Skip to content
பிண்டி

பிண்டி என்பதுஅசோக(அசோகு, பிண்டி, செயலை) மரம்,

1. சொல் பொருள்

(பெ) அசோக(அசோகு, பிண்டி, செயலை) மரம், பூ, பிண்டி என்பது ஆடற்கலையில் கைகாட்டும் முத்திரைகளில் ஒன்று.

2. சொல் பொருள் விளக்கம்

  1. பிண்டி அசோக மரத்தில் மலரும் மலராகும். இப் பூவினைக் காதில் செருகிக்கொள்வர். சிறிய மரமான இம்மரம் கிளைகள் அனைத்திலும் பூங்கொத்தைக் கொண்டது.
  2. குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று
  3. முருகனை வழிபடும் சூரர மகளிர் பிண்டித் தளிர்களை(அசோக மரத்தின் தளிர்களை) வளைந்த தம் காதுகளில் குழைகளாக அணிந்திருந்ததை, “வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்” என்று திருமுருகாற்றுப்படை- 31 காட்டுகின்றது.
  4. கன்னிப் பெண்கள் நீராடும்போது பிண்டித் தளிர்களை(அசோக மரத்தின் தளிர்களை) செவிகளில் செருகிக் கொண்டதை, “சாய்குழை பிண்டித் தளிர்காதில் தையினாள்” என்று  பரிபாடல்:11-95 காட்டுகின்றது.
  5. பிண்டி செந்நிறமாக இருக்கும, மணம் உடைய, வண்டுகள் மொய்க்கும் மலர். கொம்புகளால் தம்முள் பிணைந்து விளங்கும் அசோகின் சுரும்புகள் ஒலிக்கும்  செந்தீப் போன்ற ஒள்ளிய பூக்கள் மிளிர்கின்ற சோலையைக் காட்டுகின்றது மதுரைக்காஞ்சி:700, 701

சோகத்தை நீக்கும் என்ற பொருளைத் தரும் சொல் அசோகம். சமஸ்கிருதச் சொல்லான அசோகு தமிழகத்துக்கு வந்த பிறகு செயலை, பிண்டி என்ற இரண்டு தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது. அசோகு என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.

பிற்காலத் தமிழகத்தில் ‘செயலை’ என்ற சொல் இந்தத் தாவரத்தைக் குறிப்பதற்குப் பதிலாக நெட்டிலிங்கம் தொடர்பான பாலியால்தியா (Polyalthea) என்ற பேரினத் தாவரங்களைச் சுட்டத் தொடங்கிவிட்டது.

பிண்டி மலர்களைப் பற்றி கூறப்படுபவை,
பல்பூம்                    :  பல மலர்களையுடைய

ஒண்பூம்                 :  ஒளி பொருந்திய

கடிமலர்                   : அதிக மலர்களைக் கொண்ட

பொலம் பூம்          : அழகு, பொன்நிறம்

பூவிரி                       : விரிந்து மலர்ந்த மலர்களையுடைய

எரி நிற நீள்             : சிவந்த நீண்ட மஞ்சரியை உடைய

அணி மலர்                : அழகான மலர் என மலர்களைப் பற்றியும்

இலைகள் பற்றிக் கூறுமிடத்து,
ஒண்தளிர்                 :ஒளி பொருந்திய தளிர் இலை

செந்தளிர்                  :சிவப்பான தளிர் இலை

செங் குழைப்            :சிவப்பான இளம் தளிர்

பிண்டியைப் பற்றிய சங்க இலக்கிய அடைமொழிகள்,
பல்பூம் பிண்டி                    கபிலர்

ஒண்தளிர் பிண்டி                நக்கீரர்சாய்

இழை பிண்டி                நல்லந்துவனார்

ஒண் பூம் பிண்டி                 மாங்குடி மருதனார்

எரிநிற நீள் பிண்டி               கணிமேதாவியார்

கடி மலர்ப் பிண்டி               நல்வழுதியார்

ஒண் பூம் பிண்டி                 கபிலர்

இதர இலக்கிய அடைமொழிகள்

பொலம்பூம் பிண்டி              இளங்கோவடிகள்

கோதை தாழ் பிண்டி            இளங்கோவடிகள்

பூவிரி பிண்டி                 இளங்கோவடிகள்

ஒண்தளிர் பிண்டி                நக்கீரதேவநாயனார்

சேடகப் பிண்டி                      கொங்குவேளீர்

செந்தளிர்ப் பிண்டி               கொங்குவேளீர்

செங்குழைப் பிண்டி             கொங்குவேளீர்

பெருந்தண் பிண்டி               கொங்குவேளீர்

எரிநிறநீள் பிண்டி                 கணிமேதாவியார்

குளிர் பிண்டி                 திருஞானசம்பந்தர்

அரையோடலர் பிண்டி         திருஞானசம்பந்தர்

எரியணிந்தவிளம் பிண்டி     தோலாமொழித் தேவர்

செழும் பிண்டி               தோலாமொழித் தேவ

அணிமலர்ப் பிண்டி              உதயன குமார காவியம்

அணிமலர்ப் பிண்டி              நாதகுமார காவியம்

செந்தளிர்ப் பிண்டி               நாதகுமார காவியம்

சேந்தளிர்ப் பிண்டி               நாதகுமார காவியம்

நறுமலர்ப் பிண்டி                யசோதர காவியம்

கடிமலர்ப் பிண்டி           அமுதசாகரர்

ஓங்கு பிண்டி                திருத்தக்க தேவர்

விரிகொடண்டளிர்ப் பிண்டி    நீலகேசி

பொன்னெயிற் பிண்டி           நீலகேசி

நன்றி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

asoka tree, flower, Saraca indica, Humboldtia brunonis

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

எரிநிற நீள் பிண்டி இணர் – திணை விடு தூது 63

சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ

ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில்

சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று

இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன  – மதுரைக்காஞ்சி 701

யொண்பூம்பிண்டி யவிழ்ந்த காவிற் // 701 // ஒள் பூ பிண்டி அவிழ்ந்த காவின்

அசோக மரக் கூட்டங்கள் தங்களுடைய மலர்களுடன் காலைச் சூரிய ஒளியைப் போன்று திகழ்ந்ததாக மதுரைக் காஞ்சி குறிப்பிட்டுள்ளது.

வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளைகுறிஞ்சிவெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ்கூவிளம்,           65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடிவகுளம், பல்லிணர்க் காயா,                       70
விரி மலர் ஆவிரைவேரல்சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலைமருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்திஅதிரல், பெருந்தண் சண்பகம்,                    75
கரந்தைகுளவி, கடிகமழ் கலிமாத்
தில்லைபாலை, கல்இவர் முல்லை,
குல்லைபிடவம்சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழைதளவம், முள் தாள் தாமரை                           80
ஞாழல்மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதைகொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,                          85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றைபலாசம், பல்பூம்பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,                      90
நந்திநறவம், நறும் புன்னாகம்,
பாரம்பீரம்பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்                   95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ (61-98)
– குறிஞ்சிப்பாட்டு

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்பத் திண் காழ்திருமுருகாற்றுப்படை 31

நலம் பெறு சென்னி, நாம் உற மிலைச்சி,	
பைங் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி	
அம் தொடை ஒரு காழ் வளைஇ, செந் தீ	
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 119

வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்- 11:94-98. – பரி 11/95

கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி
அடிமேல் அடிமேல் ஒதுங்கி தொடி முன்கைக் 12:88-90.– பரி 12/88

ஒருசார்அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி
மணி நிறம் கொண்ட மலை  - 1:7-9. பரிபாடல் திரட்டு

பழமொழி நானூறு

பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.        - தற்சிறப்புப் பாயிரம்.

 கைந்நிலை
பிடவம் குருந்தொடு பிண்டி மலர,
மடவ மயில் கூவ மந்தி மா கூர
தட மலர்க் கோதையாய்!-தங்கார் வருவர்,
இடபம் எனக் கொண்டு, தாம். - 36

திணை மாலை நூற்றைம்பது
எரிநிற நீள் பிண்டி இணர் எல்லம்
வரிநிற நீள் வண்டர் பாட   - 63:1-2  - கணிமேதாவியார்
எரிநிறநீள் பிண்டி யிணரின மெல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர்முலையாய்! பூந்தொடித்தோ
ளென்னணிந்த வீடில் பசப்பு.

கம்பராமாயணம்

ஏலக் கோடு ஈன்ற பிண்டி இளந் தளிர் கிடக்க; யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங்  கமல மென் பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும் என்றால், கைக்கு ஒப்புவைக்கலாமோ-4598:46.
                                              - கிட்கிந்தா காண்டம். - நாட விட்ட படலம்.

பின்னங்கள் உகிரிற் செய்து பிண்டி அம் தளிர் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பித்,     தேன் மலர் கொய்கின்றாரும் :
வன்னங்கள் பலவும் தோன்ற      மணி ஒளிர் மலையில் நில்லா
அன்னங்கள் புகுந்த என்ன,      அகன் சுனை குடைகின்றாரும்.    - 951:54
                                           - பால காண்டம். - வரைக்காட்சிப் படலம்.

சிலப்பதிகாரம்

காவிரிப் படப்பைப் பட்டினம் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் மேல் இருந்து அருளி  -  15:151-154.
                                              - மதுரைக்காண்டம் -  அடைக்கலக் காதை.

கோதை தாழ்பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதி இல் தோற்றத்து அறிவினை வணங்கிக் -11:3,4.
                                          - மதுரைக்காண்டம் -காடுகாண் காதை.


பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர் அணி விழவினம் நெடும்தேர் விழவினும்  -  10:21,22.
                                        -  புகார்க்காண்டம்.  - நாடுகாண் காதை.

சீவகசிந்தாமணி
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே  - 149.
                     - நாமகள் இலம்பகம்  - கோயிற் சிறப்பு.

தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே  - 223.
                                        - சச்சந்தன் வரலாறு  -- நாமகள் இலம்பகம்.

 சூளாமணி
எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
 இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது

காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று  திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே 
 கைகளும் இடைகளும்


பல பூக்கள் சேர்ந்த கொத்தாக இது காணப்படும்.

பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 88

பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய அசோகப்பூ,

பல்பூம் பிண்டி

ஓங்கு பிண்டியின் செம்மலரேறி வண்டுழிதர மாவேறித் தீங்குயில் மிழற்றும் - பெரிய திருமொழி:5-3-9.

உயர்ந்து வளர்கின்ற அசோக மரத்தினுடைய சிவந்த மலர்களின் மேலே வண்டுகள் ஏறி (மலர்களை நெருப்பென்று மயங்கி) ஒதுங்கித் திரியும் (சில நேரங்களில் அம்மயக்கம் நீங்கி மலர்களே என்று துணிந்து மது உண்ணச் செல்லும்). மாமரங்களின் மேலே உள்ள குயில்கள் இதைக் கண்டு (அந்தோ, இவ்வண்டுகள் நெருப்பினில் அகப்பட்டனவே என்று) கூவும் கொடித் தோட்டங்கள் உள்ள திருவெள்ளறைத் தலம்

ஊட்டி அன்ன ஒண்டளிர் செயலை - அகநானூறு 68:5

அழல்ஏர் செயலை அம் தளிர்" - அகநானூறு 188:11

அந்தச் செயலைத் துப்பு உறழ் ஒண்டளிர்" - ஐங்குறுநூறு 273

இந்த மரத்தின் அடியில்தான், வர்த்தமான மகாவீரர் கடவுள் நிலையை அடைந்தார். அருகனின் பூ, பிண்டிப்பூ ("அசோகுடை செல்வன் அருகன்"). சாக்கியமுனி அசோக மரத்தடியில்தான் பிறந்தார் என்று கருதப்படுவதால் புத்த மதத்தினரும் இம்மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றனர்.

பார்க்க : அசோகம்

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்(கு)
ஆடலும், பாடலும், பாணியும்,தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை
பிண்டியும், பிணையலும், எழிற்கையும், தொழிற்கையும்,
கொண்டவகை அறிந்து, கூத்துவரு காலை
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்,
வாரம் செய்தகை கூடையில் களைதலும்,
பிண்டி செய்தகை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்தகை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்
பிண்டி மர நிழலில் இருந்துகொண்டு 
இருவினை நீங்கும் பெற்றி உரைத்த
பெரியர்க்கும் பெரியன்  156	

அரிய வாயின செய்திட்டமரர் துந்துபி யறைந்து
புரிய பூமழை பொழியப்பொன்னெயில மண்டிலம் புதைந்த
விரிகொ டண்டளிர்ப் பிண்டிமரநிழ லிருந்திரு வினையும்
பிரியும் பெற்றியை யுரைத்தாய்பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய்.

பிண்டி நாதன் பெருமையில் மகிழ்ச்சி காண்டல் அறிவாகும்

உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்
அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.

இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன்
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி...

செந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செழுமணி மண்டபத்துஉள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்துஅரிஆசனத்தின்
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள்புரிதீர்த்த காலம்
கொந்தலராசன் நாக குமரன்நல் கதை விரிப்பாம்.

மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்
இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே.

கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணருங் கண்டன் மலை.

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும்,
பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே,
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே	3.9

பொங்கு போதியும் பிண்டியும் உடை புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,
அங்கண் நாயகற்கு இன்று அடிமைத்தொழில் பூண்டாயே.
பிண்டி
பிண்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *