சொல் பொருள்

(வி) 1. போகச்செய், ஓட்டு, 2. கொடு, 3. நீக்கு, விலக்கு,  4. இல்லாமல் செய்,  5. வெளியில் அனுப்பு, 6. நீளச்செய், விரிவாக்கு, 7. அழி,  8. செய்து முடி, 9. கட்டு,  10. குத்து,

2. (பெ) 1. குற்றம், 2. போக்குதல், அழித்தல்,  3. போக்கிடம், தடம், வழி,  4. கடந்துபோதல், 5. கழன்று விழுதல்,  6. ஒருவர்/ஒரு பொருள் செல்லும் விதம், 7. நீர், காற்று, தேர் ஆகியவற்றின் ஓட்டம், 8. போதல்,

சொல் பொருள் விளக்கம்

போகச்செய், ஓட்டு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cause to go, send, drive, give, remove, dispel, get rid of, send out, expand, destroy, ruin, complete, finish, bind, fasten, pound, fault, blemish, obliteration, route, passage, crossing over, get loosened and drop down, the way in which somebody behaves/something moves, the flow or movement of water, wind or a chariot, leaving

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ – அகம் 30/5,6

உப்பைக் கொண்டுசெல்லும் உமணர் அரிய துறைகளில் செலுத்தும்
வரிசை வண்டிகளின் வலிய காளைகளைப் போலக் குழுமி

மன்றுபடு பரிசிலர் காணின் கன்றொடு
கறை அடி யானை இரியல்_போக்கும்
மலை கெழு நாடன் மா வேள் ஆய் – புறம் 135/11-13

மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின், கன்றுடனே
கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும்
மலையையுடைய நாடனே, மா வேளாகிய ஆயே

நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார்
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து
போக்கும்_கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம்
காக்கும் இடம் அன்று – கலி 63/1-4

“பார்க்கும்போது நம்மைப் பார்த்துத் தொழுகின்றான், அதனைப் பிறர் காண்பாரே
என்று சற்றும் ஆராய்ந்துபாராதவன், ஊரார் பழி தூற்றுவர் என்று அவனை விலக்கி,
அவனை நீக்கினால், அவ்வாறு நீக்குவதால் தனக்கு ஏற்படும் வருத்தத்தை நினைந்து போகாமல் இருப்பான், மேலும், நாம்
அவனை இங்கு வராமல் காப்பது இயலாது

ஆர உண்டு பேர் அஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்று அவன் – பொரு 88,89

நிறைய உண்டு, பெரிய வருத்தத்தை இல்லையாக்கி,
மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது

புலி பொறித்து புறம் போக்கி – பட் 135

(பாயும்)புலி(ச்சின்னம்) இட்டு, (பண்டசாலைக்கு)ப் வெளியில் அனுப்பி

பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285

பருத்த நிலைகளைக்கொண்ட மாடங்களையுடைய உறையூர் (என்னும் தன்னூரை)விரிவாக்கி,

வன் கை பரதவர் இட்ட செம் கோல்
கொடு முடி அம் வலை பரிய போக்கி
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு_நீர் சேர்ப்பன்_தன் நெஞ்சத்தானே – நற் 303/9,12

வலிமையான கைகளைக் கொண்ட பரதவர் வீசிய நேரான கோலையும்
வளைந்த முடிச்சுகளையும் கொண்ட அழகிய வலை அறுபடுமாறு கிழித்து
கடுமையாக முரண்பட்டுப் பாய்ந்துசெல்லும் சுறாமீன்கள் சஞ்சரிக்கின்ற
ஆழமான நீர்த்துறையையுடைய தலைவன் தன் நெஞ்சத்தில்

நல_தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/1-4

பெண்மை நலமும் அழகும் வாய்ந்த சலவைப்பெண், கஞ்சியில் தோய்த்து எடுத்து
ஒருதரம் கல்லில் அடித்து முடித்து, குளிர்ந்த குளத்தில் இட்ட,
நீரில் அலசிவிடாத பருத்த ஆடையின் முறுக்கைப் போன்றிருக்கும்
பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள்
அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி
கை புதைஇயவளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்
போக்கி சிறைப்பிடித்தாள் – பரி 7/51-56

அனைவரும் விரும்பத்தக்க குணங்களையுடைய பாண்டியனின் வையை ஆற்றில் ஆடிமகிழ்வோருள்
ஒருத்தி, பீச்சுங்குழலுள் நீரைச் செலுத்தி மற்றவர்மேல் பீச்ச, அவர்கள் தமது தூய மலர் போன்ற கண்கள்
இமைக்காமல் விழித்து நோக்க, அங்கு அவர்களுள் ஒருத்தி
கைகளால் கண்களை மூடிக்கொண்டவளை
வெற்றியால் இறுமாந்து தன்னுடைய பொன் சரடால், கரும்பு வரையப்பட்ட அணை போன்ற மென்மையான தோள்களைக்
கட்டிச் சிறைப்பிடித்தாள்;

சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை – அகம் 393/10-12

திரிகையினால் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பட்ட வெள்ளிய அரிசியை
பூண் மாட்சிமைப்பட்ட உலக்கையால் மாற்றி மாற்றிக்குத்தி
உரலில் பெய்து தீட்டிய உரலின் குழி நிறைந்த அவ்வரிசியை

இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு – பொரு 85-88

இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்,
குற்றம் அற்ற பொன்(னால் செய்த)வட்டில் நிறைய, பல முறையும்
வார்த்துத் தந்துகொண்டே இருக்க, (வழிப்போன)வருத்தம் போம்படி,
நிறைய உண்டு

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின்
தொல் மா இலங்கை கருவொடு பெயரிய
நன் மா இலங்கை மன்னருள்ளும் – சிறு 116-120

நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய,
பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும்,

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 112-115

பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
குவிந்த இடத்தையுடைய வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி,
முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும்
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து)

பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை – பெரும் 431

பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்

போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/9

கழன்று போகாத பொன்னாலான வளையல்களை என் கைகளில் செறித்தார்.

அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் – நற் 165/1,2

மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
குறிதப்பிய அம்பு சென்ற முறையை நினைத்துப்பார்த்த கானவன்

புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர் – பரி 19/13

கண்டோர் விரும்பும் மாண்புள்ள குதிரையில் செல்வாரும், நல்ல ஓட்டம் அமைந்த தேரில் செல்வாரும்,

புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி
பெருகிய செல்வத்தால் மீட்டுத்தருவது இயலுமோ? – கலி 15/10,11

பொருள்மீது விருப்பம் கொண்டு, நீ இவளைக் கைவிட்டுப் போக எண்ணி, புதிதாகச் சேர்த்துப்
பெருகிய செல்வத்தால் மீட்டுத்தருவது இயலுமோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.