Skip to content

சொல் பொருள்

(வி) 1. புதைபடு, அமிழ், உள்ளிறங்கு, 2. பதி, அமுக்குண்ணு, 3. இறுக்கு, 4. அமிழ், மூழ்கு,

2. (வி.எ) ஆழ்ந்து,

3. (பெ) கிழங்கு

சொல் பொருள் விளக்கம்

1. புதைபடு, அமிழ், உள்ளிறங்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sink, be immersed, go down, become pressed, be impressed, press close, hold tight, sink, be immersed, drowned, deeply, root

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும்
வால் உளை பொலிந்த புரவி
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே – நற் 135/6-9

பல காடுகளைக் கடந்த வருத்தத்தினால் வலிகுன்றிய ஓட்டத்தையுடைய,
முழங்குகின்ற கடல் அலைகள் ஒதுக்கிய புது மணலில் அழுந்தியதால் சுழலும்
வெண்மையான தலையாட்டம் பொலிந்த புரவி கட்டப்பட்ட
தேரினையுடையவர் நம்மோடு சிரித்து மகிழ்வதற்கு முன்பு

நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த
கூர் மதன் அழியரோ – அகம் 212/20,21

மாண்புற்ற நீர்மையையுடைய வேல் நின் மார்பிலே தைத்து அழுந்திட
நினது செருக்கு அழியப்பெறுவாயாக

அவரை
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை – புறம் 77/10-12

அவரை
இறுகப் பிடித்து பரந்த ஆகாயத்தின்கண்ணெ ஒலி எழ
கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணேபொருந்தக் கொன்றதற்கு

பெரும் பொளி வெண் நார் அழுந்து பட பூட்டி – அகம் 83/6

பெரிதாக உரித்த வெள்ளிய நார்க்கயிற்றால் (அக் கன்றினை) அழுத்தம்பெறக் கட்டி
– நாட்டார் உரை

மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/40,41

நீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை ஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட,

அழுந்து பட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/1,2

ஆழமாக வேர் பதிந்துகிடக்கும், பெரிய குளிர்ந்த குன்றத்திலுள்ள
தழைத்து வளர்ந்த ஈத்த மரங்களையுடைய காற்று வீசும் பாலை நிலத்தில்
– ஆழ்ந்து என்பது அழிந்து என வந்தது – ஔ.சு.து.உரை, விளக்கம்

அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல் – மலை 219

கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் மலையெருக்கு நெருங்கின பக்கமலையில்
– அழுந்து – கிழங்கு – ஆகுபெயர் – பொ.வே.சோ.உரை, விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

2 thoughts on “அழுந்து”

  1. அழுந்து பட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து – நற்றிணை 2
    குளிர்ந்த குன்றத்தில் …… பாலை நிலத்தில்….
    என்று பொருள் சொல்லப் பட்டுள்ளது. குளிர்ந்த நிலம் பாலை இல் சேருமா? சற்று விளக்க முடியுமா🙏🏻

    1. பாலைத்திணைப் பாடலில் செழிப்பு, குளிர்ச்சி ஆகியவற்றைக் காட்டும் நோக்கம் என்ன?

      உடன்போக்கில் செல்லும் காதலர்கள், யாரும் எதுவும் தடைசெய்ய முடியாத ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைக்குச் சென்றுவிட்டனர். அளவற்ற மகிழ்ச்சி பெருகுகிறது. அவர்களின் அகச்சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் கவிஞர் புறச்சூழலில் இயற்கையின் செழிப்பையும் குளிர்ச்சியையும் இனிமைகளையும் காட்டுகிறார்.

      http://www.tamilvu.org/ta/courses-degree-d011-d0111-html-d01111qa-18528

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *