Skip to content

சொல் பொருள்

(வி) 1. நீங்கு, 2. தவிர், விலகு, 3. பண்டமாற்றாக வில், 4. வேறுபடு, 5. பின்னிடு, பின்வாங்கு, 6. இடம் வேறாகு, 7. உரு, தோற்றம், தன்மை ஆகிய ஒன்றில் வேறாகு,

2. (பெ) 1. மறுதலை, எதிர்ப்பக்கம், 2. மாறுபாடு, பகை, 3. மாறானது, ஒவ்வாதது, 4. கூற்று, பதில்,  5. ஒரே ஆள்/பொருள் இரண்டு செயல்களை மாறிமாறிச் செய்வது, 6. வற்றி உலர்ந்த முட்கள்,

3. (இ.சொ) இடைச்சொல்,

சொல் பொருள் விளக்கம்

நீங்கு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cease, abstain, refrain, sell in exchange, become changed, altered, withdraw, retreat, have a change of place, be transformed, converted, opposite side, enmity, that which is not acceptable, that which is unsuitable, statement, reply, one person or object, doing two things one after another continuously, Do something in turns, alternate, dry thorn, a particle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவன் – குறு 49/3,4

இப் பிறவி நீங்கப்பெற்று இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்,

தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி – பட் 3-6

தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழையைப் பெய்தலைத் தவிர்ந்து
மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற),
(குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்)

உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனி சென்றனள் – குறு 269/5,6

உப்பை விற்று அதற்கு மாற்றாக வெண்ணெல் வாங்கி வருவதற்காக
உப்பு விளையும் உப்பளத்திற்குச் சென்றாள்

புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 159-163

(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்,
சிறிய குழை அசைகின்ற காதினையும், மூங்கில் போன்ற தோளினையும்,
குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்,
மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி,

விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 170,171

முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து,
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம் – நற் 164/6-10

செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலை வழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னிட்டுத் திரும்பிச்செல்லும் பாலைவழியில்

ஒண் பொறி கழல் கால் மாறா வயவர் – பதி 19/3

ஒளிரும் புள்ளிகளையுடைய கழல் அணிந்த கால் முன்வைத்ததைப் பின்னால் எடுக்காத வீரர்கள்

நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின் அகன்று மாறி
—————– ———————————–
நல் புறவின் நடை முனையின்
சுற வழங்கும் இரும் பௌவத்து
இறவு அருந்திய இன நாரை – பொரு 197-204

தளிர்விட்ட ஞாழலோடு, (ஏனை)மரங்களும் கூட்டமாய் உள்ள
அந்நாட்டை வெறுத்தனவாயின், அவ்விடத்தைவிட்டு அகன்று மாறிப்போய்,
——————————- ———————————————-
நல்ல முல்லைக் காட்டில் சென்றும் (அந்நில ஒழுக்கத்தையும்)வெறுத்தனவாயின்,
சுறாமீன் திரியும் கரிய கடலில்
இறவினைத் தின்ற திரண்ட நாரைகள்

பல் பூ செம்மல் காடு பயம் மாறி
அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு – பதி 30/26,27

பலவகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக்கிடக்கும் காடுகளின் பயன்படும் தன்மை மாறிப்போய்,
செவ்வரக்கு போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மண்மேடுகளைக் கொண்டு,

ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22

வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம் – நற் 164/6-10

செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னிடும் பாலைவழியில்

புறக்கொடுத்தல் என்பது முதுகாட்டிச் செல்லுதல். மாறு புறக்கொடுத்தல் என்பது அதன் மறுதலை. அதாவது,
முதுகைக் காட்டாமல் எதிரில் பார்த்தவாறே சிறிது சிறிதாகப் பின்னாக அடியெடுத்து வைத்துச் செல்லுதல்

மாறு புறக்கொடுக்கும் (நாற்றம் பொறாது) பின்னே சென்று நிற்கும் – ஔவை.சு.து. உரை

மாறு – ஏதுப்பொருள்பட வந்த இடைச்சொல் என்பர் ஔவை.சு.து. தம் விளக்கவுரையில்.
வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் இதனைக் காரணப் பொருள் உணர்த்தும்) இடைச்சொல்,
a particle which implies reason என்பார்

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரி பழம் கயிறு போல – நற் 284/9,10

ஒளிவிடும் ஏந்திய கொம்புகளைக் கொண்ட யானைகள் ஒன்றோடொன்று மாறாகப் பற்றி இழுத்த
தேய்ந்த புரிகளைக் கொண்ட பழைய கயிற்றினைப் போல – பின்னத்தூரார் உரை
களிறு மாறு பற்றிய – இரண்டு களிறுகள் இருதலையும் தனித்தனியே பற்றி ஈர்த்தலால்

ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 63-65

பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்,
கண்ணுக்கு அழகான கண்ணியினையும் உடையானும் ஆகிய கடிய தேரினையுடைய பாண்டியனின்

மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 62

தன் அறிவிற்கு மாறானவற்றை நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய

இ வையை யாறு என்ற மாறு என்னை கையால்
தலை தொட்டேன் தண் பரங்குன்று – பரி 6/94,95

“இந்த வையை ஆறு என்ற கூற்று எதனால்? என் கையால்
உன் தலையைத் தொட்டுக் கூறுகிறேன், குளிர்ந்த திருப்பரங்குன்றத்தின் மீது ஆணை”

அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/5,6

நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க

நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர
உண்கும் – புறம் 125/2-4

நெருப்பு தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய நிணம் அசைந்த கொழுவிய தடிகளை
பெரிய உடலிடத்தையுடைய கள் வார்ந்த மண்டையொடு முறை முறையாக ஒன்றற்கொன்று மாறுபட
உண்பேமாக

பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் – புறம் 359/1

முற்றவும் கெட்டுத்தேய்ந்தழிந்த பல முட்கள் கிடக்கின்ற பக்கத்தில்

மாறு வற்றியுலர்ந்த முட்கள் – ஔவை.சு.து. உரை விளக்கம்

அம்ம வாழி தோழி நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன்
இன் இனி வாரா மாறு-கொல்
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/3

தோழியே கேள்! நம் ஊருக்கு
அடுத்தடுத்து வந்து நம்மோடு தங்கும் நறிய குளிர்ந்த மார்பினையுடையவன்
இப்போதெல்லாம் வருவதில்லையாதலாலோ என்னவோ
சிலவாய் ஒழுங்குபட்ட கூந்தலையுடைய என் நெற்றியில் பசலை பாய்ந்தது.

மாறு – ஏதுப்பொருட்டாகிய ஓர் இடைச் சொல் – பொ.வே.சோ. உரை விளக்கம்
(பார்க்க : 2.1)

அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/10,11

அன்னையானவள் எடுப்பித்த முருகவழிபாடு உன்
பொன்னைப் போன்ற பசலைக்கு பயன்படாததால்

மாறு – ஏதுப்பொருள்பட வந்ததோர் இடைச்சொல். ஔவை.சு.து உரை விளக்கம்

சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/12

சிறந்த தந்தையின் பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் –

மாறு – மூன்றனுருபின் பொருள்படுவதோர் இடைச்சொல். பின்னத்தூரார் உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *