Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஆபத்திலிருந்து தப்பு, 2. இலக்குத் தவறு, 3. தவறுசெய், குற்றம்புரி,  4. தீங்குசெய், 5. நேர்வழியினின்றும் விலகிச்செல், 6. நடவாது போ, பொய்த்துப்போ, 7. உயிர் வாழ், உயிரோடிரு,

2. (பெ) 1. (தெய்வ)குற்றம், 2. தவறு, 3. பொய்த்துப்போனது

சொல் பொருள் விளக்கம்

1. ஆபத்திலிருந்து தப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

survive a danger, escape from an evil or danger, miss the target, err, do wrong, do harm, deflect, deviate from a straight path, fail, be unsuccessful, live, (divine) fault, mistake, a failed event

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2

புலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான்,

களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி – ஐங் 218/3

களிற்றைக் கொல்வதில் தவறிவிட்ட சினம் மிகுந்து எழுந்துவரும் புலி

குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறி பைம் தழை
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய
பொய்தல் ஆடி பொலிக என வந்து
நின் நகா பிழைத்த தவறோ பெரும – அகம் 156/7-12

நீலப்பூ போலும் மையுண்ட கண்ணினையுடைய இத் தலைவியும் நானும்
வயலில் மலர்ந்த ஆம்பல் மலரின் அகவிதழ் ஒடிக்கப்படாத முழுப்பூவின் தழைகளை
ஞாயிறு காயாத விடியற்காலத்தில் தலையிலே செருகிக்கொண்டு,
சிற்றில் விளையாட்டு விளையாடி சிறந்திடுக என்று தாய் கூற, இங்கு வந்து
உன்னுடன் நகைத்து அளவளாவிப் பேசிய குற்றம்புரிந்தமையால் உண்டான தவறோ, பெருமானே

நலம்பெறு பணை தோள் நல்நுதல் அரிவையொடு
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தன் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே – அகம் 366/13-16

அழகுபெற்ற மூங்கில் போலும் தோளும் நல்ல நெற்றியும் உடைய பரத்தையோடு
மணம் கமழும் குளிர்ந்த சோலையிலே தங்கி, நேற்று
நீ தனக்கு தீங்குசெய்ததை உணர்ந்து
அழுத கண்ணினையுடையவள் ஆனாள், எம் தெய்வம் போன்றவளான தலைவி

உயர் நிலை உலகம் இவணின்று எய்தும்
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் – மது 471-474

உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும்

மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507

மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய

பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28

உயிரோடிருக்கமாட்டாள் அல்லவா பிரிந்துசென்றோம் நாம் எனின்.

காமர்
பெருக்கு அன்றோ வையை வரவு
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லை
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை
பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/70-74

அழகிய
நீர்ப்பெருக்கு அன்றோ இந்த வையையின் புதுப்புனல் வரவு”
“ஆமாம், அது சரிதான் காதலையுடைய அழகிய காமமும்
ஒருமிக்க ஒரே தன்மையுடையதாய் இருப்பதுண்டோ? விரைவாகச்
சுருங்கிப்போவதும், பின்பு பெருகுவதும் – இதற்காக நீ சூளுரைக்கவேண்டாம் – வையையின்
பெருக்கினைப் போலத்தானே அதுவும்! பெற்றாய் தெய்வ குற்றம்!

மகள் இவன்
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/98-100

மகளே! இவன்
துன்புற்ற நெஞ்சம் இறுகப் பூட்டிக்கொள்ளும்படி அவன் மீது சினந்துவிட்டுப்
பின்னர் அவனைத் தேடிச் செறிந்த இருளில் செல்லவேண்டாம், அது தவறாகும்

கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/103-105

கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்த்துப்போனது ஆகாமல்
நனவினிலும் கிட்டும்படி, ‘உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக’ என்று வரம் கேட்போரும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *