கழுவுள் என்பவர் காமூர்(இப்போதுள்ள காங்கேயம்) என்ற பகுதியின் அரசனாக இருந்தவர்.
1. சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன், வள்ளல்,
2. சொல் பொருள் விளக்கம்
- கழுவுள் என்பவன் ஆயர் தலைவன். இவன் ஏனை வேந்தருடன் பெரும் பகை கொண்டிருந்தான். அவன் இருந்த நகரை முற்றி, அவனது கோட்டையின் தோட்டியைச் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேரன் கவர்ந்துகொண்டதால், அவன் மதிற்குள் அடைபட்டுக் கிடப்ப, அவன் கீழ் வாழ்ந்த இடையர்கள் வேறு புகல் காணாது தம்முடைய ஆனிரைகளைத் தாமே சேரனிடம் கொணர்ந்து தந்து அருள்வேண்டி நின்றனர்.பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடும் புலவரும் இதனைக் குறிப்பிடுகிறார்.
- கழுவுள் அரசன் காமூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இந்தக் காமூரை வேளிர் மன்னர்கள் 14 பேர் ஒருங்கிணைந்து தாக்கினர். அப்போது அந்தக் காமூர் மக்கள் செய்வது அறியாமல் கலங்கி நின்றனர்.
- இவன் மாவண் கழுவுள் என்று போற்றப்படுவதால் சிறந்த கொடைவள்ளல் எனத் தெரிகிறது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a chieftain of sangam period, a philanthropist
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க
பதி பாழாக வேறுபுலம் படர்ந்து – பதி 71/17,18
ஆன் பயம் கொண்டு வாழும் இடையர்கள், கழுவுள் என்னும் இடையர் தலைவன் தலைவணங்கி நின்றதனால்
ஊர்கள் பலவும் பாழ்படும்படியாகவும் பகைவர் நாடு நோக்கிச்சென்று
அணங்குடை கடம்பின் முழுமுதல் தடிந்து
பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்று – பதி 88/7
தெய்வத்தன்மை பொருந்திய காவல்மரமாகிய கடம்பு மரத்தை வேரொடு தகர்த்தழித்து
சேரருடன் போருடற்றக்கூடிய மாறுபாட்டினைப் பெற்ற கழுவுள் என்பானைத் தொல்வியுறச்செய்து
அடு போர்
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈரெழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போல
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/10-14
அடும் போரினையும்
நீங்காத சிறந்த புகழினையும் வானை அளாவிய பெரிய குடையினையும் உடைய
பதினான்கு வேளிர் ஒருங்குகூடித் தாக்கியதுமாகிய
கழுவுள் என்பானது காமூரைப் போல
கலங்கா நின்றது அவரைப் பிரியாரென்று தெளிவுற்றிருந்த என் மனம்.
வென்வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் – அகம் 365/11,12
வென்றி வேலினையும்
சிறந்த வண்மையினையுமுடைய கழுவுள் என்பானது காமூராகிய அவ்விடத்து
பார்க்க : காமூர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்