Skip to content

1. சொல் பொருள்

(பெ) 1. ஆய் குடி எயினன், ஓர் சிற்றரசன்,

2. வாகை அரசன்

2. சொல் பொருள் விளக்கம்

ஆய்-எயினன் அருள் உள்ளம் கொண்டவன். பறவைகளை பேணிப் பாதுகாத்து வந்தவன். இவன் ஆய் குடி என்னும் ஊரில்
தோன்றிய மன்னர்களில் ஒருவன். புன்னாட்டை நன்னனிடமிருந்து மீட்டு அந்நாட்டு மக்கள் வேளிர்க்கே தருவதற்காக மிஞிலி என்பவனோடு பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் போரிட்டபோது மாண்டவன். இவன் போர்க்களத்தில் கிடந்தபோது இவன் வளர்த்த பறவைகள் வானில் வட்டமிட்டுப் பறந்து அவனுக்கு நிழல் செய்தனவாம். இதனைக் காண விரும்பாமல் கூகை பகலில் பறப்பதைநிறுத்திக் கொண்டது.

வெளியன் வேண்மான் இவனது தந்தை. ஆய் நாட்டில் தேமுது குன்றம் இவன் ஆண்ட பகுதி

கி.பி. எட்டாம்‌ நூற்றாண்டின்‌ பிற்‌ பகுதியிலும்‌ ஒன்பதாம்‌ நூற்றாண்டின்‌ தொடக்கத்திலும்‌ (768-816) மதுரையை ஆண்ட சடில பராந்தக நெடுஞ்சடையன்‌ என்ற பாண்டிய மன்னனின்‌ மதி யமைச்சனாக விளங்கிய மாறன்காரி என்பவன்‌ மதுரையையடுத்த ஆனை மலையில்‌ நரசிங்கப்‌ பெருமாள்‌ கோயிலொன்று கட்டினான்‌ என்றும்‌, அது முற்றுப்பெறு முன்னரே அவன்‌ இறந்து விட்டமையால்‌, அவனுக்குப்‌ பின்‌ அவ்வமைச்சுப்‌ பதவியை ஏற்ற அவன்‌ தம்பி மாறன்‌ எயினன்‌ என்பவன்‌ அத்‌ திருப்பணியை நிறைவேற்றி நீர்‌ தெளித்தான்‌ என்றும்‌ ஆனைமலை வட்டெழுத்துத்‌ தமிழ்க்‌ கல்வெட்டுக்‌ கூறுகிறது. அதுவருமாறு:

“கோமாறஞ்‌ சடையற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன்‌ மூவேந்த மங்கலப்‌ பேரரையன்‌ ஆகிய மாறன்‌ காரி இக்‌ கற்றளி செய்து நீர்த்‌ தெளியாதேய்‌ சு(ஸ்‌வாக்காரோகணம்‌ செய்த பின்றை அவனுக்கு அநுசனுன்‌ உத்தர பதமெய்தின பாண்டியமங்கல விசையரையன்‌ அகிய மாறன்‌ ஏயினன்‌ முகமண்டபஞ்‌ செய்து நிரத்தெளித்தான்‌.”

கி.பி. 770 இல் வெட்டப்பட்ட கல்வெட்டுக் கூறுகிறது . இது நரசிங்கப் பெருமாளுக்குத் தோற்றுவிக்கப்பட்ட குடைவரையாகும் . இக் குடைவரையை அடுத்து இவன் சமகாலத்தில் முருகனுக்குத் தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு குடைவரையைக் காணலாம் . இதனைப் பட்டசோமாசி பரிவிராஜகர் புதுக்கி னார் என அங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டால் அறிகிறோம் .

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

 a chieftain of Ay kudi

chief of the city called vaakai near Madurai

hunter, inhabitant of the desert tract

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/7,8

கடிய செலவினையுடைய குதிரையையுடைய ஆய் எயினன் என்பான்
நெடிய தேரையுடைய மிஞிலி என்பானொடுபோர்புரிந்துகலத்தில் இறந்தனனாக

அடு போர் மிஞிலி செருவிற்கு உடைஇ
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஒராங்கு
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு
விசும்பிடை தூர ஆடி – அகம் 181/5-10

போர் அடுதல் வல்ல மிஞிலி என்பான் செருவின்கண் தோற்று
முருகனை ஒத்த வலிமையுடன் நின்று குருதியால்களம் சிவப்புற
ஆய் எயினன் என்பான் வீழ்ந்தனனாக ஞாயிற்றின்
ஒள்ளிய கதிர்களின் வெப்பம் அவன் உடலில்படாது மறைய ஒன்றுகூடி
புதிய பறவைகளின் ஒலி பொருந்திய பெரிய கூட்டம்
விசும்பிடம் மறைய வட்டமிட்டு

நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்ப – அகம் 208/3-14

சிறிய பிரப்ச்பங்கோலையுடைய பாடுநர் விரும்பின் வெள்ளிய கொம்பினையும்
தலைமையையுமுடைய யானையை வழங்கும் வண்மையாலாகிய மகிழ்ச்சியையுடைய
வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான் –
அருள் பொருந்தும் வாழ்க்கையினையுடையவன் – பாழி என்னும் ஊரின்கண்ணதாகிய போர்க்களத்தே
ஓடையை அணிந்த யானையினையும் இயன்ற தேரினையும் உடைய மிஞிலி என்பானோடு
நண்பகற் பொழுதிலே செய்த போரின்கண் புண் மிக்கு
ஒள்ளிய வாட்படை மயங்கிய போரினாலே வீழ்ந்தனனாக, புட்கள் பலவும் கூடி,
அழகிய இடத்தையுடைய வானில் விளங்கிய ஞாயிற்றினது
உள்ளிய கதிர் அவன் உடலைக் காய்தல் செய்யாது, தம் சிறகுகளால் பந்தரிட்டு
நிழலைச் செய்து சுழன்றுகொண்டிருத்தலை யான் காணேன் என்று
அவன் பட்ட களத்தைக் காண்டற்குச் செல்லானாய் கோபம் மிக்கு
அச்சம்தரும் போர்ச்செயலினைக் கொண்ட நன்னன் அருளின்றி மறைந்துகொள்ள

இதே போன்று இன்னொரு செய்தி, நன்னன், மிஞிலி, அதிகன் என்ற மன்னர்களை இணைத்தும், அதிகன் என்பான்
பறவைகளை நேசிப்பவன் என்றும் வருதலால் (அகம் 142) இந்த எயினனும், அதிகனும் ஒருவரே என்று
கருதுவார் நாட்டார் அகம் 142 உரையில். (”அதிகன் என்பது ஆய் எயினனுக்குரிய வேறு பெயர் போலும்”)

பொலம் பூண் நன்னன் புன்னாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் – அகம் 396/2-6

பொன்னாலான பூண்களையுடைய நன்னன் என்பான் புன்னாடு என்னும் நாட்டிலுள்ளாரை வெகுண்டு எழுந்தானாக
யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் நகரிடத்தே நின்று
அஞ்சாதீர் என்று கூறிய ஆய் எயினன் என்பான்
போரில் வெல்லும் பயிற்சியையுடைய மிஞிலி என்பானோடு பொருது
தன் உயிரையும் கொடுத்தனன்

வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6

வள்ளன்மையுடையனாகிய எயினன் என்பானுக்குரிய வாகை என்னும் நகரத்தைப் போன்று
– இந்த வாகை என்பது வாகைப் பறந்தலை, வாகைப்பெருந்துறை என்பவற்றின் வேறு.
– இவ்வாகைக்குரிய எயினன் ஏனை ஆய் எயினனின் வேறாவான்.
– இந்த வாகை மதுரை நாட்டில் உள்ளதோரூர்
– ஔவை.சு.து.விளக்கம்

Einar

கொடுவில் எயினர் குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்
சுவல் விளை நெல்லின் செவ்விழ்ச் சொல்லி
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்து வயின்தொறும் பெறுகுவீர்”
(பெரும்பாணாற்றுப்படை 129 – 133

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *