Skip to content

1. சொல் பொருள்

(வி) 1. முதிர், கனி, 2. முழுவளர்ச்சி பெறு, 3. மிகு, பெருகு, 4. மரம் போன்றவற்றின் உட்பகுதி உறுதிப்படு, 5. முடி, 6. செய்து முடி, 7. சூழ், 8. முற்றுகையிடு,வளை, 9. தேர்ந்த திறம்பெறு, 10 நோய் குணப்படுத்த முடியாத நிலையை அடை,

2. (பெ) 1. முழுமை, பூரணம், 2. முதிர்ச்சி, 3. முற்றுகை,  4. சூழ்ந்திருத்தல்,

2. சொல் பொருள் விளக்கம்

முதிர், கனி,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

ripen, mature, be fully grown, increase, abound, become hardened as the core of a tree or plant, come to end, be finished, finish, complete, encircle, surround, besiege, become skilled, be adept, get to an advanced stage as a disease, completeness, perfection, ripeness, maturity, siege, encircling

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி – அகம் 293/6,7

குயிலின் கண்ணைப் போன்ற விளங்கும் காய் முதிர்ந்து
அழகிய பொற்காசு போன்ற பெருமை பொருந்திய நிறத்தினையுடைய பெரிய கனி

முகை முற்றினவே முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம் – குறு 188/1,2

முழுதும் வளைச்சியுற்றன முல்லையின் அரும்புகள்; முல்லையோடு
முற்றும் அழகுகொண்டன குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்

முகை முற்றினவே முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம் – குறு 188/1,2

முதிர்ந்துவிட்டன முல்லையின் அரும்புகள்; முல்லையோடு
முற்றும் அழகுகொண்டன குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்

முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப – நற் 101/1

முதிராத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்

செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் – கலி 24/12

பொருளீட்டும் பணி முற்றுப்பெறும் வரை” என்று குழறினார்; அழகிய அணிகலன்களை அணிந்தவளே!

ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 83,84

ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய (முடிக்குச்)செய்யும் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்

சென்ற தேஎத்து செய்_வினை முற்றி
மறுதரல் உள்ளத்தர் எனினும் – அகம் 333/20,21

தாம் சென்றுள்ள தேயத்தே தாம் செய்யும் தொழிலை செய்து முடித்துக்கொண்டு
மீளும் எண்ணம் உடையராயினும்

வீயா சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன் களம் பல-கொல் – புறம் 15/20,21

கெடாத தலைமையுடைய யாகங்களைச் செய்துமுடித்து
தூண் நடப்பட்ட யாகச்சாலைகள் பலவோ?

வான் புகு தலைய குன்றம் முற்றி
அழி துளி தலைஇய பொழுதில் – நற் 347/4,5

வானத்தை ஊடுருவிச் செல்லும் உச்சிகளையுடைய குன்றுகளைச் சூழ்ந்து,
மிக்க மழையைப் பொழிந்த பொழுதில்

முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/15,16

பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்

அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ்
பாணர் ஆர்ப்ப – அகம் 331/10,11

அரிய இசைத்துறைகளை முற்ற உணர்ந்த கரிய தண்டினையுடைய சிறிய யாழினையுடைய
பாணர்கள் ஆரவாரம் செய்ய

கொன்றை
ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து – அகம் 398/3-5

கொன்றையினது
நன்கு மலர்ந்த பூக்களைப் போல பாழ்பட முற்றிப்போன
பசலை படர்ந்த மேனியைப் பார்த்து நெற்றியும் பசலையுறப்பெற்று

முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் – பட் 296

உடல் முழுதும் அணிகலன்கள் அணிந்த மகளிரின் (தாமரை)மொட்டு(ப் போன்ற)முலைகள் அழுந்துவதாலும்

கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை – நற் 174/1,2

ஈந்தின் கற்றையான முதிர்ச்சியுள்ள குலை போன்ற,
ஆளரவம் அற்ற பாலை வழியில் நிற்கும் தாளிப்பனையின்

ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்
செரு மிகு தானை வெல் போரோயே – பதி 63/11,12

ஒரு முற்றுகையில் இரு பெரும் வேந்தர்களை ஓட்டிய ஒளிரும் வாளையுடைய,
போரில் மேம்பட்ட சேனையைக் கொண்டு வெல்லுகின்ற போரினையுடையவனே!

பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் – புறம் 29/6,7

பாணர்கள் சூழ்ந்திருத்தல் ஒழிந்த பின்னர், நினது உரிமை மகளிருடைய
தோள் சூழ்வதாக நின் சாந்து புலர்ந்த மார்பும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *