வேளிர்குலத் தோன்றலாகிய எவ்வி பறம்புமலைத் தலைவனாகிய வேள் பாரி பிறந்த குடிக்கு முதல்வன். இவனது ஊர் நீடூர் என்பது. இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது. அதனால் இவன் “நீடூர் கிழவன்” எனப் படுவன். இவன் பெருங்கொடை புரியும் வள்ளல்
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) ஒரு வேளிர்குல அரசன், எவ்வி சங்ககாலத்துக் குறுநில மன்னன். இவன் சிறந்த வள்ளலும் ஆவான்.
எவ்வியை நேரில் கண்டு பாடிய புலவர்
- வெள்ளெருக்கிலையார் (புறம் 233, புறம் 234).
- கபிலர் (புறம் 202),
- குடவாயிற் கீரத்தனார் (அகம் 366),
- நக்கீரர் (அகம் 126),
- பரணர் (குறுந். 19, அகம் 266),
- மாங்குடி கிழார் (புறம் 24),
- மாமூலனார் (அகம் 115)
ஆகிய புலவர்கள் இவனைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். எவ்வி தன்னைத்தேடி வரும் பாணரின் தலையில் பொன்னாலான தாமரைப்பூ சூடி மகிழ்ந்தான்.
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
a chieftain of velir lineage
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எவ்வி இழந்த வறுமை யாழ் பாணர்
பூ இல் வறும் தலை போல – குறு 19/1,2
எவ்வி என்ற வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணரின்
பொற்பூ இல்லாத வெறும் தலை போல
எவ்வி இறந்தபின் பாணர் தம் யாழை முறித்துப்போட்டனர்.
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்திடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன – அகம் 115/8-10
எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே பாணர்கள்
கையால் தொழும் முறைமையோடு முன்பெல்லாம் பராவிய யாழின்
வளம் பொருந்திய ஒலியையுடைய வளைந்த கோட்டினை ஒடித்துப்போகட்டால் ஒத்த
எவ்வி என்பானின் நண்பன் அன்னி. இவன் திதியனொடு பகை கொண்டிருந்தான். ஆனால் எவ்வி அன்னியைத் திதியனுடன் போரிடாதவாறு அடக்க முயன்றான். அடங்காத அன்னி திதியனுடன் போரிட்டு மடிந்தான்.
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே – அகம் 126/13-17
வளம் மிக்க ஊர்களையுடைய பல வேற்படைகளையுடைய எவ்வி என்பான்
நீதியை உட்கொண்ட சிறந்த மொழிகளைக் கூறித் தணிக்கவும் தனியானாகி
பொன் போலும் கொத்துக்களாகிய நறிய மலர்களையுடைய காவல் மரமாகிய புன்னையைக் குறைக்க விரும்பி
திதியன் என்பானொடு போரிட்டு மடிந்த அன்னி என்பானைப் போல
நீ இறந்துபடுவை போலும்
எவ்வி நீடூர் என்னும் ஊரை உடையவன். அது இன்றைய நீடாமங்கலம் என்பர். எவ்வி வாட்போரில் சிறந்தவன். அவனுடைய ஏவலைக் கேட்காத பகைவரை அரிமணவாயில் உறத்தூர் என்ற இடத்தில் பொருது தோற்கடித்தான்.
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் – அகம் 266/9-12
யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவனான
வாள் வென்றிவாய்ந்த எவ்வி என்பான், தன் ஏவலை ஏற்றுக்கொள்ளாராகிய
பசிய பூணினை அணிந்த பகைவரது மிக்க வலிமையைக் கெடுத்த
அரிமணவாயில் உறத்தூராய அவ்விடத்தே
எவ்வியின் ஆட்சியின் கீழிருந்த நீழல் என்னும் ஊர் மிக்க வளமுடையதாக இருந்தது
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன
நலம் பெறு பணை தோள் நல் நுதல் அரிவை – அகம் 366/12,13
பொற்பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னுமூர் போன்ற
அழகுபெற்ற மூங்கில் போலும் தோளும் நல்ல நெற்றியும் உடைய அரிவையொடு
– எவ்வி என்பான் நீடூர் கிழவன் எனப்படுகிறான். எனவே நீழல் என்பது நீடல் என்பதன்
– திரிபாதலும் கூடும் என்பார் நாட்டார் தம் விளக்கத்தில்.
வேள் எவ்வியின் நாடு மிழலைக்கூற்றம் எனப்பட்டது. கூற்றம் என்பது அகநாடு அல்லது குறுநாடு. இக்கூற்றம் வளம் மிக்க கடற்கரையைச் சார்ந்தும், பல ஊர்களை உடையதுமாய் இருந்தது
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு – புறம் 24/16-19
(பனையின் குரும்பை நீர், பூங்கரும்பின் தீஞ்சாறு, தென்னையின் இளநீர் ஆகிய)
இம் மூன்று நீரையும் உண்டு, மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும்
பரிக்க வொண்ணாத பல மக்களும் வாழ்தலையுடைய நல்ல ஊர்கள் பொருந்திய
பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது
நீர் வழங்கும் வாய்தலைகளையுடைய மிழலைக் கூற்றத்துடனே
கபிலரால், பாரிமகளிரை மணம்செய்துகொள்ளும்படி வேண்டப்பட்டு, மறுத்த இருங்கோவேள், இந்த எவ்வி குடியில் வந்தவன்.
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்!
எவ்வி தொல் குடி படீஇயர் – புறம் 202/14
(உன் முன்னோர்)எவ்வியின் பழைய குடியிலே படுவார்கள்.
புலவர் வெள்ளெருக்கிலையார் என்பவர் வேள் எவ்வியைச் சந்தித்து அவனைப் பாடியுள்ளார் – புறம் 233
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய
பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ
இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட்
போரடு தானை யெவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பலவென
வைகுறு விடிய லியம்பிய குரலே. – புறம் 233/5-7
அகுதை யென்பவன் பண்டை நாளில் கடல் சார்ந்த ஊராகிய கூடல் என்ற ஊர்க்குத் தலைவன். மறப்போர் புரியும் சான்றாண்மையும் பரிசிலர்க்குக் களிறு வழங்கும் கைவண்மையும் உடையவன். இவன் பெரிய தானையையுமுடையன் என்ப. இவன்பால் பொற்றிகிரி யுண்டு; ஆதலின், இவனை வெல்வது எவர்க்கும் ஆகாதென்றொரு பெருமொழி நாடெங்கணும் பரவியிருந்தது. அதனால் பலரும் அவனையஞ்சி யிருந்தனர்; முடிவில் ஒருகால் போருண்டாகிய போது அகுதை கொல்லப்பட்டான். பொற்றிகிரியுண்டென்பது பொய்யாயிற்று. அச் செய்தி போல எவ்வி மார்பிற் புண்ணுற்றிறந்தானென்ற சொல்லும் பொய்யாகுக வென்பார், “அகுதைகண் தோன்றிய பொன்புனை திகிரி போலப் பொய்யாகியர்” என்றார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்