Skip to content
மராஅம்

மரா என்பது வெண்கடம்பு, செங்கடம்பு

1. சொல் பொருள்

1. (பெ) 1. மராம், வெண்கடம்பு, செங்கடம்பு; பார்க்க : மரவம்.

 2. (பெ.அ) 1. பழகாத,  2. இனத்தோடு மருவாத,

2. சொல் பொருள் விளக்கம்

செங்கடம்பும் வெண்கடம்பும் மரா அம் அல்லது மரவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டன. தாவரவியல் அறிஞர்கள் ஐந்து வெவ்வேறு தாவரங்களை கடம்ப மரத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்

பாலை நிலத்தது; உறுதியான வலுவான பெரிய மரம்; அடிப்பகுதி நன்கு திரண்டு, கருத்தது; பூக்கள் பந்து போன்ற, சிவந்த காம்பு கொண்ட மஞ்சரியில் வலஞ்சுழியாக அமைந்தவை; பூக்கள் வெள்ளிய மழைத்துளி போன்று வெண்மையானவை; மணமுள்ளவை; கூந்தலில் சூடப்பட்டவை; வேனில் காலத்தில் தோன்றுபவை. எனவே, தமிழிலக்கிய அடிப்படையில் காணும்போது மராஅம் (மரவம், மரா) என்பது, மித்ரகைனா பார்விஃபோலியாவின் தற்காலத் தாவரவியல் அறிஞர்களின் விவரிப்போடு நன்கு பொருந்திப்போகிறது.

  • சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும்
  • மணம் மிக்கது
  • பூ வலமாகச் சுழன்றிருக்கும்
  • பருந்து இருக்கும் அளவுக்கு உயரமானது
  • ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Small Indian oak, Barringtonia acutangula

untrained (elephant)

(elephant) not joined with its herd

Neolamarckia Cadamba, Haldina Cordifolia, Barringtonia acutangula

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மரா
மராம்
இந்த வெண்கடம்பு மலர் மாலையினைப் பலராமன் தன் கழுத்தில் சூடியுள்ளார்.

அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின்
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி – பரி 15/19,20

பாம்பாய் நிமிர்ந்து நிற்கும் மென்மையான தலைகளைக் கொண்ட ஆதிசேடனின் அவதாரமாகிய பலராமன்
மார்பில் உள்ள
வெண்கடம்பு மலர் மாலையைப் போன்று மாட்சிமை தோன்றக் காணப்பட்டு,

மராமரத்தின் அடிமரம் வளைவுகள் இன்றி செவ்விதாக இருக்கும்.

இலையுடை நறும்பூ
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 201,202

இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்
செவ்விய காலினையும் உடைய மராத்திடத்தனவாகிய வெள்ளிய கொத்துக்களை நடுவே வைத்து

மராமரத்தின் பூக்களில் தேன் மிகுதியாக இருக்கும்.

தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் – மலை 428

தேன் உண்டாக மலர்ந்த மராமரத்தின் மென்மையான பூங்கொத்தும்,

நெடுவழிகளிலும், ஊர் மன்றங்களிலும் உள்ள மரா மரங்களின் அடியில் தெய்வங்களை வைத்து வணங்குவர்

கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 395,396

மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் – குறு 87/1

மரா மரம் முதுவேனிலில் இலையுதிர்த்துக் குறைவான இலைகளைக் கொண்டிருக்கும்
(leafless for a period around June).
அதனால் அந்த மரம்தரும் நிழல் வரிவரியாக இருக்கும்.

புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் – அகம் 3/11

குறைந்த இலைகளை உடைய மரா மரங்களை உடைய அகன்ற நீண்ட நெறியை,

செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் – ஐங் 381/2

வெண்கடம்பு மரத்தின் பூ வலப்பக்கமாகச் சுழித்திருக்கும்.

சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும் – குறு 22/3,4

மலைப்பக்கமானது தனக்கு அழகாகக் கொண்ட வலமாகச் சுரித்த வெண்கடம்பு மலரையுடைய
வேனில்காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில் மணக்கும்

வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ – அகம் 83/1

வலமாகச் சுரித்த வெண்கடம்பினது சுரமெல்லாம் கமழும் புதிய பூக்களை

அவரோ வாரார் தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே – ஐங் 348

அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
வலமாகச் சுழித்திருக்கும் மராமரத்துப் பூக்களை மேற்பகுதியில் பரப்பிக்கொண்டு, நம்முடைய
மணங்கமழ்கின்ற குளிர்ந்த பொழில் மலர்ந்து காட்சியளிக்கும் நேரம்

வெண்கடம்பு மலர்கள் வெயில் கதிர்கள் போல் விரிந்திருக்கும்.
சுண்ணாம்பைச் சுற்றிலும் ஊற்றிவிட்டதைப் போலவும் இருக்கும்.
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து – அகம் 317/15

வெயில் போலும் ஒளிபொருந்திய மலர்கள் செறிந்த மராமரத்திலிருந்து

வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2

வெள்ளிய
சுண்ணாம்பு பரந்திருந்தாலொத்த அதன் பலவாய பூக்கள்

மராமரத்தின் இன்னொரு வகையானது செங்கடம்பு மரம்.
தழைக்கின்ற காலத்தில் இது செறிவான இலைகளையுடையது. இதன் பூக்கள் உருண்டையாக இருக்கும்.

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 10,11

இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்
தேர்உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும்

மரா என்ற செங்கடம்பு மரத்தின் பூக்கள் நெருப்பைக் கக்குவது போல் இருக்கும்.

எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து – மலை 498

நெருப்பைக் கக்கியது போன்ற பூப்பூத்த கிளைகளையுடைய மரா மரத்தில்,

குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/7,8

பயம்பில் பிடித்த பழகாத யானைகளை
உரிய மொழியால் தொழிலை உணர்த்தும் சிறு பொழுதல்லது

மராஅ யானை மதம் தப ஒற்றி – அகம் 18/4

இனத்தோடு மருவாத ஒற்றைக் களிற்றியானையை அதன் மதம் கெட மோதி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *