சொல் பொருள்
(பெ) ஒரு வகைக் கற்றாழை, பெருங்குரும்பை,
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகைக் கற்றாழை, பெருங்குரும்பை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Bowstring hemp, stemless plant, Sanseviera zeylanica; A shrub the fibre of which is used for cordage (ropes in the rigging of a ship)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இதன் பழம் சிவப்பாக, சிறிய உருண்டையாக இருக்கும். வெயிலில் நடந்தால் பாதங்களில் உண்டாகும் கொப்புளங்களுக்கு இந்தப் பழங்களை உவமிப்பர் வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் பரல் பகை உழந்த நோயொடு சிவணி மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 42-45 ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)- சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால் பரல் கல்லாகைய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி, மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும், மரல் நாரைக்கொண்டு வில்யாழ் என்ற ஒருவகை யாழைச் செய்வர். குமிழின் புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 180-182 குமிழினது உள்ளீடற்ற கொம்பிடத்தே வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்பினையுடைய வில்யாழ் இசைக்கும் விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை, இந்தக் கற்றாழையின் நாரினால் மலர்களைத் தொடுத்து மாலை செய்வர். தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 428-431 தேன் உண்டாக மலர்ந்த மராமரத்தின் மென்மையான பூங்கொத்தும், யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாம் பூவும், தளிர்களோடே இறுகக்கலந்த கட்டழகான மாலையை, நன்கு காய்ந்த கற்றாழை நாரில் (கட்டி)அழகுபெறச் சூடி, மரல் நாரினால் நெய்த துணியை ஆடையாக உடுத்திக்கொண்டனர் மலைவாழ் குறவர்கள். மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4 மரல் நாரினால் செய்த உடையினையுடைய, மலையில் வாழும் குறவர்கள் இந்த மரல் மடல்களில் வரிவரியான கோடுகள் இருக்கும். வேனில் ஓதி பாடு நடை வழலை வரி மரல் நுகும்பின் வாடி – நற் 92/2,3 வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி புன்னை மரத்தின் அரும்புகள், மரல் பழங்களைப்போல் மொக்குளாக இருக்கும். படு காழ் நாறிய பராஅரை புன்னை அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/1,2 விழுந்த விதை முளைத்து மரமாகிய பருத்த அடிமரத்தைக் கொண்ட புன்னையின், அடுத்து வளர்ந்த மரலின் பழம் போல், அரும்புகள் வாய் திறந்து வறிய காலத்திலும் அற்றுப்போகாமல் இருக்கும் இந்த மரலின் மடல்களை விலங்குகள் உணவாகக் கொள்ளும் மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3 மரல்செடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான் மரையா மரல் கவர மாரி வறப்ப – கலி 6/1 காட்டுப்பசுக்கள் கற்றாழையைத் தின்னும்படியாக மழை வறண்டுபோக மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/12 இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்