சொல் பொருள்
(பெ) வளைவைச் சரிசெய்யும் அமைப்பு,
சொல் பொருள் விளக்கம்
வளைவைச் சரிசெய்யும் அமைப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the structure for straightening a bent rod
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/5-7 போரில்பகைவரை மேற்செல்லாதவாறு தடுத்து, தான் முன்னேநின்று வாளால் வெட்டி வீழ்த்தின களிறாகிய பிணத்தினது கொம்புகளையே அமைப்பாகக் கொண்டு கோணிய கூரிய வாளை நிமிர்த்துக்கொண்டு வாள் திரிந்ததாயினும் அதன் வாய் மடியாமையின் எயிற்றின் இடையே தொடுத்து வளைவு போகத் திருத்தினான் என்பர் என்கிறார் ஔவை.சு.து. அவர்கள். அதாவது, போரில் யானையின் துதிக்கையை வெட்டி யானையை வீழ்த்திய வீரனின் வாள் வளைந்துவிட்டது. வளைந்த வாளை, விழுந்துகிடக்கும் யானையின் இரண்டு தந்தங்களுக்கு நடுவே செருகி, அந்த வாளின் வளைவைச் சரிசெய்கிறான் அந்த வீரன். எயிறு என்பது இங்கே யானையின் தந்தங்கள். வளைந்து போன நீண்ட இரும்புக் கம்பிகளைச் சரிசெய்வதற்காக, நட்டுக்குத்தாக இறுக்கப்பட்ட இரண்டு சிறிய கம்பி அல்லது முளைகளுக்கு நடுவே அந்தக்கம்பியைச் செருகி கம்பியின் வளைவினை நிமிர்ப்பார்கள்.இந்த அமைப்பே இங்கு மிறை எனப்படுகிறது எனலாம். ச.வே.சு அவர்கள் மிறை என்பது தீட்டுப்பலகை என்பார். வாளைத் தீட்டிக் கூர்மையாக்குவது தீட்டுப்பலகை. அந்தத் தீட்டுப்பலகையின்மீது வாளை வைத்து சம்மட்டி அல்லது சுத்தியலால் தட்டி வளைவை எடுப்பார்கள். இங்கு யானையின் கொம்புகளின் மீது வாளை வைத்து எதனாலோ அடித்து வாளின் நெளிவைச் சரிவெய்வதாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே படத்தில் காட்டியவாறு, வளைவைச் சரிசெய்யும் இரண்டு சிறிய கம்பிகளைக் கொண்ட அமைப்பு என்பதே மிறை என்பதற்கான பொருள் எனக் கொள்ளலாம். படத்தில் உள்ள யானையின் துதிக்கையை நீக்கிவிட்டுப் படத்தைப் பாருங்கள். அதுதான் வெட்டப்பட்டுவிட்டதே! யானையின் தந்தங்களுக்கிடைய சிவப்பாகக் காட்டப்பட்டுள்ளதுதான் வீரனின் வாள். ஔவை.சு.து. அவர்கள் மிறை என்பதற்கு வளைவு என்று பொருள்கொள்வார். தமிழ்ப்பேரகராதியும் அவ்வாறே கொள்கிறது. ஒரு கை இரும்பிணத்து எயிறு மிறை ஆக திரிந்த வாய் வாள் திருத்தா , என்பதில் மிறை என்பதனை எயிறு என்ற சொல்லுடன் இணைத்து மேற்கூறிய விளக்கத்தில் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஔ.சு.து. அவர்கள் இதனை, ஒரு கை இரும் பிணத்து எயிறு, மிறையாக திரிந்த வாய் வாள் திருந்தா எனப் பிரித்து, மிறையாக என்பதனை வாளுக்கு ஏற்றிச் சொல்வார். அவர் கூற்றின்படி, களிறாகிய பிணத்தினது கோட்டிடையே வளைவாகக் கோணிய கூரிய வாளை நிமிர்த்திக்கொண்டு என்று அவரின் உரையில் காண்கிறோம். இனி, கம்பராமாயணம், பாலகாண்டத்தில் மிறை என்பது ஒரு வினைச்சொல்லாக வருகிறது. ஓடின அரக்கரை உருமின் வெங் கணை கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று ஆடின – கம்ப – பாலகாண்டம் – 43 பயந்து ஓடிய அரக்கர்களை; அவர்களைக் கொல்லுமாறு ராமபிரானால் ஏவப்பட்ட கொடிய அம்புகள்; உரிய இலக்கைப் போய்ச் சேர்ந்தன; அவர்களது குறையுடல்களான கவந்தங்கள் விறைத்து நின்று ஆடலாயின; இங்கே மிறைத்து என்ற சொல்லுக்கு விறைத்து என்று பொருள்கொள்ளப்பட்டுள்ளது. விறைத்தல் என்பது வளைவு இல்லாமல் நேராக நிமிர்ந்திருத்தல். எனவே, மிறை என்ற பெயர்ச்சொல் வளைவு இல்லாமல் நேராக நிமிர்த்தும் ஓரமைப்புக்குத்தான் பொருந்தி வரும். மிறை என்ற வினைச்சொல்லுக்கு, துன்புறுத்துதல், விறைத்தல். மிடுக்காயிருத்தல், துன்பப்படுதல். பாடுபடுதல் என்ற பொருள்களே பேரகராதியில் உள்ளன. வளை(த்)தல் என்ற பொருளில்லை. ஆனால் மிறை என்ற பெயர்ச்சொல்லுக்கு மட்டும் அச்சம், குற்றம், வருத்தம், வேதனை, அரசிறை ஆகிய பொருள்களோடு வளைவு என்ற ஒரு பொருளையும் சேர்த்துக்கொள்கிறது. இது பொருத்தமானதாகத் தெரியவில்லை. யானையின் துதிக்கையை வெட்டிய வாள் வளைந்தபோது, இறந்து விழுந்த யானைக் கொம்புகளிடையே வாளைக் கொடுத்து நிமிர்த்திய காட்சியைப் போலவே சீவக சிந்தாமணியிலும் இரண்டு காட்சிகள் வருகின்றன. அங்கே மிறைக்கொளி திருத்தினான் என்ற தொடருக்கு வளைவினைத் திருத்தினான் என்றே உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர். அவ்விடங்களிலும் மிறைக்கொளி என்ற தொடருக்கு மிறையாகக் கொண்டு என்று பொருள் கொள்வது சிறப்பாகத்தெரிகிறது. புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம் கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள் வேல் மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே – சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – 284 குஞ்சரம் குனிய நூறி தடாயின குருதி வாள் தன் நெஞ்சகம் நுழைந்த வேலை பறித்து வான் புண்ணுள் நீட்டி வெம் சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு அஞ்சி மற்ற அரசர் யானை குழாத்தொடும் இரிந்திட்டாரே – சிந்தாமணி – மண்மகள் இலம்பகம் – 2293
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்