Skip to content

சொல் பொருள்

(பெ) வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள்,

சொல் பொருள் விளக்கம்

வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர். அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த நாடுகளில் அவர்கள் ஆண்ட நாடுகள் அமைந்திருந்தன

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The name of many kings belonging to vELir lineage.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 618

பெரும் புகழைக் கொண்ட இந்த நன்னனின் பிறந்தநாள் மதுரையில் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு – மலை 64

இவன் மலைபடுகடாம் பாடலின் பாட்டுடைத் தலைவன். இவன் ஆண்ட நாடு பல்குன்றத்துக் கோட்டம்
எனப்படும். அதனால் இவன் பல்குன்றக் கோட்டத்து செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனப்படுவான்.
இவன் ஒரு பெரிய கொடை வள்ளல் என்கிறார் இவனைப்பாடிய இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்
பெருங்கௌசிகனார்.

வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் – நற் 270/9

வேந்தர் என்று சிறப்பிக்கப்படுவோர் சேர, சோழ, பாண்டியர்.
அவர்களை முறியடித்து அவர்களது குதிரை மயிரால் கயிறு திரித்துப் பயன்படுத்திக்கொண்டவன் இவன்

பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்_வயின்
யாரோ பிரிகிற்பவரே – நற் 391/6-8

இவன் ஏழில்குன்ற அரசன். நன்னனின் கொண்கான நாட்டில் ஏழில் குன்றம் இருந்தது. அது பொன் பாதுகாக்கப்பட்ட இடம். பொருள் தேடச் சென்றவர் அந்தக் குன்றத்தையே ஈட்டினாலும் அங்குத் தங்கமாட்டார் என்று தோழி
தலைவிக்குச் சொல்கிறாள். கொண்கான நன்னன் போர்முனைகள் பலவற்றை வென்றவன். வென்று கொண்டுவந்த பொருளைத், தன்னை நாடிப் பாடிவரும் பாணர் கூட்டம் உற்றார் உறவினருடன் நிறைவாக வாழ, அவர்கள் கேட்காவிட்டாலும், தான் உள்ளப் பெருமிதம் பொங்கி, ஊற்றுப்போல் சுரந்து ஊட்டியவன். அத்துடன் ஞெமன்கோல்(எமனின் தராசுக்கோல்) போல் ‘செயிர்தீர் செம்மொழி’ பேசும்படியான வாக்குத் தவறாதவன்.

ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு
ஏழில் குன்றத்து கவாஅன் – அகம் 349/3-9

பெண் கொலை புரிந்த நன்னன் போல – குறு 292/5

இவன் பெண்கொலை புரிந்த நன்னன் எனப்படுவான். இவனது காவல்மரம் – மா மரம். இந்த நன்னனது காவல்மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்றுவெள்ளம் ஆடித்துக்கொண்டுவந்தது. அது இன்னாருடையது என அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கோசர்குடிப் பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அவளை விட்டுவிடும்படி மன்றாடினர். நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான்.
அதனால் புலவர் இவனைப் ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ எனப்பட்டான்.

பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் போர். ஆய் எயினனை மிஞிலி பிழைக்க முடியாத அளவுக்கு வெட்டிப் புண்ணாக்கினான். ஆய் எயினன் வேளிர்குடி வீரன். நன்னன் வேளிர் குடி அரசன். மிஞிலி கோசர் குடி வீரன். மிஞிலியைத் தூண்டியவன் நன்னன். ஆய் எயினன் அதிகனைப் போலப் பறவைகளின் பாதுகாவலன். போர்க்களத்தில் தம்மைப் பாதுகாத்த ஆய் எயினன் காயம் பட்டுக் கிடப்பதைப் பார்த்த பறவைகள் அவனது புண்களைக் கொத்தித் தின்னாமல் வானத்தில் சிறகடித்துப் பறந்து அவனுக்கு நிழல் செய்தன. இந்தக் காட்சியைக் காணக்கூட நன்னன் வரவில்லை. இதனைக் கண்ட வேளிர்குடி மகளிர் ஓலமிட்டு அழுதனர். அகுதை பாண்டியன் கால்வழியில் வந்த சிற்றரசன். இவன் வேளிர்குடி மகளிரின் துன்பத்தைப் போக்கினான்.

வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என
படுகளம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்ப
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர்
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல்
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை
அகுதை கிளைதந்து ஆங்கு – அகம் 208/3-18

கொடி தேர்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் – அகம் 396/1-6

கோசர் சூழ்ச்சி செய்து நன்னனது மாமரத்தை வெட்டிப் பழிதீர்த்துக்கொண்டனர்.
நன்னன்

நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல – குறு 73/2-4

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலோடு போரிட்ட நன்னன் இவனது தலைநகரான பெருவாயிலில் கடம்ப மரங்கள் மிகுதியாக இருந்தன. அதனால் இந்த ஊரைக் கடம்பின் பெருவாயில் என்றே குறிப்பிடலாயினர். சேரருக்கும் இந்த நன்னனுக்கும் நெடுநாள் பகை. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இவனோடு நீண்டநாள் போரிட்டு இந்த நன்னனின் ஆற்றலை அழித்தான். அத்துடன் அவனது காவல் மரமான வாகை மரத்தையும் வெட்டி வீழ்த்தினான்.

பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல் – பதி 40/14-16

வாகைப்பெருந்துறை என்னுமிடத்தில் போரிட்டு நன்னன் போர்களத்திலேயே மாண்டான்

இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – அகம் 199/19-22

சேரன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்ட நன்னன்

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பெருவாயில் நன்னனை வென்று அவன் காவல்மரத்தை வெட்டி வீழ்த்தி அவனது பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் நன்னன் பரம்பரை மீண்டும் தலைதூக்கிச் சேரர் ஆட்சிக்கு இன்னல் விளைவித்துவந்தது. எனவே இளஞ்சேரல் இரும்பொறை அவனது காவல்மரம் வாகையை வெட்டி வீழ்த்தி அவர்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தினான்

சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து – பதி 88/10

பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
பாரம் என்பது இவன் நாடு. பாழி இவன் தலைநகர். ஆரம் என்னும் சந்தனம் இவனது காவல்மரம்

பாரத்து தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/12,13

இயல்தேர் நன்னன் பொன்படு மலையின் கவான் (உச்சிமலைச்சரிவு) பகுதியையும் ஆண்டுவந்தான்

இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரை கவாஅன்
பொன் படு மருங்கின் மலை – அகம் 173/16-18

பாழிநகர நன்னன் சூழி என்னும் முகப்படாம் அணிந்த யானைமேல் செல்லும் பழக்கம் உடையவன்.
இவனது தலைநகர் மிகுந்த கட்டுக்காவலை உடையது.

சூழி யானை சுடர் பூண் நன்னன்
பாழி அன்ன கடி உடை வியல் நகர் – அகம் 15/10,11
கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9

சோழனோடு போரிட்ட நன்னன். இந்த நன்னன் எழுவர் கூட்டணியில் ஒருவனாயிருந்து பெரும்பூட்சென்னியை எதிர்த்தவன். கட்டூர்ப் போரில் சோழர்படையின் தலைவன் பழையனை இந்த எழுவர் கூட்டணி கொன்றது. சென்னி படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டபோது திரும்பி ஓடிவந்துவிட்ட ஆறு பேருள் இவனும் ஒருவன்.

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன – அகம் 44/7-15

இவன் ‘கான்அமர் நன்னன்’ என்றும் கூறப்படுபவன். சோழன் பெரும்படையுடன் போர்க்களம் புகுந்தபோது அவனை எதிர்த்துப் போரிட முடியாமல் ஏந்திய வேலுடன் தன் மூங்கில் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான்.

வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல – அகம் 392/21-27

நன்னன் வேண்மான் இவன். வியலூர் அரசன். மாமூலனார் இவனது நாட்டில் சிறந்து விளங்கிய வியலூர் அழகைத்
தன் பாடல்தலைவியின் ஆகத்துக்கு உவமையாகக் காட்டியுள்ளார்

நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் – அகம் 97/12-14

நன்னன் ஆய் புலவர் பரணர் தம் பாடல்தலைவியின் கூந்தல் இவன் நாட்டில் அருவி கொழிக்கும் முன்றுறையில் வளர்ந்துள்ள பிரம்பு போல் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இவன் ஆய் வள்ளலின் தந்தை என்பது பெயரமைதியால் உணரக் கிடக்கிறது. ஆய்நாடு பொதியமலைநாடு என்பதும், அருவி குற்றாலம் அருவி எனபதும் பல்வேறு பாடல்களை இணைத்து ஒப்புநோக்கும்போது புலனாகும்.

தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில் – அகம் 356/8
அருவி ஆம்பல் கலித்த முன்றுறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின்னீர் ஓதி – அகம் 356/18-20

நன்னன் உதியன் இவன் மேலே கண்ட பாரத்துத் தலைவன் ஆர நன்னனின் மகன் ஆவான். தொன்முதிர் வேளிர் தாம் சேமித்த பொற்குவியல்களை இவனுடைய பாழிநகரில் சேமித்துப் பாதுகாத்துவந்தனர். பரணர் பாடிய இந்தப் பாடலின் தலைவன் தன் காதல்தலைவியைப் பற்றி நினைக்கும்போது பாழிநகரில் வேளிர் பாதுகாக்கும் பொன்னைவிட அரியள் எனக் குறிப்பிடுகிறான்

நன்னன் உதியன் அரும் கடி பாழி
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை – அகம் 258/1-3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *