1. சொல் பொருள்
1. (வி) துளியாகச் சிதறு, சிம்பு சிம்பாக உடைந்துபோ
2. (பெ) 1. நீர்த்துளி, 2. தீச்சுவாலையின் நுனி, 3. கசிவு நீர், ஊற்றுநீர், 4. பஞ்சின் நுனியில் நீட்டிக்கொண்டிருக்கும் இழை, சிம்பு, 5. பனங்கிழங்கின் நரம்பு நுனியின் சிம்பு, 6. ஆந்தை என்ற சங்க காலப் புலவரின் சொந்த ஊர்
3. (பெ) பிசு பிசுப்பு என்பது உவர்த்தன்மையால் உண்டாவது. அகத்தீசுவர வட்டாரத்தில் சிறுநீரைப் பிசிர் என்பது அவ்வுவர்ப் பொருள் வழியதாம்.
2. சொல் பொருள் விளக்கம்
பிசிர் ஆந்தையார் என்னும் புகழ்மிகு பழம்புலவர் ஊர் பிசிர். அது கடலின் அருகே அமைந்தது. அப் பிசிர்க்குடி முகவை மாவட்டம் சார்ந்தது. பிசு பிசுப்பு என்பது உவர்த்தன்மையால் உண்டாவது. அகத்தீசுவர வட்டாரத்தில் சிறுநீரைப் பிசிர் என்பது அவ்வுவர்ப் பொருள் வழியதாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
sprinkle, drizzle, break with frayed ends, drop of water, spray, tip of a flame, oozing water, spring, frayed end in cotton, fibre in the central nerve of palm root
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு மரீஇய மைந்தின்
தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/27-31
அங்குசம் காட்டும் குறிப்பினை மீறாமல் – தந்தத்தின் பூண்கள் இறுக்க அணியப்பெற்று
பாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் சிதறும்படியாக,
காட்டினில் தோன்றி பரந்து உயர்ந்து நின்று, நாட்டிலுள்ளோர் காணும்படி ஒளிரும் காட்டுத்தீயைப் போன்ற
சினத்தைக் கைவிட்டு – நடக்கின்ற, வலிமையுடைய
வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான்.
கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர – பதி 15/6
கொடிவிட்டெழும் நிறங்கொண்ட புகை பிசிராக உடைந்துபோகும்படி காற்று மோத
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர்
முழவு இசை புணரி எழுதரும்
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/10-12
பொங்கிச் சிதறும் துளிகளைக்கொண்டு,
முழவு போல் இசைக்கும் அலைகள் எழுந்து
உடைந்து விழும் கடற்கரையிலுள்ள நிலத்தில் நாங்கள் உறையும் இனிய ஊரில்
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடல் – நற் 299/7-9
வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சினைப் போல பெருகும் அலைகளில்
காற்று மோதுவதால் ஒளிறும் நீர்த்துளிகள் மேலெழும்பும்
படர்ந்த கடலை
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/6,7
(நீ மூட்டிய தீ – )மிகுந்த காற்று எழுந்து மோதுவதால், சுடர்விட்டு எழுந்து, வெப்பமடைந்து
புதிதாய்த் தோன்றும் பிசிர்களையுடைய ஒளிவிட்டுச் சுட்டெரித்த பக்கங்கள்
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/82,83
வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும்,
மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல
புல் நுகும்பு எடுத்த நல் நெடும் கானத்து
ஊட்டு_உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/13-15
புற்கள் குருத்தினை விட்ட நல்ல நீண்ட காட்டில்
செந்நிறம் ஊட்டிய பஞ்சின் சிம்புகள் பரவியது போன்ற
செந்நிறமுடைய தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தே அழகுறுத்த
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/3
பின் செல்வோர், நீங்கிய வாயையுடைய சிம்புவுடன் சுடப்பட்ட கிழங்கினை நுகர
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/11,12
பெருங்கோவாகிய கிள்ளி கேட்க, பெரிய பிசிர் என்னும் ஊரின்கண்
ஆந்தை என்பாருடைய அடிக்கீழ் என்று சொல்லின்
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/7
பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்று சொல்லுவர் என் உயிரைப் பாதுகாப்போனை
வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய – ஐங் 461/1
கான் பிசிர் கற்ப கார் தொடங்கின்றே – ஐங் 461/2
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய – பதி 11/1
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி – பதி 17/4
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/25
வெண் தலை குரூஉ பிசிர் உடைய – பதி 42/22
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி – பதி 60/10
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் – பதி 62/5
பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின் – பதி 72/14
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர்/திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/4,5
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர்/மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/1,2
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர/புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/8,9
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்