Skip to content

சொல் பொருள்

(வி) 1. சேதப்படு, தேய்வடை, பழுதாகு, 2. அழிந்துபோ, காணாமற்போ, 3. பற, 4. வெளிப்படுத்த பேசு

2. (பெ) 1. வட்டமான தோற்கருவி, முரசு, 2. பறத்தல், 3. சிறகு, 

சொல் பொருள் விளக்கம்

1. சேதப்படு, தேய்வடை, பழுதாகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be worn out, impaired, wasted away, vanish, disappear, fly, drum, a round musical instrument made of animal skin, flying, wings

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189

குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய

உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை – அகம் 67/3,4

மேகங்கள் துளிபெய்தலை நீத்து அகன்று போதலின், இலைகள் யாவும் கெட்டொழிதலின்
மரங்கள் பொலிவற்றிருக்கும் கற்குவியல்கள் உயர்ந்துள்ள அகன்ற இடம்

தண் தாது ஊதிய வண்டுஇனம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை நீயே – அகம் 170/6,7

குளிர்ந்த தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிக்கு
பறத்தற்கு இயலாது சோரும் துறையையுடைய தலைவனுக்கு

பறை என்பது தோலினால் ஆன ஓர் இசைக்கருவி.
இன்று தோளில் இதனை மாட்டிக்கொண்டு இரண்டு நீண்ட குச்சிகளைக் கைக்கு ஒன்றாக வைத்து இதனை
அடித்து ஒலி எழுப்புவர்.

மலைவாழ் மக்கள் மான் தோலினால் ஆன ஒரு பறையை வைத்திருப்பர் என மலைபடுகடாம் கூறுகிறது.

நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 320-322

மருதநில மக்கள் தோலைப் போர்வையாகப் போர்த்துள்ள ஒரு பறையை வைத்திருந்தனர் எனப்பதிற்றுப்பத்து
கூறுகிறது.

போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும் – பதி 22/28

தோல் போர்த்துள்ள பறையை முழக்கி வெள்ளம் வரும்போது கரையை அடைக்க அழைப்பவர் ஒலியும்,

வாரைக்கொண்டு இழுத்துக்கட்டப்பட்ட ஒரு பறையும் உண்டு என அகநானூறு கூறுகிறது.

வறும் சுனை முகந்த கோடை தெள்விளி
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப – அகம் 321/2,3

நீரற்ற சுனையுள் புகுந்துவரும் மேல்காற்றின் தெளிந்த ஒலி
தோலினை இழுத்துக்கட்டிய பறை ஒலி போல மலைப் பிளப்பில் ஒலிக்க

பறையைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியங்கள் மிகப்பெரும்பாலும் பொதுவாகப் பறை என்ற சொல்லையே
பயன்படுத்துகின்றன.
எனினும் தட்டைப்பறை என்ற ஒரு வகைப் பறையைப் பற்றிக் குறுந்தொகை கூறுகிறது.

இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டைப்பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3

சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்

பன்றிப்பறை என்ற ஒருவகைப் பறையைப் பற்றி மலைபடுகடாம் கூறுகிறது

பன்றி_பறையும் குன்றக சிலம்பும் – மலை 344

பன்றிகள் (வராதிருக்கக் கொட்டும்) பறையொலியும்; (இவற்றின்)குன்றிடத்து எதிரொலியும்;

தொண்டகப்பறை என்று ஒருவகைப் பறைஇருந்ததாகவும் அறிகிறோம்.

தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து – அகம் 118/3,4

தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து
தெருக்களில் ஆடும் சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே

தவளைகளைப் போல அரித்த ஓசையை எழுப்பும் பறை அரிப்பறை என்னப்பட்டது.

அரி பறையால் புள் ஓப்பி – புறம் 395/7

அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த
கதிர்களை உண்டற்கு வந்து படியும் புள்ளினங்களை ஓட்டி

சற்றுப்பெரிய பறை கிணை அல்லது தடாரி எனப்பட்டது.

இரும் பறை கிணைமகன் – புறம் 388/3

பெரிய பறையாகிய தடாரியை இசைக்கும் பொருநன்

இந்தப் பறை வட்டவடிவமானது என்றும் பல இலக்கியங்கள் கூறுகின்றன.
மயில் தோகையில் உள்ள வட்டமான கண்களைப் போன்றது பறை என அகம் கூறுகிறது.

பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை – அகம் 15/4,5

பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள்

மலையில் இருக்கும் நிறைந்த சுனைகள் போன்று இந்தப் பறை இருப்பதாகவும் அகம் கூறுகிறது

பறை கண் அன்ன நிறை சுனை பருகி – அகம் 178/3

பறையின் கண்ணினை ஒத்த நிறைந்த சுனையின் நீரைப் பருகி

யானையின் பாதங்களைப் போன்று வட்டமாக இந்தப் பறை இருப்பதாகவும் அகம் கூறுகிறது.

பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்
திண்ணிலை பருப்பின் வய களிறு – அகம் 211/3,4

பறையினை ஒத்த வட்டமாகிய பரந்த அடியினையுடைய வலிய தாளினையும்
திண்ணிய நிலை வாய்ந்த கோட்டினையுமுடைய வலிய களிறு

இந்தப் பறைகள் நுனியில் வளைவாக இருப்பதாக மதுரைக்காஞ்சி கூறுகிறது.

கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523

வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்,

இந்தப் பறைகள் எழுப்பும் ஒலி யானையின் பிளிறலைப் போல் இருப்பதாகப் பொருநராற்றுப்படை கூறுகிறது.

வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை
வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 171,172

வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை

வாகை மரத்து நெற்றுகள் காற்றில் ஆடி சலசலக்கும் ஓசை பறையின் ஓசையைப் போல் இருப்பதாகக்
குறுந்தொகை கூறுகிறது.

ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5

ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற

உயரமான இடத்திலிருந்து ‘திடும்’ என விழும் அருவியின் ஓசை பரையின் ஓசையைப்போல் இருப்பதாகப்
பதிற்றுப்பத்து கூறுகிறது.

இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/24

இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை

மாசுணம் என்ற ஒரு விலங்கு யாழின் இசையைப் போன்ற இனிமையான இசையைக் கேட்டு மயங்கி நிற்குமாம்.
ஆனால் கேட்பதற்குக் கடுமையான ஓசையைக் கேட்டால் அது இறந்துவிடுமாம். அத்தகைய மாசுணம்
பறை ஒலியைக் கேட்டு இறந்துபடும் என்று தெரிவிக்கிறது கலித்தொகை தெரிவிக்கிறது.

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் – கலி 143/10-12

வஞ்சனையாக யாழ்வாசித்து, அந்த யாழிசையைக் கேட்டு மயங்கிநின்ற அசுணமாவை, இரக்கமில்லாமல்,
வஞ்சனையால் அதனைக் கொல்லும்படியாக, அதன் அருமையான உயிர் போகும்படி
பறையால் மிகுந்த ஒலியை எழுப்பியது போன்று, ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான்,

கடலின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலியைப் போன்றது பறை எழுப்பும் ஓசை என்கிறது கலித்தொகை..

நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக – கலி 149/1

வரிசையாக மிதக்கும் மீன்படகுகளே யானைகளாக, அலைகள் எழுப்பும் ஒலியே போர்ப்பறை ஒலி ஆக,

ஓங்கிப்பெய்த மழை அடங்கிப்போகும்போது மேகக்கூட்டங்கள் உறுமுகின்ற ஒலியை எழுப்புமே அவ்வாறானது
பறை ஓசை என்கிறது அகம்.

மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/1,2

சில்லென்ற மழையினை – நிலத்து இடமெல்லாம் குளிரும்படி பெய்து,
முழக்கம் அடங்கிப்போயிற்றே முரசுக் குரல் மேகம்;

சிலவகைப் பறைகள் இனிய ஓசையையும் எழுப்புவன என்கிறது புறநானூறு.

இன் இசை பறையொடு வென்றி நுவல – புறம் 225/10

இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்ல

மக்களின் வாழ்வில் இந்தப் பறைகள் பலவாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நெல்லறுக்கும் நேரத்தில் அறுப்போரின் களைப்புத்தீர பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.

வன் கை வினைஞர் அரி_பறை – மது 262

வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும்

கோடியர் எனப்படும் கூத்தர் தங்களின் கழைக்கூத்தின்போது இந்தப் பறையை ஒலித்திருக்கின்றனர்

கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 235,236

தீவிரமாய்ப் பறையடிக்கும் கழைக்கூத்தாடிகளின் பிள்ளைகளைப் போன்று,
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்,

ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5

ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற

அபாயகரமான சம்பவங்கள் நேரலாம் என்று கூறுவதற்காகத் தெருக்களில் இந்தப் பறையை ஒலித்துக்கொண்டு
செல்வர் என கலித்தொகை கூறுகிறது. தன் சுய நிலையிலில்லாத யானையைக் குளிப்பாட்டுவதற்கு ஆற்றுக்கு
ஓட்டிச் செல்லும்போது அதன் முன்னர் எச்சரிக்கையாகப் பறையை ஒலித்திருக்கின்றனர்.

நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு
பறை அறைந்து அல்லது செல்லற்க – கலி 56/32,33

தன் நிலையில் நிற்காத, கொல்லக்கூடிய யானையைக் குளிப்பாட்டச் செல்லும்போது செய்வதைப் போல்
பறை அறிவித்துச் செல்வது இல்லாமல் வெளியே செல்லவேண்டாம்

இறைவன் கொடுங்கொட்டி என்ற கூத்தினை ஆடும்போது பல பறைகள் முழங்கின என்கிறது கலித்தொகை.

படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்-கால் – கலி 1/5,6

ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ
கொடுங்கொட்டி என்னும் கூத்தினை ஆடும்போது,

ஏறுதழுவுதல் நிகழ்ச்சியின்போது இன்றும் பறைகள் இசைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அன்றும் அவ்வாறே
நடந்ததாகக் கலித்தொகை மூலம் அறிகிறோம்.

அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு – கலி 104/29-31

அவ்விடத்தில், பறை மிகுந்து ஒலிக்க, பலதரப்பட்டவரும் ஆரவாரிக்க,
வலிமையில் குறையாத இளைஞர்களின் ஏறுதழுவதலை எதிர்கொண்டு பாய்ந்தன,
நறும்புகை வலமாக எழ, விடுவதற்காக நிறுத்தப்பட்ட காளைகள்;

வரகங்கொல்லையில் களை எடுக்கும்போது, இந்தப் பறை இசைக்கப்பட்டிருக்கிறது.

கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி
களை கால் கழீஇய பெரும் புன வரகின் – அகம் 194/8,9

ஒலிக்கும் பறையின் ஒலியோடு பயிர்கள் வளையும்படி ஒதுக்கிக்
களையைப் பறித்துத் தூய்மை செய்த பெரிய கொல்லையில் விளைந்த வரகின்

விளைந்த பயிர்களின் மேல் வந்து படியும் பறவைகளை ஓட்ட பறையை ஒலித்திருக்கின்றனர்.

அரி பறையால் புள் ஓப்பி – புறம் 395/7

அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த
கதிர்களை உண்டற்கு வந்து படியும் புள்ளினங்களை ஓட்டி

ஊர்களில் அறிவிப்புச் செய்ய பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.

அறை இறந்து அவரோ சென்றனர்
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே – அகம் 281/12,13

பாறைகளைக் கடந்து நம் தலைவர் போய்விட்டார்
பறை அறைந்தது போன்ற அலரினை நம்பால் விடுத்து

மலைவாழ் குறவர்கள் குரவைக்கூத்தின்போது பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.

நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 320-322

சிற்றூர்களில் விழாக்காலத்தில் பெண்டிரோடு ஆடவரும் சேர்ந்து தெருவில் ஆடும்போது பறை
இசைக்கப்பட்டிருக்கிறது.

தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து – அகம் 118/3,4

தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து
தெருக்களில் ஆடும் சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே

போர்க்காலங்களில் போருக்கு ஆள் எடுக்கும் அறிவிப்பினைச் செய்ய ஊர்கள்தோறும் பறையறைந்து
செய்தி அறிவித்திருக்கின்றனர்.

இன்றும் செரு பறை கேட்டு விருப்பு_உற்று மயங்கி
வேல் கை கொடுத்து ———
—————————–
ஒரு மகன் அல்லது இல்லோள்
செரு முகம் நோக்கி செல்க என விடுமே – புறம் 279/7-11

இன்றும் போர்க்கு எழுமாறு வீரரை
அழைக்கும் பறையொலி கேட்டு மறப்புகழ்பால் விருப்புற்று அறிவு மயங்கி
வேலைக் கையிலே தந்து ————–
——————————
இந்த ஒரு மகனை அல்லது வேறு மகன் இல்லாதவளேயாயினும்
போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுக்கின்றாள்\

இந்தப் பறையை உரத்து இசைக்காமல், மந்தமான ஓசையில் அடித்தால் பேய்களும் நடனமாடும் எனப்
புறம் கூறுகிறது.

நிறம் கிளர் உருவின் பேஎய் பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/4,5

நிறம் மிக்க வடிவினையுடையபேய் மகளிர்
மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையினது தாளத்தே ஆட

இந்தப் பறையை நன்கு இசைக்கக்கூடியவர்கள் தாம் மனத்தில் நினைத்ததை அப்படியே ஒலித்துக்காட்டுவர்
என்கிறது கலித்தொகை..

ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா – கலி 92/21,22

பறைகொட்டுபவன் தன் மனத்தில் நினைத்ததை அப்படியே ஒலித்துக்காட்டும் பறையைப் போல்
உன் நெஞ்சத்தில்
விரும்பினதையே கனாவாகக் கண்டாய்!”

செல்வர்களின் புதல்வர்கள் இந்தப் பறையைத் தம் தோளில் கோத்துக்கொண்டு, அதன் முகப்பைக்
கோலால் தட்டி ஒலியெழுப்பி மகிழ்வர் என்கிறது நற்றிணை. அவர்களின் அந்தப் பறையின் முகப்பில்
குருவிகள் போன்ற ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும் என்றும் அறிகிறோம்.

பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ – நற் 58/1-4

நிறைந்த பழமையான செல்வத்தைப் பெற்றவரின் பொன்தாலி அணிந்த புதல்வர்
தமது சிறிய தோளில் சேர்த்துக்கட்டிய செவ்வையாக அரித்து ஒலிக்கும் பறையின்
முகப்பில் எழுதப்பட்ட குருவி அடிக்கப்படுவதைப் போல
சாட்டைக் குச்சியால் அடிக்கப்படுவதாக 

பறை இசையைக் கேட்க இங்கே சொடுக்கவும்

பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15

இளமையான காலையுடைய கொக்கின் (அங்குமிங்கும்)மெதுவாகப் பறந்துதிரியும் கூட்டம்

தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும் – குறு 166/1,2

குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட
நாரைக்கூட்டம் இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *