Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தோல், 2. தோலினால் ஆன போர்வை, 3. பிரத்தியும்நன், 4. பச்சை நிறம்

சொல் பொருள் விளக்கம்

1. தோல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

skin, covering or hide made of skin, Pradyumna. A vyūha manifestation of Viṣṇu, green colour

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புல புல்வாய் கலை பச்சை
சுவல் பூண் ஞான் மிசை பொலிய – புறம் 166/11,12

காட்டுநிலத்தில் வாழும் புல்வாய் என்னும் கலைமானின் தோல்
உனது தோளின்கண் இடப்பட்ட பூணு நூல் மீது சிறந்து விளங்க

விளக்கு அழல் உருவின் விசி_உறு பச்சை
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை – பொரு 5-8

விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்,
(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்
மென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,
இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்

கான குமிழின் கனி நிறம் கடுப்ப
புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் – சிறு 225-229

காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,
புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்)பெய்துகொண்டு,
அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டு_உறு பச்சை – பெரும் 4-6

பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;

புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன் போல் பச்சை – மலை 28,29

புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து,
புதியதாகப் போர்த்திய பொன்னின் நிறம் போன்ற (நிறமுடைய) தோல்போர்வையை உடையதாய்
யாழின் பத்தல் என்று சொல்லப்படும் குடத்தினைப் பதப்படுத்திய தோல்கொண்டு போர்வை போல் மூடுவர்.
இந்தத் தோல்போர்வையே பச்சை எனப்படும்.

பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் – பரி 3/82

பொன்னிறக் கண்ணையும் பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே!

பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை
குவளை பசும் தண்டு கொண்டு – பரி 11/101,102

பவள வளையலைச் செறிய அணிந்திருந்தாள் ஒருத்தியைக் கண்டு, இன்னொருத்தி அணிந்தாள் பச்சையான
குவளையின் இளம் தண்டினைக் கையில் வளையல்போல்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *