Skip to content
வெண்ணெல்

வெண்ணெல் ஒருவகை மலைநெல்

1. சொல் பொருள்

ஒருவகை மலைநெல்

2. சொல் பொருள் விளக்கம்

ஒருவகை மலைநெல். எட்டு எள்மணிகளை ஒன்றாக அடுக்கினால் என்ன அளவு வருமோ, அதுதான் நெல்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Mountain paddy, wild rice, Oryza mutica, Oryza sativa

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வெண்ணெல்
வெண்ணெல்
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 288

ஐவன நெல்லென்னும் வெள்ளிய நெல்லோடே பிணக்கங்கொண்டு வளரப்பட்டு – நச்.உரை
– ஐவனமும் வெண்ணெல்லும் ஒன்றென்பது தோன்ற, நச். உரை எழுதியுள்ளார் – உ.வே.சா.விளக்கம்

ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து – கலி 43/4

ஐவனமாகிய வெண்ணெல்லைப் பாறையாகிய உரலிலே சொரிந்து, – நச். உரை.

வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115

நன்றாக விளைந்தன ஐவன நெல்லும் வெண்ணெல்லும் – நச்.உரை

நச்சினார்க்கினியர் இரண்டு இடங்களில் ஐவனமும் வெண்ணெல்லும் ஒன்று என்று கூறி, மூன்றாவது இடத்தில் இரண்டும் வெவ்வேறானவை என்று கூறுகிறார்.

முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு – நற் 373/1-4

வீட்டு முற்றத்தில் உள்ள பலாமரத்தின் பழுத்துள்ள சுளைகளைக் கையால் வளைத்து, புல்லிய தலையைக் கொண்ட மந்தி உண்டபின் கொட்டைகளைக் கீழே உதிர்க்க, தந்தையின் முகில் தவழும் பெரிய மலையைப் பாடியவளாய்க் குறமகள் ஐவனம் என்னும் மலைநெல்லைக் குற்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனோடு

சங்க இலக்கியங்களில் ஐவன வெண்ணெல் என்று வரும் மேற்கண்ட நான்கு இடங்களும் குறிஞ்சி நிலத்தைக் குறிப்பதால் வெண்ணெல் வகையில் மலையில் விளைவது ஐவன வெண்ணெல் எனப்பட்டது எனலாம். மலைநாட்டில் அல்லாது மருதநிலப்பகுதியிலும் இந்த வெண்ணெல் விளைந்தது.

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழிமின் – மலை 471-477

வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து, சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா, உறுமிக்கொண்டு(வரும்) ஓட்டத்தின் வலிமையோடு (உம்மேல்)விரைவாக வரலாம் என்பதைக் கவனத்திற்கொண்டு,(குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும், வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும், காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின் புதுப்புதுச் செல்வம் தரும் ஒரு கரையை வழியாகக்கொண்டு போவீராக

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழன பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் – நற் 350/1-3

வெண்ணெல் கதிர்களை அறுப்பவர்களின் தண்ணுமைப் பறையின் ஒலிக்கு வெருண்டு பழனத்தில் உள்ள பலவான பறவைகள் பறந்தோட, வயல்வெளியில் வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற எனவே வெண்ணெல் மலைநாட்டில் மட்டுமன்றி, உள்நாட்டிலும் விளைந்தது எனக் கூறலாம்.

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி - பெரும் 255

வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல்/வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன - மலை 115,116

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ - மலை 471

வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை - நற் 7/7

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து - நற் 183/1

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ - நற் 350/1

ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு - நற் 373/4

முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு - குறு 210/3

உப்பை மாறி வெண்ணெல் தரீஇய - குறு 269/5

யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர - ஐங் 48/3

விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் - ஐங் 58/1

வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் - ஐங் 190/2

மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு - பதி 12/17

ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் - கலி 43/4

வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் - அகம் 40/13

வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை - அகம் 96/14

வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும் - அகம் 201/13

வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை - அகம் 204/10

வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் - அகம் 211/6

வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை - அகம் 236/4

வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய் - அகம் 267/11

பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ - அகம் 340/14

குள கீழ் விளைந்த கள கொள் வெண்ணெல்/முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும் - புறம் 33/5,6

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ - புறம் 348/1

மா வண் தித்தன் வெண்ணெல் வேலி - புறம் 352/9

அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்/தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி - புறம் 399/1,2

நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது - மலை 564

ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி - மது 288
வெண்ணெல்
வெண்ணெல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *