Skip to content

1. சொல் பொருள்

(பெ) சங்ககாலச் சிற்றரசன், வள்ளல்,

3. சொல் பொருள் விளக்கம்

வாட்டாற்று எழினியாதனை, மாங்குடி கிழார் பாடியுள்ளார். சோணாட்டு வாட்டாற்றுத்‌ தலைவன்‌. வேல்‌ வீரன்‌: மெலிந்தோர்க்குத்‌ துணைவனாகவும்‌, ஆதரவற்றோர்க்கு ஈண்பனாகவும்‌ விளங்கி அறிவுரை வழங்கியவன்‌. வருவோர்க்கு வரையாது: வழங்கிய வள்ளல்‌.

எழினியாதன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். வாட்டாற்று எழினியாதன் எனப் போற்றப்படுகிறான். இவன் பெயர் ஆதன் என்றும், இவன் தந்தை பெயர் எழினி என்றும் ஔவை.சு.து.அவர்கள் தம் உரையில் குறிப்பிடுகிறார். வேளிர் குடியைச் சேர்ந்தவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் வாட்டாறு என்னும் ஆற்றங்கரையில் இருந்த வாட்டாறு என்னும் ஊரில் வாழ்ந்தவன்.

இந்த எழினி தலையாலங்கானதுப் போரில் நெடுஞ்செழியனுக்குத் தோற்றோடியவர்களுள் ஒருவன் என்பார் ஔவை.சு.து.அவர்கள். ஆனால் எழினியாதன் நெடுஞ்செழியனோடு நட்புக் கொண்டு வாட்டாற்றில் அரசுகட்டில் ஏறினான் என்பார் ஔவை.சு.து. இந்த நெடுஞ்செழியனைப்பற்றி மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி கிழார் மருதனார் இந்த எழினியாதனைப் பற்றியும் பாடியுள்ளார்.

மொழிபெயர்ப்புகள்

4. ஆங்கிலம்

a chieftain, philanthropist of sangam period

5. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரால் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து
நெடுநீர்தொகூஉம் மணல்தண்கால் 5

மென்பறையாற் புள்இரியுந்து
நனைக்கள்ளின் மனைக்கோசர்
தீந்தேறல் நறவுமகிழ்ந்து
தீங்குரவைக் கொளைத்தாங்குந்து
உள்ளிலோர்க்கு வலியாகுவன் 10

கேளிலோர்க்குக் கேளாகுவன்
கழுமிய வென்வேல் வேளே
வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
கிணையேம் பெரும
கொழுந்தடிய சூடு என்கோ? 15

வளநனையின் மட்டுஎன்கோ?
குறுமுயலின் நிணம்பெய்தந்த
நறுநெய்ய சோறுஎன்கோ?
திறந்து மறந்து கூட்டுமுதல்
முகந்துகொள்ளும் உணவுஎன்கோ? 20
அன்னவை பலபல . . .
. . . . வருந்திய
இரும்பேர் ஒக்கல் அருந்திஎஞ்சிய
அளித்துவப்ப ஈத்தோன் எந்தை
எம்மோர் ஆக்கக் கங்குண்டே; 25

மாரிவானத்து மீன்நாப்பண்
விரிகதிர வெண்திங்களின்
விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை!
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரைசால் நன்கலன் நல்கி 30

உரைசெலச் சுரக்கஅவன் பாடல்சால் வளனே! – புறம் 396/13,14

நீரில் மீன்கள் உலாவித் திரியும்; நீரின் மேல் மகளிரின் கண்போன்ற பூக்கள் மலர்ந்திருக்கும்; கழிகளால் சூழப்பட்ட வயல்களில் உள்ள பறவைகள் மெல்லிய பறையின் ஓசையால் ஓட்டப்படும்; நீர் மிக்க கடலலைகள் மணலை அள்ளித் தூவும் குளிர்ந்த காற்றால் மெல்லிய இறகுகளையுடைய புள்ளினங்கள் அங்கிருந்து பறந்து செல்லும்; மலர்களிடத்திலிருந்து பெற்ற கள் நிறைந்த மனைகளையுடைய கோசர் என்பவர்கள் இனிய கள்ளின் தெளிவை உண்டு மகிழ்ந்து இனிய குரவை ஆடும் இடத்தில் பாடல்கள் பாடப்படும்; நீர்வளம் மிகுந்த வாட்டாறு என்னும் ஊரின் தலைவனாகிய எழினியாதன் ஊக்கம் இல்லாதவர்க்கு ஊக்கம் அளிப்பவன்; உறவினர் இல்லாதார்க்கு உற்ற உறவினன் ஆவன். அவன் பிறபடையோடு கலந்த வெல்லும் வேற்படையையுடைய வேளிர் தலைவன். நாங்கள் அவனுடைய பொருநர். அவன் எமக்கு அளித்த கொழுமை நிறைந்த சூட்டிறைச்சியைச் சொல்வேனா; வளமான மலரினின்று இறக்கிய மதுவைச் சொல்வேனா; குறுமுயலின் தசையோடு கலந்த மணம் கமழும் நெய்ச் சோற்றைச் சொல்வேனா: திறந்து மூட மறந்த நெற் கூட்டிலிருந்து நாங்கள் எடுத்துக்கொண்ட உணவுப் பொருள்களைச் சொல்வேனா; அவை போன்றவை பலபலவாம்; என்னுடைய பெரிய சுற்றத்தார் உண்டதுபோக உணவு எஞ்சுமாறு, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உணவுப் பொருள்களை அளித்தான். எம்மைப் போன்றவர் அவனிடம் பெற்ற செல்வத்துக்கு அளவே இல்லை. மேகங்கள் தவழும் வானில் விண்மீன்களின் இடையே திகழும் திங்களைப் போல் அவனுடைய நல்ல புகழ் நிலைபெற்றிருக்குமாக. நாள்தோறும் நாங்களும் எம்மைப் போன்றவர்களும் வாழ்த்திப் பாராட்டுமாறு களிற்று நிரைகளையும் நல்ல அணிகலன்களையும் வழங்கி அவன் புகழ் சிறப்பதாக. புலவர் பாடும் புகழுடைய அவன் பெருஞ்செல்வம் மேலும் பெருகுவதாக.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *