Skip to content
ஓரி

ஓரிகடை எழு வள்ளல்களுள் ஒருவன்.

1. சொல் பொருள்

(பெ) 1. குதிரையின் பிடரி மயிர்,

2. தேன் முதிர்தலாற் பிறக்கும் நீலநிறம்,

3. ஓரி என்ற ஒரு கடை எழு வள்ளல்களுள் ஒருவன், அவனுடைய குதிரை

4. ஒற்றைக் குரங்கு, ஒற்றை யானை ஆகியவற்றை ஓரி எனல் இலக்கிய வழக்கு

5. ஓரி என்பது ஒற்றைப்பெரும் பேய் எனக் குற்றால வட்டாரத்திலும்,

6. நீளம் என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்திலும்,

7. ஒல்லி என்னும் பொருளில் மதுரை வட்டாரத்திலும் வழக்கில் உள்ளது.

2. சொல் பொருள் விளக்கம்

ஓரி விற்போரில் வல்லவர். அதனால் இவரை “வல்வில் ஓரி” என்றும் அழைப்பர். கொல்லி மலையையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் வல்வில் ஓரி ஆண்டு வந்தான். இவன் அம்பு எய்தால் குறி தவறுவதில்லை. அவன் வைத்திருந்த வில்லும் வலிமை வாய்ந்தது. கூர்மையான அம்புகளும் அவனிடத்தில் எப்பொழுதும் இருக்கும். அதனாலேயே அவனுக்கு “வல்வில் ஓரி’ என்ற பெயரும் ஏற்பட்டது.

தமிழகத்தின் கொல்லிமலைப்பகுதியில் ஆண்டுதோறும் வல்வில் ஓரியின் நினைவாக திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஒற்றைக் குரங்கு, ஒற்றை யானை ஆகியவற்றை ஓரி எனல் இலக்கிய வழக்கு. ஓரி என்பது ஒற்றைப்பெரும் பேய் எனக் குற்றால வட்டாரத்திலும், நீளம் என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்திலும், ஒல்லி என்னும் பொருளில் மதுரை வட்டாரத்திலும் வழக்கில் உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

mane, dark blue colour of matured honey, Name of one of the seven liberal chiefs of sangam era, his horse

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.
திணை:பாடாண். துறை: பரிசில்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. புறநானூறு - 204 

 புலவர் கழைதின் யானையார் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் சென்றார்.

`ஈ’ என்று பல்லை இளித்துக்கொண்டு இரத்தல் இழிவு. அப்படி இரப்பவனுக்கு ‘இல்லை’ என்று சொல்லி ஏதும் கொடுக்காமல் இருப்பது அதைக்காட்டிலும் இழிவானது.

‘இதனைப் பெற்றுக்கொள்’ என்று ஒருவனுக்கு வழங்குவது உயர்ந்த செயல். அவ்வாறு வழங்குவதை ‘எனக்கு வேண்டாம், நான் பெற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது கொடுப்பதைக் காட்டிலும் மேலானது.

தெளிந்த நீரை உடைய கடலில் செல்வோர் அதன் நீரை உண்ணமாட்டார்கள். வளர்க்கும் ஆடுமாடுகளும், காட்டு விலங்கினங்களும் சென்று உண்ணும் சேறுபட்டக் கலங்கல் நீரே ஆயினும் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த நீரைத் தேடியே விரும்பி மக்கள் செல்வர்.

ஓரி, கருமேகம் வானத்திலிருந்து சுரக்கும் மழை போல வழங்கும் வள்ளல் நீ.

உன்னிடம் பரிசில் கிடைக்காவிட்டால், தான் புரப்பட்டு வந்த புள் (நிமித்த காலம்) சரியில்லை என்று, நாடி வந்தவர் நொந்துகொள்வார்களே அல்லாமல் வள்ளல்களைப் பழிக்கும் வழக்கம் இல்லை. 

அதனால் உன்னை நான் நொந்துகொள்ள மாட்டேன். நீ நீடு வாழ்க.  நன்றி

`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,
`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் கு வையடும் விரைஇக், `கொண்ம்` எனச்,
சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமை
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே! புறநானூறு 152

ஓரி வில் வேட்டையில் வல்லவன்.
அவன் வேட்டையாடிய அம்பானது 
யானையை விழச் செய்துவிட்டு, 
புலியைக் கொன்றுவிட்டு, 
மானை உருண்டுவிழச் செய்துவிட்டு, 
பன்றியை வீழ்த்திவிட்டு, 
அருகில் புற்றில் இருந்த உடும்பின்மீது பாய்ந்து நின்றதாம்.

இப்படிப்பட்ட திறமையை ‘வல்வில் வேட்டம்’ என்று குறிப்பிடுவர்.

இப்படி உடும்பின் மீது பாய்ந்து கிடக்கும் அம்பினை எய்தவன் யார்? 

வேட்டையாடி விற்றுப் பிழைப்பவன் அல்லன். 
செல்வம் மிக்கவன் என 
அவன் மார்பில் அணிந்திருக்கும் ஆரம் காட்டுகிறது. 

பயமலை(கொல்லிமலை) அரசன் ஓரியாக இருக்குமோ, 
வேறு ஒருவனோ? 
யார் ஆயினும் ஆகுக.

விறலி! 

இவன்மீது ஒரு வண்ணம் பாடுவோம். 
நீங்களும் முழவை முழக்குங்கள். 
யாழை மீட்டுங்கள். 
களிறு போல் ஒலிக்கும் தூம்பு ஊதுங்கள். 
எல்லரித் தாளத்தில் இசை எழுப்புங்கள். 
பதலை என்னும் குடத்தில் கடப்பண் எழுப்புங்கள். 
மதலை என்னும் பண்-ஆட்டக்கோலை கையில் ஆட்டுங்கள். 

21 பண்திறத்தை முறையாகப் பாடி முடித்த பின்னர் 
நம் வழக்கப்படி “கோ” என்று கூட்டிசை எழுப்புவோம் – என்றார் புலவர்.

பாணர்கள் அவ்வாறே செய்தனர். 
முடிவில் ‘கோ’ என்னும் ஒலியுடன் கூட்டிசை எழுப்பியபோது 
அந்த இசையைக் கேட்ட ஓரி 
அவர்கள் தன்னை அரசன் என உணர்ந்துகொண்டனர் 
என எண்ணி நாணிக்கொண்டு நின்றான்.

நாணி நின்றது கண்ட புலவர் 
இவன் உண்மையிலேயே அரசன் (ஓரி அரசன்) 
என உணர்ந்துகொண்டார். 

“நாங்கள் தொலைவிலுள்ள நாட்டிலிருந்து வருகிறோம். 
இங்கு உனக்கு ஒப்பான வேட்டுவர் யாரும் இல்லை” 
என்று பாராட்டிவிட்டுத் தம் விருப்பத்தைத் தெரிவிக்க முயன்றார். 

அதற்குள் அவன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த 
மானைச் சுட்டு அதன் கறியையும், 
ஆவின் நெய் போன்ற தேனையும் கொடுத்து 
உண்ணச் செய்துவிட்டு, 
அவன் மலையில் கிடைக்கும் குறைவற்ற பொன்மணிக் குவியலை 
அந்தக் காட்டிலேயே தந்து 
ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினான். 

அவன் கொல்லிமலை அரசன் (வல்வில் ஓரி)  

இவன் ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'

மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,
அடுபோர் ஆனா, ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய, நன்றும்
சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,
பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க,
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே? புறநானூறு 153

ஓரியின் தந்தை பெயர் ஊதன். இதனால் இவனைப் புலவர் 'ஆதன் ஓரி' எனக் குறிப்பிடுகிறார். கொல்லிநாட்டை இவன் போரிட்டு வென்றதற்கான குறிப்பும் இதில் உள்ளது. இவன் தன் கையில் பசும்பூண் உணிந்திருந்தான்.
இவன் தன்னிடம் இரப்போர்க்கு யானைகளை அணிகலன்கள் பூட்டி நல்குவான். புலவரது சுற்றம் யானைகளோடு நீரில் பூக்காத குவளை மலரையும் (பொற்குவளை) விருதாகப் பெற்றனர். வான்நார் எனப்படும் வெள்ளிநாரில் தொடுத்த கண்ணிகளும், அணிகலன்களும் பெற்றனர். இவனிடம் இருக்கும்போது பசி என்பதே இவர்களுக்கு இல்லாமல் போனதால் பசி போக்க ஆடுவதையும் பாடுவதையும் மறந்துபோயினர்.

மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே
தலைமகன் செலவு அழுங்கியது நற்றிணை 52

நீயோ இவளைப் பிரிந்து பொருள் தேடும் எண்ணத்திலேயே இருக்கிறாய்.
ஓரி அரசன் கொடை போல மிகுதியாகச் சிறப்புடையதாகக் கிடைப்பதாயினும் அச் செல்வத்தின் இன்பம் இவள் இன்பத்தோடு வைத்து எண்ணுகையில் மிகச் சிறியதே ஆகும் என்று தெரிந்துகொள் – என்று தலைவன் தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.

பாதிரிப் பூவை அதிரல் கொடியில் வைத்துத் தகடுபோல் கட்டி இவள் கூந்தல்-பின்னலில் கட்டிக்கொண்டிருக்கிறாள். அது மணம் கமழ்கிறது. 
அதனை முகர்ந்துகொண்டே இவளைத் தழுவ விரும்புகிறேன்.
சுணங்குவரிக் கோடுகளுடன் அழகு பெற்றிருக்கும் இவள் மார்பகத்தை [ஆகம்] அரவணைக்க விரும்புகிறேன்.
வீங்கி வியர்க்க வியர்க்க [உவர்க் கவவு] அரவணைத்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்.

நீயோ, பொருள் தேடும் முயற்சி சிறக்கவேண்டும் என்று எண்ணி, நல்ல நாளிலும் பிரிந்திருக்கும்போதும் போதும் இன்னும் போதாதென்று நிறைவில்லாமல் இருக்கிறாய். [அமையலையே]

என் நெஞ்சமே, நீ வாழ்க.

விரும்பிய போரில் வெற்றி காணும் மழவர் குடிமகனாகிய ஓரி அரசன் கொடையாக வழங்கும் வளமை போன்ற பெருஞ்செல்வத்தையே நீ ஈட்டிப் பெறுவதாயினும் அது சிறிது என எண்ணிக்கொள்.

இப்படித் தலைவன் கூறுகிறான். நன்றி

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூந் தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது நற்றிணை- 265

ஓரி ஆளும் கொல்லிமலை மயில்தோகை போல் கூந்தல். 
இவற்றுடன் இவள் நம்மிடம் இருக்கிறாள்.

நெஞ்சே, நமக்கென்ன குறை? 
தலைவன் கூறுகிறான், 
மிஞிலி – வில்லோர் பெருமகன் \ வீளை ஒலி போல் அம்பு பாயும் வில்லை உடையவர்கள் மிஞிலியின் வில்லோர் \ புனத்தில் விளைந்திருக்கும் இறுகு விளைச்சலை மேயும் மான்கள் மீது அம்பு எய்பவர் அந்த வில்லோர் \ கிளைத்த கொம்பு முற்றிய நிலையில் சேற்றைக் கிண்டிக்கொண்டு செல்லும் ஆண் புள்ளிமான் மீது வில்லோர் அம்பு எய்வர் \ மிஞிலியின் தலைநகர் பாரம் \ மிஞிலி மார்பில் சந்தனம் பூசியிருப்பான் \ அழகிய கட்டுடைய தோளை உடையவன் \ மிஞிலி போல் மென்மையான மார்பகம் கொண்டவள் இவள்.
சென்னி – சோழ அரசன் சென்னி ‘ஆர்’ என்னும் ஆத்தி மலையைத் தலையில் சூடிக்கொண்டிருப்பான் \ சென்னி போல் பூ முடித்த தலையை உடையவள் இவள். 
ஓரி – மழையைப் போலக் கொடை வழங்கி மகிழ்பவன் \ கொல்லிமலைத் தலைவன் \ இந்தக் கொல்லிமலையின் மூங்கில் காட்டில் வாழும் மயில்தோகை போல் தழைத்திருக்கும் மென்மையான கூந்தலை உடையவள் இவள். நன்றி

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்
திதலை அல்குல் பெருந் தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன்
தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லியது நற்றிணை- 6

அவன் தன் நெஞ்சுக்குச் சொல்லித் துணிவை உண்டாக்கிக்கொள்கிறான்.
அவள் சொன்ன குறியிடம் தெரியாமல் தப்பியதால் நேற்று அவளை அடைய முடியாமல் போய்விட்டது.
அவள் என்னைக் காணாமல் பித்துப் பிடித்திருப்பாள். அவள் முன் நான் வந்திருப்பதை யாராவது சொன்னால் ‘அவர் யார்’ என்று கேட்கமாட்டாள்.
நெஞ்சே! நீயே உன் தோற்றத்துடன் சென்றால் நல்லது.

அவள் அழகு
நீரில் வளர்ந்தாடும் குவளைக் கொடியின் நார் போல வலிமை இல்லாத மாமை உடையவள்.

மாமை = பெண்மையின் மென்மை, கொடிபோல் வளைந்தாடும் மென்மை
குவளை போல் ஏறிட்டுப் பார்க்கும் ஈரமான எழில் மிக்க கண்கள்.
திதலை மடிப்பு உள்ள பெண்ணுறுப்பு.
பெருத்து அகன்ற மார்பகத் தோள்.
சிறிய உருவம்.

கருநிறம் கொண்ட செறிந்த கூந்தல்
ஓரி அரசனின் காடெல்லாம் மணம் வீசும் கூந்தல்

ஓரியின் கானம்
மான் உண்ணும் உணவாகப் பயன்படும் பயன்படும் மூக்கு வளைந்திருக்கும் குமிழம் பழம் விளைந்திருக்கும் கானம். நன்றி

வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரைக் கண்டு? 'மதி அறியா
ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ
தோழி! அவனுழைச் சென்று - கலித்தொகை 114

படியாத ஓரி முடி தலையில் கொண்டு வாரி இருபுறமும் தொங்கும்படி முடிந்திருக்கும் புதல்வன் அழுகிறான் வந்து அருள் புரிக என்று அவனிடம் சொல். (தலைவி அழுவது தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்தப்படுகிறது) புதிதாக மாலை கட்டி எனக்குத் திருமணம் செய்துவைக்க முயலும் பெற்றோரைக் கண்டு, இவள் மதித்திருப்பதை எண்ணிப் பார்க்காத ஏழைகளே, என்று பெற்றோரிடம் சொல். - தலைவி தோழியிடம் சொல்கிறாள். நன்றி


யாம இரவின் நெடுங்கடை நின்றுதேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின், வெண்கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், 5
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள்வாள் மயங்குஅமர் வீழ்ந்தெனப், 'புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று 10
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி,
நிழல்செய்து உழறல் காணேன், யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினஞ் சிறந்து,
உருவினை நன்னன், அருளான் கரப்பப்,
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர் 15
குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்,
வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை
அகுதை கிளைதந் தாங்கு, மிகுபெயல்
உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல,
நாணுவரை நில்லாக் காமம் நண்ணி 20
நல்கினள், வாழியர், வந்தே- ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாறும்,
ஓர்நுண் ஓதி மாஅ யோளே! அகநானூறு 208

அரசன் ஆய்-எயினன் சிறந்த வள்ளல். 
வெளியன் வேண்மான் (வேளிர் குடி மகன்) என்பவனின் மகன். 
தேமுது குன்றம் அவன் நாடு. 

கையில் சிறிய கோலை வைத்துக்கொண்டு குறி சொல்லும் குறிக்கக்காரர்கள் அவன் குன்றத்தைச் சிறப்பித்துப் பாடுவர். 

யாமத்து இரவாயினும் சரி. அவர்கள் பாடினால் அவர்களுக்குத் தந்தம் கொண்ட யானையைப் பரிசாக நல்குவான்
2
பாழி என்னும் ஊரில் எயினன் பறவைகளைப் பேணி வளர்த்துவந்தான். 
அந்த ஊர் பாழிப்பறந்தலை என்னும் போர்க்களமாக மாறியது. 
மிஞிலி அவனைத் தாக்கினான். 
யானைப்படையும் தேர்ப்படையும் கொண்டு தாக்கினான். 
எயினன் வாளேந்திப் போரிட்டான். 
நண்பகல் வேளையில் பெருங்காயம் பட்டுப் போர்க்களத்தில் எயினன் வீழ்ந்தான்.
3
அவன் பேணிவந்த பறவைகள் வானத்தில் பறந்து வெயில் அவன்மேல் படாமல் சிறகுகளை விரித்து நிழல் செய்தன. 
“இந்தக் காட்சியை நான் காணமாட்டேன்” என்று நன்னன் சொல்லிவிட்டான்.
4
இந்த நன்னன் போரை மூட்டியவன் (உருவினை). போர்க்களத்துக்கு வரவில்லை. 
எயினன் மேல் அருளும் காட்டவில்லை. 
ஒளிந்துகொண்டான்.
5
இதனால் பதைபதைத்துப் போன (பெருவிதுப்பு) வேளிர் குடி மகளிர் அகுதை அரசனிடம் முறையிட்டுக்கொண்டனர். 
செம்பூ மாலை அணிந்த மார்பில் அடித்துக்கொண்டு முறையிட்டுக்கொண்டனர். 
வேளிர்க்கு நேர்ந்த பழியைப் போக்கும் வகையில் அகுதை பெரும்படையுடன் சென்று நன்னனைப் பழிவாங்கினான். 
அகுதை வேள்மகளிர் துன்பத்தைப் போக்கியது போல என் காதலி என் துன்பத்தைப் போக்கினாள்.
6
உப்பால் கரை போட்டு வெள்ளத்தைத் தடுக்க முடியுமா? 
அப்படித்தான் அவளது காமத்தை அவளது நாணத்தால் தடுக்க முடியவில்லை. 
அவள் என்னிடம் வந்தாள். 
தன்னை எனக்குக் கொடுத்தாள். அவள் வாழ்க.
7
ஓரி அரசனின் கொல்லிமலை பலாப்பழம் மிக்கது. 
அங்கே காந்தள் பூக்கள் (கார்மலர்) மணம் கமழும். 
அந்த மணம் தன்மேல் கமழும் மேனியை உடையவள் அந்த மாயோள். 
அந்த மாயோள் தன்னை எனக்குத் தந்தாள். அவள் வாழ்க. நன்றி

தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்அன்னையும் அருந்துயர் உற்றனள், அலரே,
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்,
எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த 5
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி !- அவரரே,
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், நிறைஇறந்து 10
உள்ளார் ஆதலோ அரிதே - செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி, 15
நிலைபெறு கடவுள் ஆக்கிய,
பலர்புகழ் பாவை அன்னநின் நலனே - அகநானூறு 209

அழாதே (ஆழல்) தோழி. 
பல்லாண்டு வாழ்க. 


“என் தோள் பழைய பொலிவை இழந்துவிட்டது. 
அதனைப் பார்த்துத் தாயும் நாள்தோறும் வருந்துகிறாள். 
ஊரே அலர் தூற்றுகிறது. 

தலையாலங்கானம் போரில் செழியன் (தலையாலங்கானச் செரு வென்ற நெடுஞ்செழியன்) எழுவர் கூட்டணிப் படையை வென்றபோது வெற்றி ஆரவாரம் செய்தது போல அலர் தூற்றுகின்றனர்” என்று சொல்லிக்கொண்டு அழவேண்டாம். 


செழியன், தென்னர் கோமான் எனவும், 
’இயல்தேர் செழியன்’ எனவும் 
போற்றப்பட்டவன். 
கணையமரம் போன்ற தோளை உடையவன். 
அழகிய வேலைப்பாடுடைய தேரில் ஏறிப் போரிட்டவன்.

2
யானைப் படையை நடத்தி வீரப்போர் புரியும் அரசன் புல்லி. 
இவன் நாடு மூங்கிலடர்ந்த வேங்கடம். 
இந்த வேங்கட மலையைக் கடந்து சென்றிருந்தாலும், அவர் உன்னை நினைக்காமல் இருக்க மாட்டார். 

3
முள்ளுர் மன்னன் காரி. (கடையெழு வள்ளல்களில் ஒருவன்) 
இவன் சிறந்த வேல் வீரன். 
காலில் வீரக்கழல் அணிந்தவன். 
இவன் ஓரி (கடையெழு வள்ளல்களில் ஒருவன்) அரசனைக் கொன்றான். 
ஓரி வில் வீரன். 

வென்ற கொல்லிமலை நாட்டைக் காரி சேரலர்களுக்கு (சேரர்களுக்கு) வழங்கினான். 
கொல்லிமலையில் கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட பாவை (பெண்தெய்வப் புடைப்போவியம்) உள்ளது. 
அந்தப் பாவை போன்று அழகு மிக்கவள் நீ. 
உன் அழகை அவர் நினைக்காமல் இருக்கமாட்டார். - நன்றி

முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;  5
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,     10
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,  15
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்  20
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!     25
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!
இசை மேந்தோன்றிய வண்மையொடு,
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! புறநானூறு 158

முதிரமலை நாட்டு வேந்தே, குமண, ஏழு வள்ளல்களும் இறந்த பின்னர் நாடி வருபவர்களின் வறுமையைப் போக்க நீ இருக்கிறாய் என்று உன்னை நினைத்துக்கொண்டு வந்துள்ளேன். உன் வேல் பகைவரை வென்று மேம்படுவதாகுக.

குமணனுக்கு முன் இறந்துபோன ஏழு வள்ளல்கள்

பாரி: சங்கும் முரசும் முழங்க முற்றுயிட்ட அரசரோடு போரிட்ட பறம்புமலை அரசன்
ஓரி: கொல்லிமலை அரசன்
மலையன்: கருங்குதிரை மேல் வந்து போரிட்டு வென்றவன். மழை போல் வழங்கும் கொடையாளி (காரி)
எழினி: கூர்மையான வேல்வீரன். கூவிளம் பூ மாலை அணிந்தவன்
பேகன்: கடவுள் (பழனிமுருகன்) காக்கும் குகையை உடைய பெருங்கல்-மலை நாட்டு அரசன்.
ஆய்: மோசிக்கீரனாரால் பாடிப் போற்றப்பட்டவன்.
நள்ளி: பகைவர்களை ஓடச்செய்த்தோடு, ஆர்வத்தோடு வருவோரின் அல்லலைப் போக்க மறுக்காமல் வழங்கியவன்

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. குறுந்தொகை 100. தலைவன் கூற்று

அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய காட்டு மல்லிகைச் செடியையும், பசியமரலையையும் களைந்தெறியும், காந்தளையே இயற்கை வேலியாகவுடைய, சிற்றூரில் உள்ளவர்கள், உணவின்றிப் பசியால் வாடினால், வீரம் மிகுந்த யானையின் கொம்பை விற்றுப் பெற்ற பொருளால் உணவை வாங்கி உண்ணுவர். அத்தகையோர் வாழும் சிற்றூரில், வல்வில் ஓரியின் கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் மலையைக் குடைந்து செய்யப்பட்ட பாவையைப் போல அழகுடைய பெண் ஒருத்தியைக் கண்டேன். ஆனால், அவளது மூங்கில் போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்.

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே. குறுந்தொகை 244. தோழி கூற்று 

தலைவ! ஊரில் உள்ளவர்கள் பலரும் தூங்கும் இருள் செறிந்த நடுஇரவில், வலிமையான யானையைப் போல் வந்து, நீ இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை, நாங்கள் கேட்காமல் இல்லை; கேட்டோம். தலைக்கொண்டை நெரியவும், தோகை மெலியவும், நல்ல மயில் வலையில் அகப்பட் டதைப் போல், நாங்கள் அசையுந்தோறும், எம் அறமில்லாத தாய் எம்மைத் தழுவினாள். நன்றி

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள்கொல் என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம்போல்
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே
பரத்தை தனக்குப் பாங்காயினார்
கேட்ப நெருங்கிச் சொல்லியது நற்றிணை 320.

துணங்கை விழா முற்றுப்பெற்றது. 
விழாவில் முழக்கிய முழவு 
மாட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. 

என்ன நோக்கத்தோடு 
இவள் தன்னை அழகுபடுத்திக்கொள்கிறாள், 
என்று கேட்கிறாயா? 

(தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்) 

தழை அணிந்த அல்குலை உடைய ஒருத்தி (பரத்தை) 
தெருவில் நடந்து சென்றாள். 

அதற்காக, 
ஊரில் உள்ள மகளிர் அனைவரும் 
தன் கணவனுக்கு வைத்திருக்கும் காவலை 
வலிமை உள்ளதாக சிறப்பித்துக்கொண்டனர். 

அவர்கள் நல்ல மாமைநிறம் கொண்ட மகளிர். 
என்றாலும் தம் கணவன்மாரின் கவனம் 
தம்மிடம் திரும்புமாறு தம்மை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

காரி அரசன் ஓரி அரசனைக் கொன்றுவிட்டு 
தன் பகையாளி ஓரி நகரில் நடந்துசென்றபோது 
ஊரே ‘கல்’ என்று ஆள் நடமாட்டம் இல்லாமல் கிடந்தது போல் 
இந்த ஊரின் நிலைமை ஆயிற்று. 

பரத்தை நடந்து சென்ற தெருவில் 
இந்த நிலைமை. நன்றி

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க – பொரு 164

(சாதிலிங்கம்)ஊட்டின தலைச்சிறகுகள் அலையாட, பிடரி மயிர் அசையப்,

நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 523,524

கருநீல நிறமான முற்றிய தேனின் நிறம் (எங்கும்)பரவியதைப்போன்ற, உயர்ந்த மலையில்
சக்கரம் போன்று ஒழுகும் தேனைத் தன்னிடத்தேகொண்ட தேனடைகளும்,

ஓரி குதிரை ஓரியும் – சிறு 111

ஓரியென்னும் குதிரையையுடைய ஓரியும்;
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164

ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு - சிறு 111

மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை - பெரும் 172

அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்பவும் - பட் 257

நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை - மலை 524

வல் வில் ஓரி கானம் நாறி - நற் 6/9

மழவர் பெருமகன் மா வள் ஓரி
கைவளம் இயைவது ஆயினும் - நற் 52/9,10

மாரி வண் மகிழ் ஓரி கொல்லி - நற் 265/7

ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில் - நற் 320/5

வல் வில் ஓரி கொல்லி குட வரை - குறு 100/5

கைவள் ஓரி கானம் தீண்டி - குறு 199/3

புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் - குறு 229/2

ஓரி முருங்க பீலி சாய - குறு 244/4

ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ - கலி 114/2

நல்கினள் வாழியர் வந்தே ஓரி
பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி - அகம் 208/21,22

ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த - அகம் 209/14

நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து - புறம் 109/7

அடு போர் ஆனா ஆதன் ஓரி
மாரி வண் கொடை காணிய நன்றும் - புறம் 153/4,5

புலவேன் வாழியர் ஓரி விசும்பின் - புறம் 204/12

இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் - கம்.சுந்:2 127/2

ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ - புறம் 152/12

உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும் - கம்.யுத்3:22 198/3

ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு - சிறு 111

கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த - புறம் 158/5,6

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரிக்கு மணி மண்டபம்?

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *