சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககால வீரன்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககால வீரன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A warrior of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இவனைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன. வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரத்து அன்ன – நற் 265/3-5 சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவனான, பொலிவுள்ள தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும் பாரம் என்னும் ஊரைப் போன்ற கறை அடி யானை நன்னன் பாழி ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்கு ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/9-14 உரல் போலும் அடியினையுடைய யானையைஉடைய நன்னனது பாழியிலுள்ள பலியிடற்கு அரிய தன்மையுடைய அஞ்சத்தக்க பேய்க்கு ஊட்டுதலை ஏற்றுக்கொண்ட வாய்மை பொருந்திய மிஞிலி என்பான் புட்களுக்குப் பாதுகாவல் ஆகிய பெரும் புகழினையுடைய வெள்ளம் போன்ற சேனையினையுடைய அதிகன் என்பானைக் கொன்று மகிழ்ந்து ஒள்வாள் அமலை என்னும் வென்றிக்கூத்தை ஆடிய போர்க்களப் பூசலைப்போல ஒன்னார் ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப ஆஅய் எயினன் வீழ்ந்து என – அகம் 181/3-7 பகைவர் பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிக்க பெரிய சேனைகளையுடைய போர் அடுதல் வல்ல மிஞிலி என்பான் அழிக்கின்ற வேலைச் செலுத்தியதால் முருகனைப் போன்ற வலிமையுடனே போரிட்டு, போர்க்களமெல்லாம் குருதியால் சிவந்துபோகுமாறு ஆய் எயினன் என்பவன் தோற்று மடிய வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து ஒள்வாள் மயங்கு அமர் வீழ்ந்து என – அகம் 208/5-9 வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான் அருள் பொருந்தும் வாழ்கையினையுடைய பாழி என்னும் ஊரின்கண்ணதாகிய ஓடையை அணிந்த யானையினையும் இயன்ற தேரினையும் உடைய மிஞிலி என்பானோடு நண்பகற் பொழுதில்செய்த போரின்கண் புண் மிக்கு ஒள்ளிய வாட்படை மயங்கிய போரினாலேயே வீழ்ந்தனனாக கொடி தேர் பொலம் பூண் நன்னன் புன்னாடுகடிந்து என யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் அஞ்சல் என்ற ஆஅய் எயினன் இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி தன் உயிர் கொடுத்தனன் – அகம் 396/2-6 கொடியணிந்த தேரினையும் பொன்னாலாய பூண்களையுமுடைய நன்னன் என்பான் புன்னாடு என்னும் நாட்டிலுள்ளாரை வெகுண்டெழுந்தானாக யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் நகரிடத்தே நின்று அஞ்சாதீர் என்று கூறிய ஆஅய் எயினன் என்பான் போரில்வெல்லும் பயிற்சியையுடைய மிஞிலி என்பானோடு பொருது தன் உயிரையும் தந்தான். அகம் 148-இல் சில பதிப்புகளில் மிஞிலியொடு என்பது ஞிமிலியொடு என்று காணப்படுகிறது. கடும் பரி குதிரை ஆஅய் எயினன் நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/7,8 கடிய செலவினையுடைய குதிரைகளையுடைய ஆய் எயினன் என்பான் நெடிய தேரையுடைய ஞிமிலி (மிஞிலி) என்பானோடு போர்புரிந்து களத்தில் இறந்தானாக இவற்றினின்றும் நாம் பெறுவது: மிஞிலி என்பவன் அரசன் நன்னனின் படைத்தலைவன். சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் ஆங்காங்கே அவ்வப்போது பல மன்னர்கள் இருந்தனர். அவர்களில் இந்த நன்னன் பெண்கொலை புரிந்த நன்னன் எனக் கொள்வது பொருத்தமானது. மிஞிலி பாரம் என்னும் நகரைக் காவல்புரிந்துவந்தான். அவன் வில்லோர் பெருமகன் என்று போற்றப்படுகிறான். மிஞிலி “வாய்மொழி மிஞிலி” என்று போற்றப்படுகிறான். சத்தியம் தவறாதவன் என்பது இதன் பொருள். இவன் ‘இகல் அடு கற்பு’க் கலையில் வல்லவன்..போரில்வெல்லும் பயிற்சியையுடையவன் என்பது இதன் பொருள். ஆய் எயினனைப் போலவே அதிகன் என்பவனும் பறவைகளைப் பாதுகாத்துவந்தான். மிஞிலி நன்னனுக்குத் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் பெரும்படையுடன் வந்து தாக்கிய அதிகனைப் பாழி நகரில் இருந்த பேய்த்தெய்வத்துக்கு (காளிக்கு) உயிர்ப்பலி கொடுத்தான். இந்த அதிகன் என்னும் பெயர், ஆய் எயினனின் இன்னொரு பெயராதல் வெண்டும் என்பார் ந.மு.வே.நாட்டார். ஆய்-எயினன் என்பவன் வெளியன் வேள் என்பவனின் மகன். வேண்மான் என்பது வேள் மகன் என்னும் பொருளைத் தரும். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் இந்த ஆய்-எயினன், மிஞிலியால் கொல்லப்பட்டான். புன்னாட்டின் தலைநகரம் வாகை. இந்த வாகைநகரை மீட்கும் போர் இவ்வூரில் நடைபெற்றதால் இதனை வாகைப்பறந்தலை என்றனர். புன்னாடு என்பது கொள்ளு விளையும் நாடு. இது புன்செய் நாடு ஆதலால் புன்னாடு எனவும் வழங்கினர். தேர்ப்படையுடன் வந்த பொலம்பூண் நன்னன் இதனைத் தனதாக்கிக்கொண்டான். புன்னாட்டு அரசனை “அஞ்சவேண்டாம்” என்று கூறிக்கொண்டு ஆய்-எயினன் என்பவன் நன்னனின் படைத்தலைவனான மிஞிலியைத் தாக்கினான். ஆனால் ஆய்-எயினன் போரில் மாண்டான்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்