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய
கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்

திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை – குறு 128/2

திண்ணிய தேரினைக் கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள

திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம் – அகம் 60/7

திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டிநகரைப் போன்ற எமது

பசும்பூண் பொறையன்’ என்றும் ‘வென்வேல் பொறையன்’ என்றும் போற்றப்பட்ட பொறையன்
கொல்லி நாட்டில் படை நடத்தினான். கொல்லியை நூறினான் (அழித்தான்). வென்று தனதாக்கிக்கொண்ட பின்
பொறையன் கொல்லி மலைக்கு அரசன் ஆனான்.

இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரை சால் உயர் வரை கொல்லி குட_வயின் – நற் 185/6,7

இரவலர்கள் வருத்தமின்றி ஏறுகின்ற பொறையனாகிய சேரமானின்
புகழ் பெற்ற உயர்ந்த மலையான கொல்லிமலையின் மேற்கே

நிறை_உறு மதியின் இலங்கும் பொறையன்
பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி – நற் 346/8,9

நிறைவோடு பொருந்தி விளங்கும் திங்களைப் போல ஒளிரும் பொறையனின்
மிகவும் குளிர்ச்சியுடைய கொல்லிமலையிலுள்ள சிறிய பசிய காட்டு மல்லிகையின்

பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி – குறு 89/4

பெரிய பூணையுடைய சேரனின் அச்சம் மிகுந்த கொல்லிமலையில்

களிறு கெழு தானை பொறையன் கொல்லி – அகம் 62/13

யானைகள் மிக்க படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின்

மறம் மிகு தானை பசும் பூண் பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை
மா இரும் கொல்லி – அகம் 303/4-6

வீரம் மிக்க சேனையையுடைய பசும் பூண்களையுடைய பொறையனது
மேகம் விரும்பி மழை பெய்த தெய்வம் விரும்பியுறையும் அகன்ற இடத்தினையுடைய
மிகப் பெரிய கொல்லிமலையின் உச்சியில்

துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன்
அகல் இரும் கானத்து கொல்லி போல – அகம் 338/13,14

பகைவரால் கிட்டுதற்கரிய வலியினையுடைய வென்றி பொருந்திய வேலினையுடைய சேரனது
அகன்ற கரிய காட்டினையுடைய கொல்லிமலையைப் போல

எனை பெரும் படையனோ சின போர் பொறையன்
என்றனிர் ஆயின் – பதி 77/1,2

எந்த அளவு பெரிய படையைக் கொண்டவன், சினத்துடன் போரிடும் இரும்பொறை
என்று கேட்பீராகில்,

பதிற்றுப்பத்துப் பாடல்களின் எட்டாம் பத்தில் உள்ள இந்தப் பாடல் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
என்ற சேர மன்னனைப் புலவர் அரிசில்கிழார் பாடியது.

உறல் உறு குருதி செருகளம் புலவ
கொன்று அமர் கடந்த வெம் திறல் தட கை
வென் வேல் பொறையன் என்றலின் – பதி 86/1-3

கொட்டிப்படிந்த குருதியால் போர்க்களம் புலால்நாற்றம் வீச,
பகைவரைக் கொன்று போரில் வென்ற மிகுந்த திறம் பொருந்திய பெரிய கையையும்,
வெற்றியையுடைய வேலினையும் கொண்ட பொறையன் என்று எல்லாரும் சொல்லுவதால்

சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல்
ஒய்யும் நீர் வழி கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால் அளியே – பதி 87

செல்வாயாக பாடினியே! நல்ல அணிகலன்களைப் பெறுவாய்!
சந்தனம், அகில் ஆகியவற்றின் கட்டைகளோடு பொங்குகின்ற நுரையையும் சுமந்துகொண்டு,
தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், நுரையால் வெண்மையான தலையைக் கொண்ட சிவந்த புதுவெள்ளம்
இழுத்துக்கொண்டுவரும் நீர்மேல் மிதந்து வரும் வேழக் கரும்பைக் காட்டிலும்
பல வேற்படையினைக் கொண்ட பொறையன் வல்லவன் துணைபுரிவதில்

பதிற்றுப்பத்துப் பாடல்களின் ஒன்பதாம் பத்தில் உள்ள இந்தப் பாடல்கள் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
என்ற சேர மன்னனைப் புலவர் பெருங்குன்றூர்க்கிழார் பாடியவை.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.