Skip to content
பறம்பு மலை parambu malai

சொல் பொருள்

(பெ) 1. பாரியின் பறம்பு நாடு, மலை

2. நன்னனின் பறம்பு என்ற மலை/ஊர்,

சொல் பொருள் விளக்கம்

1. பாரியின் பறம்பு நாடு, மலை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the country/hill of chieftain Paari

a hill/city belonging to Nannan

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு – புறம் 110/3

முந்நூறு ஊர்களை உடையது குளிர்ந்த நல்ல பறம்பு நாடு

பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3

பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை

நன்னன் பறம்பில் சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல்போல் – அகம் 356/8-10

நன்னனது பறம்பு மலையில்
சிறிய பனைசெய்வோன் அரக்கோடு சேர்த்து இயற்றிய
சாணைக்கல்லினைப் போலும்

அருவி ஆம்பல் கலித்த முன் துறை
நன்னன் ஆய் பறம்பு அன்ன
மின் ஈர் ஓதி – அகம் 356/18-20

அருவிநீர் பெருகுமிடத்து ஆம்பல் தழைத்துள்ள முன் துறையினையுடைய
நன்னந்து அழகிய பறம்பு என்னும் ஊரைப்போன்ற
மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலையுடையவளே!

(ஆய் பறம்பு என்பது சில பதிப்புகளில் ஆஅய் பிரம்பு எனக் காணப்படுகிறது)

வேம்பின் பைம் காய் என் தோழி தரினே
தேம் பூம் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர்
தைஇ திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே – குறு 196

வேப்பமரத்தின் பசிய காயை என் தோழி தரும்போது
இனிப்பான நல்ல வெல்லக்கட்டி என்று சொன்னீர்; இப்பொழுதோ,
பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை
தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும்
இவை வெப்பமுடையன, மேலும் உவர்ப்பன என்று கூறுகின்றீர்;
தலைவனே! அப்படி ஆகிவிட்டது உம் அன்பின் தன்மை.


‘ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்….  நெடியோன் குன்று’  {புறம் 114} 

என்று புறநானூற்றில் பாடப்படும் மலை இந்த பறம்பு மலை தான் என்பது அறிஞர்களின் கருத்து. 

அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;	5
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,	10
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,	15
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே. - புறநானூறு 109

என்று கபிலர் தமது புறப்பாடலொன்றில் நேரடியாகவே பறம்பின் வளத்தைக் குறித்துக் காட்டுகிறார்.

மரவத்தொடு மணமாதவி
மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில்
சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை
விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன்
வைத்தானெடு நகரே. 

கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம், அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும்.

நல்லூர் நத்தத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் பறம்பின் பனிச்சுனை நீரைப் புகழ்ந்து பாடுகிறார்.

நன்னாகனார் பறம்பின் இனிய சுனைத் தண்ணீரைப் புகழ்ந்து பாடுகிறார்.

பெருஞ்சித்திரனார் தனது பாடலில் பறம்பின் வலிமையைப் போற்றிப் பாடுகிறார்.

அதே பொருண்மையில் குறுந்தொகையில் மிளைக்கந்தனார் பாடுகிறார்.

நக்கீரர் அகத்துறைப் பாடலொன்றில் பறம்பின் பனிச்சுனை நீரில் எழுந்த புதுமலர் எனத் தலைவியின் நெற்றியைப் புகழ்ந்து உரைக்கின்றார்.

ஔவையார் பறம்பின் கோட்டைச் சிறப்பைப் புகழ்ந்துரைக்கிறார்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *