Skip to content

சொல் பொருள்

(வி) 1. இழுத்துக் கட்டு, 2. ஓடு, 3. கோலமிடு, கோடுபோடு,

2. (பெ) 1. புள்ளி, 2. கோடு, 3. நிறம்,  4. பெண்களின் மார்பில் தொய்யிலால் தீட்டப்பெற்ற வரைவு, 5. வளையல்,  6. இசைப்பாடல், 7. தேமல் 8. ஒழுங்கு வரிசை, 9. அழகு,

வரிசை

சொல் பொருள் விளக்கம்

அரி என்பது அரிசி என்னும் பொருள் தருவதுபோல், வரி என்பது வரிசை எனப் பொருள் தருதல் குயவர் வழக்காக உள்ளது. உழவர் வழக்கிலும் வரிசைப் பொருள் வரிக்கு உண்டு. படைப்புப் போடும் போது ‘வரி’ வைப்பர். வரி மாறாமல் படைப்புப் போடுவர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tie, bind, fasten, run, flow, decorate by drawing lines, dot, line, stripe, colour, Ornamental marks on the breast, bangles, tune, melody, Spreading spots on the skin, orderly line, as of ducks in flight, beauty;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 68

(நூலால்)வரிந்து புனையப்பட்ட பந்துடன் பாவையும் தூங்கிக்கிடப்ப,

வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து – குறி 124

வண்ணத்தையுடைய வரிந்து கட்டப்பட்ட வில்லை எடுத்து, அம்புகளைத் தெரிந்து பிடித்து

துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 475,476

வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்,
காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்

எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் – நற் 267/2-5

மணல்மேட்டு நண்டின் பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம்,
ஒளிரும் பற்களையுடைய அழகிய இனிய நகையினை உடைய மகளிர்
வெயிலில் காயும் தினையைத் துழாவும் கையைப் போல், ஞாழலின்
மணம் கமழும் நறிய உதிர்ந்த பூக்களை இழுத்துச் சென்று வரிவரியாகக் கோலம் செய்யும் துறையைச்
சேர்ந்தவன்

மண் கொள வரிந்த வை நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு – புறம் 288/1,2

மண்ணைக் குத்திக்கொள்வதால் வரிவரியாகக் கோடுகள் போடப்பட்ட மிக்க கூரிய கொம்பினையுடைய
பெருமை பொருந்திய நல்ல ஆனேறு

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78

கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்

பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
புள் அணி நீள் கொடி செல்வனும் – திரு 150,151

பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும்

சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ – சிறு 12

சுரத்தின்கண்ணுள்ள கடப்ப மரத்தினுடைய கோடுகளாகிய நிழலிடத்தே தங்கி

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47

இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
பலவித நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப – நற் 225/7

தொய்யில் குழம்பால் தீட்டப்பட்ட அழகிய முலைகள் தம் மீது வரைந்த வனப்பை இழக்க,

வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4

வளைந்து இறங்குகின்ற, வளையல் அணிந்த முன்கையினையும், தித்தியாகிய வரி நிறைந்த அல்குலையும்
உடையவளே
– நச். உரை

பொன் வார்ந்து அன்ன புரிஅடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப – புறம் 135/5,6

பொன்னைக் கம்பியாகச் செய்தாற் போன்ற முறுக்கடங்கின நரம்பினையுடைய
இசைப்பாடலின் பொருண்மையொடு பயிலும் பாட்டு நிலந்தோறும் மாறிமாறி ஒலிப்ப

அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட
சுடர் காய் சுரம் போகும் நும்மை – கலி 22/19,20

அடித்து நீட்டப்பட்ட பொன் தகட்டைப் போல் ஒளி வீசும் எம் அழகிய தேமல் தம் அழகு கெட
ஞாயிறு காய்கின்ற காட்டுவழியைக் கடந்து போக எண்ணும் உம்மை

கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும்
வான் பறை குருகின் நெடு வரி பொற்ப – பதி 83/1,2

கரிய மேகங்களுக்கு முன்பாக, ஒழுங்கு குலைந்து எழுகின்ற
வெண்மையான சிறகுகளைக் கொண்ட கொக்குகள் பின்பு நீண்ட வரிசையாய்ச் செல்வதைப் போன்ற

விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைம் தார்
செ வாய் பைம் கிளி – அகம் 192/3-5

வானத்திலுள்ள
எய்யப்பெறாத அழகிய வில்லை ஒத்த பசிய மாலையினையும்
சிவந்த வாயினையும் உடைய சிறிய கிளி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *