Skip to content

சொல் பொருள்

(வி.எ) தைத்து என்பதன் மரூஉ, பார்க்க – தை

2. (பெ) தை என்ற மாதம் – பார்க்க – தை

1.தைஇ – உடுத்தி

2.தைஇ – தைமாதம்

சொல் பொருள் விளக்கம்

தைத்து என்பதன் மரூஉ, பார்க்க – தை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102

பாம்பின் படத்தைப் போல பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி

தைஇ – (மணல்வீடு)கட்டி, செய்து, உருவாக்கி

மணல் காண்-தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/8,9

மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி (மகிழ்ந்து விளையாடி)
வருத்தமில்லாமல் செல்வாய், வெண்மையான பற்களையுடையவளே!

தைஇ – (மாலை)தொடுத்து

பூவுடன் நெறிதரு தொடலை தைஇ – நற் 138/7

பூவுடன் அலையலையாய் அமைந்த மாலையைத் தொடுத்துச் சூட்டியதை

தைஇ – அணிந்துகொண்டு

அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ – நற் 245/2,3

அழகிய மலரான கழிமுள்ளியின் ஆய்ந்தெடுத்த பூக்களைக் கொண்ட மாலையை
நீலமணி போன்ற கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படி அணிந்து,

தைஇ – சேர்த்துக்கொண்டு, பொருத்திக்கொண்டு

மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/1-3

பெரிய கழியின் நீலமணி போன்ற பூக்கள் கூம்ப, தூவுகின்ற அலைகளினின்றும்
பொங்கி வரும் சிதறல்கள் கொண்ட துவலையோடு, தாழ்ந்த முகில்களையும் சேர்த்துக்கொண்டு
செயலற்றுப்போக வந்த தடவிச்செல்லும் வாடைக்காற்றோடு

தைஇ – தடவிக்கொடுத்து

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெரும் களிற்று செவியின் மான தைஇ
தண் வரல் வாடை தூக்கும் – குறு 76/3-5

மலைச் சரிவில் உள்ள சேம்பின் ஆடுகின்ற வளப்பமிக்க இலை
பெரிய களிற்றின் செவியை ஒக்கும்படி தடவிச்செல்லும்
குளிர்ந்த வாடைக்காற்று அசைக்கும்

தைஇ – சேர்த்துக்கட்டி

சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்கு மணி மிடைந்த பசும்_பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/13-15

சிலந்தி பின்னிய ஆடுகின்ற வலையைப் போல,
மின்னுகின்ற மணிகள் இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை.
ஒளிருகின்ற இழைகளால் தைத்து, மின்னலைப் போல பளிச்சிட,

தைஇ – போர்த்திக்கொண்டு

மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/3-5

உலகம் எல்லாம் உறங்கிவிட்ட இருட்டான நள்ளிரவில்,
அழகிய துகிலால் போர்த்திய போர்வையை அழகுபெறப் போர்த்திக்கொண்டு, நம்முடைய
இனிய வனப்புள்ள மார்பினனாகிய தலைவனின் சமிக்கையை எதிர்பார்த்து நான் நின்றிருக்க

தைஇ – பதித்து

திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ
பவழம் புனைந்த பருதி சுமப்ப – கலி 80/4,5

பிரகாசமான ஒளியையுடைய முத்துக்களை விளிம்பினில் அரும்பு போலப் பதித்து
பவழத்தால் செய்த சக்கரங்கள் சுமக்க,

தைஇ – சூட்டி

புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/3-5

புதிய மலர்களைச் சூட்டி, எம் சுற்றத்தார் என் பெயரைச் சொல்லி,
திருமண ஏற்பாடுகளைச் செய்வாரைக் கண்டு? ‘அறிவு கெட்ட
கோழையே’ என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ

2.தைஇ – தைமாதம்

தைஇ திங்கள் தண் கயம் படியும்
பெரும் தோள் குறு_மகள் – நற் 80/7,8

தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்
பெரிய தோள்களைக் கொண்ட இளையோளே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *