Skip to content

சொல் பொருள்

விடியல், வைகறைக் காட்சிகள்.

சொல் பொருள் விளக்கம்

விடியல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

daybreak

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 72-76

கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த
முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில் துயில்கொண்டு, விடியற்காலத்தே,
தேன் நாறுகின்ற நெய்தல் பூவை ஊதி, ஞாயிறு வீழ
கண்ணைப் போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும்

பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – மது 673

பொறிகளுள்ள மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ,

இரவு தலைப்பெயரும் ஏம வைகறை – மது 686

இராக்காலம் தன்னிடத்தினின்றும் போகின்ற (எல்லாவுயிர்க்கும்)பாதுகாவலாகிய விடியலில்,

வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல்
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – மலை 171-173

மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவைக்
குறைவு இல்லாமல் குடித்து, (அதன்)நறுமணத்தில்(=களிப்பில்) மகிழ்ந்து, விடியற்காலையில்,
பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி,

அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட – நற் 247/3-5

மிகுந்த மழை பொழிந்த இனிய குரலையுடைய மேகம்
இரும்பு வில்லினால் அடிக்கப்பட்ட பஞ்சைப் போல் ஆகி, விடியற்காலையில்
உச்சி உயர்ந்த நெடிய மலையில் தவழும் நாடனே

திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி வைகறை
கடல் மீன் தந்து கானல் குவைஇ – நற் 388/4-6

திண்ணிய படகுகளையுடைய பரதவர், ஒளிரும் விளக்குக்குகளைக் கொளுத்திக்கொண்டு
நள்ளிரவில் மீன்வேட்டைக்குச் சென்று, அதிகாலையில்
தாம் பிடித்த கடல் மீன்களைக் கொண்டுவந்து, கடற்கரைச் சோலையில் குவித்து

குக்கூ என்றது கோழி அதன்_எதிர்
துட்கென்றன்று என் தூ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157

குக்கூ என்று கூவியது கோழிச்சேவல்; அதைக் கேட்டு
துட்கென்றது என் தூய்மையான நெஞ்சம்;
எனது தோளைத் தழுவிக்கிடக்கும் காதலரைப் பிரிக்கும்
வாளைப் போன்ற வைகறைப் பொழுது வந்துவிட்டது என்றே!

வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3

வைகறைப் பொழுதில் மலரும் நெய்தல் பூவைப் போல

ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த_கால்
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் – கலி 38/10-12

கடப்பதற்கு அரிய வழி என்று கருதாமல், கருநாகங்களுக்கும் அஞ்சாமல் நீ இவளைக் காண வந்தபோது,
நீர் இல்லாத நிலத்தில் பயிர் வாடுவதுபோல் வாடிக்கிடந்தவள், விடியற்காலையில்
மழையைப் பெற்ற நிலத்தைப் போல வனப்புறுவாள்

அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் – கலி 52/22,23

அதனால், அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி
மணம் பேசி முடிக்க வேண்டும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *