Skip to content
இலஞ்சி

இலஞ்சி என்பதன் பொருள் வாவி, நீர்நிலை, நீர் தேக்கம், கோட்டைச் சுவர், மதில், மாமரம், மகிழ மரம்

1. சொல் பொருள்

(பெ) 1. வாவி, நீர்நிலை, நீர் தேக்கம் 2. கோட்டைச் சுவர், மதில், 3. மாமரம், மகிழ மரம்

2. சொல் பொருள் விளக்கம்

இலஞ்சி என்பது பன்னிற மலர்கள் வனப்புறத் திகழும் கண்கவர் நீர்நிலையாம். ஏரி, குளம், கண்வாய் என்பவற்றினும் எழில் வாய்யதது இலஞ்சி. ஆகலின் தேவர்களால் அமைக்கப் பட்டது எனப்புனைந்து கூறும் தொன்மக்கதைகள் உள வாயின.

மகிழம் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும். இது வகுளம், இலஞ்சி, மகிழ் என்றும் அழைக்கப்படும்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

tank for drinking and other purposes, reservoir

wall round a city

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

160 குறிஞ்சி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை 
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின்	5
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி
முது நீர் இலஞ்சி பூத்த குவளை
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் காணா ஊங்கே		10 – நற் 160/8

நாட்பட்ட நீரினைக்கொண்ட பொய்கையில் பூத்திருக்கும் குவளை மலர்களை
எதிர் எதிராக வைத்துக்கட்டியதைப் போன்ற இவளது
செவ்வரி பரந்த செழுமையும் குளிர்ச்சியும் மிகுந்த கண்களைக் காண்பதற்கு முன்னர்

91 மருதம்
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்
பல ஆகுக நின் நெஞ்சில் படரே
ஓவாது ஈயும் மாரி வண் கை			5
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே
* ஔவையார் – குறு 91/2

ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கிற கொடியாகிய பிரம்பின், புறத்தில் வரிகொண்ட விளைந்த கனியை,
ஆழமான நீரையுடைய குளத்தில் வாழும் கெண்டை கௌவும்...

(குண்டு = ஆழம்)

அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி		240
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி		245
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி
களிறு மாய்க்கும் கதிர் கழனி
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த
முள் தாள சுடர் தாமரை - மது 248

விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா	220
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின்
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய		225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை
தாரொடு பொலிந்த வினை நவில் யானை
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை - மலை 228,229

94
மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சி பழனத்ததுவே
கழனி தாமரை மலரும்
கவின் பெறு சுடர்நுதல் தந்தை ஊரே	5 - ஐங் 94/3

278
சிலம்பின் வெதிரத்து கண்விடு கழை கோல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே		5 - ஐங் 278/2,3

186 மருதம் பரணர்
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும்			5
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே
கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட			10
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து
இன்னும் பிறள்-வயினானே மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன்			15
காவிரி வைப்பின் போஒர் அன்ன என்
செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே		20 - அகம் 186/3

வலிய தூண்டிற்கயிற்றினையுடைய மீன்பிடிப்போர், மீன் இரை கோத்த முள்ளினைப் பற்றியதை உணர்ந்து
இழுக்கும்
மீன் மிக்க நீர்நிலையில்...

236 மருதம் பரணர்
மணி மருள் மலர முள்ளி அமன்ற
துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்
அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு			5
பனி படு சாய் புறம் பரிப்ப கழனி
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ
மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன் நன்றும்
உய்ந்தனென் வாழி தோழி அல்கல்			10
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப
கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை			15
ஆட்டன்அத்தியை காணீரோ என
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல					20
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே - அகம் 236/2

37 மாறோக்கத்து நப்பசலையார்
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த
வேக வெம் திறல் நாகம் புக்கு என
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல்		5
சினம் கெழு தானை செம்பியன் மருக
கராஅம் கலித்த குண்டு கண் அகழி
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி		10
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர்
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத்தானே - புறம் 37/10,11

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.