Skip to content

சொல் பொருள்

(வி) 1. கமழ், மணம்வீசு, 2. கல, கூடு, 3. அணை, தழுவு, 4. கூடியிரு, ஒன்றாக இரு, 5. களவுமணம் செய்,  6. கூடு, புணர்,

2. (பெ.அ) திருமணத்திற்குரிய,

சொல் பொருள் விளக்கம்

கமழ், மணம்வீசு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

emit fragrance, smell sweet, mingled, embrace, clasp, be in company with, have premarital union, come together, copulate with, for wedding

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4

மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்

நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34

நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்,

அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை
தெள் நீர் சிறு குளம் – புறம் 118/1-3

பாறையும் சிறு குவடும் கலந்த உச்சியையுடையவாகிய
எட்டாம் பக்கத்துப் பிறை போலும் வளைந்த கரையையுடைய
தெளிந்த நீரையுடைய சிறிய குளம்

இலங்கு வளை நெகிழ சாஅய்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே – குறு 50/4,5

ஒளிரும் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து
தனிமைத் துயரைப் பூண்டுநிற்கின்றன அவர் தழுவிய தோள்கள்.

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால்
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/16,17

அடும்பங்கொடிகள் படர்ந்துள்ள அழகிய மணல்மேட்டில் இவளுடன் விளையாடி நீ ஒன்றாக இருந்தபோது
‘வளைந்த குழைகளை அணிந்தவளே! என்னை நம்புவாயாக’ என்றதை ஏற்றுக்கொண்டதன் விளைவு அன்றோ

யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினை தாள் அன்ன சிறு பசும் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே – குறு 25

ஒருவரும் இல்லை; அவர்தானே களத்திலிருந்தார்;
அவரே தனது உறுதிமொழியைப் பொய்க்கச்செய்தால் நான் என்ன செய்யமுடியும்?
தினைத் தாள் போன்ற சிறிய இளமையான கால்களையுடையன,
ஓடுகின்ற நீரில் இருக்கும் ஆரல்மீனைப் பார்க்கும்
நாரைகளும் இருந்தன தலைவர் என்னைக் களவுமணம் புரிந்தபொழுது.

நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே – அகம் 240/9-15

நீயும்
தேன் ஒழுகும் கூந்தலையுடைய தலைவியது அழகிய நெற்றியைத் தடவி
கோங்கு அரும்பினாலொத்த குவிந்த முலையினையுடைய மார்பகத்தே
இனிய துயிலை விரும்பினாயாயின் வண்டுகள் மொய்க்க
விரிந்த பூக்களையுடைய செருந்திமரம் பொருந்திய வெள்ளிய மணல் பரந்த முடுக்கில்
பூக்கள் பொருந்திய புன்னை மரங்களையுடைய அழகிய தண்ணிய சோலைக்கண்
வருவாயாக அவளைக் கூடிச் செல்வதற்கு

மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 151

திருமணம் நடக்கும் வீடு (போன்று) மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே

மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10

திருமணம் நடக்கும் வீடுகளில் முழங்கும் உன் திருமணத்திற்கான முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக்
கலைக்கும்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *