Skip to content

சொல் பொருள்

(பெ) பார்க்க : வலம்

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : வலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஞாயிறு அடிவானத்தில் தோன்றி மேலே எழுவதையும், மேகங்கள் அடிவானத்தில் தோன்றி மேலே எழுந்து மழை
பொழிவதையும் குறிப்பிடும்போது வலன் ஏர்பு – வலமாக எழுந்து – என்ற தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1

பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 4

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1

நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் – பட் 67

அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/9

பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு – நற் 264/1

சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு – நற் 328/6

மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு – குறு 237/5

வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு – ஐங் 469/2

மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27

நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு – பதி 31/29

சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி – அகம் 43/2

தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3

இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ – அகம் 188/2

தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு – அகம் 278/3

வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி – அகம் 298/2

வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் – அகம் 328/1

மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு – அகம் 374/2

வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 90-92

(தான்)விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட, திரளுகின்ற பெரிய படையோடே,
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

என்ற ஓரிடத்தில் மட்டும் வலன் ஏர்பு என்பதற்கு வெற்றி தோன்றி என்று நச்சினார்க்கினியர் பொருள்கொள்வார்.
இங்கும் வெற்றியைக் கொண்டாட கொம்புவாத்தியங்களையும், சங்குகளையும் வலக்கரத்தில் பிடித்து உயர்த்து
முழங்குவதால் வலன் ஏர்பு என்பதற்கு வலப்பக்கமாக உயர்ந்து என்று பொருள்கொள்வது பொருத்தம் எனத்
தோன்றுகிறது.

’வலன் ஏர்பு’-வை அடுத்து ’வலன் உயர்’ என்ற தொடர் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில்

ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/3
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7

ஆகிய இடங்களில் வலன் என்பதற்கு வலப்பக்கம் என்ற பொருளே பொருந்திவருகிறது.
ஆனால்,

வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை – நற் 194/4
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை – பதி 11/18
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் – அகம் 338/4
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை – புறம் 56/1

என்ற இடங்களில் வலன் என்பதற்கு வெற்றி அல்லது வலிமை என்ற பொருள் கொள்ளப்படுகிறது.

வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/6
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் – புறம் 60/10

ஆகிய இடங்களில் வலன் என்பதற்கு வெற்றி என்ற பொருள் கொள்ளப்படுகிறது.

சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ – பெரும் 145
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20

ஆகிய இடங்களில் வலன் என்பதற்கு வலப்பக்கம் என்ற பொருளே பொருந்திவருகிறது.

வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த_கால் – கலி 35/15
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/12

ஆகிய இடங்களில் வலன் என்பதற்கு வெற்றி என்ற பொருள் கொள்ளப்படுகிறது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *