Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு வகைக் குளத்து மீன்,

சொல் பொருள் விளக்கம்

ஒரு வகைக் குளத்து மீன், இது 16 அங்குலம் வளர்வதும் வெண்ணிற முள்ளதுமான மீன் வகை.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Scabbard-fish, silvery, attaining 16 in. in length, Trichiurus haumela

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குளங்களில் இதனைத் தூண்டில் போட்டுப் பிடிப்பர்.

கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 284-288

(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் வலித்துக் கட்டின
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்

குளத்துக்குள் இறங்கி வலைபோட்டும் இம் மீனைப் பிடிப்பர்.

கண்பு மலி பழனம் கமழ துழைஇ
வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 454,455

சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்(துண்டங்களை)

இது நீருக்குள் அடிக்கடி பிறழக்கூடியது. இதன் நிறமும் வடிவமும் வாளைப் போன்றிருப்பதால், இது
பிறழ்வது வாளைச் சுழற்றுவது போலிருக்கும். இதனால் பார்ப்போரை மருட்டும்.

வாளை வாளின் பிறழ நாளும் – நற் 390/1

வாளை மீன்கள் வாளைப் போல பிறழ

அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/3,4

நெல்லறுப்போர் களத்தில் குவித்த நெற்கதிர்குவைக்கு அயலாக, பெரிய
கரிய பிடரியையுடைய வாளைமீன் துள்ளிப்பாயும் மருதநிலத்தலைவனே

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை
களிற்று செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு – நற் 310/1-4

விளக்கின் சுடரைப் போன்று சுடர்விட்டு நிற்கும் தாமரையின்
யானைச் செவியைப் போன்ற பசிய இலைகள் திடீரென அசைய,
நீருண்ணும் துறையில் நீர்மொள்ளும் மகளிர் வெருண்டு ஓட,
வாளை மீன் நீருக்குள் பிறழும் ஊரனாகிய தலைவனுக்கு,

குளத்து மடையைத் திறக்கும்போது மடைநீருடன் வெளிவந்து வயல்வரை செல்லும்.

படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/3-8

இதன் பிளந்த வாயை ஒப்ப வாயமைத்து விரலுக்கு மோதிரம் செய்துகொள்வர்.

வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 143,144

வாளைமீனின் பிளந்த வாயைப் போன்ற வளைவை உண்டாக்கிச்
சிவந்த விரலில் மாட்டிய சிவந்த நிறத்தையுடைய (முடக்கு அல்லது நெளி என்னும்)மோதிரத்தையும்;(கொண்டு)

இது பொய்கைகளிலுள்ள நீர்நாய்களுக்கும் கொக்குகளுக்கும் இரையாகும்.

அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/1,2

இறுகப் பின்னிய கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்
வாளை மீனை அன்றைய ஊணவாகப் பெறும் ஊரினனான தலைவனின்

பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/1,2

பொய்கையில் வாழும் புலவு நாற்றத்தையுடைய நீர்நாயானது
வாளை மீனை தன் அன்றைய இரையாகப் பெறும் ஊரைச் சேர்ந்த தலைவனே!

நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை – அகம் 276/1,2

நீண்ட பெரிய பொய்கையில் இரையை விரும்பிப் புறப்பட்ட
வெள்ளிய வாளைப் போத்தினை உண்ணும்பொருட்டு நாரையானது

இது கரையோரத்து மாமரங்களிலிருந்து விழும் மாங்கனிகளைக் கவ்வி விளையாடும்.

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2

வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்,

கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் – குறு 164/1,2

கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்
கொத்துக்கொத்தானை தேமாமரத்தின் இனிய பழத்தைக் கௌவும்

சில வகை வாளை மீன்களுக்குக் கொம்பு இருக்கும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

காலை தந்த கணை கோட்டு வாளைக்கு – அகம் 126/8

விடியலிற் கொணர்ந்த திரண்ட கோடுகளையுடைய வாளை மீனுக்கு

ஆனால், இந்தக் கோடு என்பது அதன் மீசை என்பர் ஔவை.சு.து.அவர்கள்.

கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ – புறம் 249/2

திரண்ட கோட்டையுடைய வாளைமீன் நீர்மேலே பிறழ
– வாளை மீனின் மீசை ஈண்டுக்கோடு எனப்பட்டது – ஔவை.சு.து.உரை விளக்கம்

மற்ற சில மீன்களுடன் ஒப்பிடும்போது இதன் கழுத்துப்பகுதி திடமாக இருப்பதால் இது இரும் சுவல் வாளை
எனப்படுகிறது.

இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண் – புறம் 322/8

பெரிய பிடரையுடைய வாளைமீன்கள் துள்ளிப்பாயும் அழகிய இடத்தையுடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *